இலங்கையில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (எல்.டி.டி.ஈ) புத்துயிர் அளிக்கத் திட்டமிட்ட இலங்கைப் பிரஜைகள் தொடர்பான வழக்கு சம்பந்தமாக, கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) ஒரு அதிகாரிகள் குழு கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 6) சென்னை வந்தது. அக்குழுவின் அதிகாரிகள், வடசென்னையில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில், 10 கிலோ கஞ்சா, 1000 சிங்கப்பூர் டாலர்கள், ரூ.69 லட்சம் கணக்கில் வராத பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை பர்மா பஜாரில் உள்ள முக்கிய சந்தேக நபரான முகமது இலியாஸின் கடையில் இருந்து கணக்கில் வராத ரூ. 69 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. என்.ஐ.ஏ குழுவினர் அவரது வீட்டில் சோதனை நடத்தி 10 கிலோ கஞ்சா, 300 கிராம் தங்கம் மற்றும் 1,000 சிங்கப்பூர் டாலர்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, முகமது இலியாஸ் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, கடந்த டிசம்பர் 2022ல், திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து ஒன்பது பேரை என்.ஐ.ஏ கைது செய்தது. இவர்கள் அனைவரும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஹாஜி சலீமுடன் கைகோர்த்து, மார்ச் 2021ல் கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு அருகில் நடந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது. 300 கிலோ ஹெராயின் கொண்ட அந்த படகை இடைமறித்தன. சோதனையின்போது, அந்த படகில் போதை மருந்தைத் தவிர, ஏகே 47 ரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 1,000 ரவுண்டுகள் 9மி.மீ தோட்டாக்களும் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், இவர்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுத கடத்தல் மூலம் எல்.டி.டி.இ பயங்கரவாத அமைப்புக்கு புத்துயிர் அளிக்க முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.