செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் ஐ.டி. சோதனை

ரூர் மாவட்டத்தில், மே, 26 முதல், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.கடந்த, 26ல் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள, அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்த சென்ற, வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி, தி.மு..,வினர் விரட்டிஅடித்தனர்.

இதனால் சோதனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மே, 30ல் கரூர் ஆண்டாங்கோவில் வருமான வரித்துறை அலுவலகத்தில் அசோக்குமார் ஆஜராக, அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.உடல் நிலையை காரணம் காட்டி, வருமான வரித்துறை அலுவலகத்தில் அசோக்குமார் ஆஜராகவில்லை. இதற்கிடையே, நேற்று மதியம், 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், அசோக்குமார் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு, 25க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அசோக்குமாருக்கு மிகவும் நெருக்கமான, அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்தின் அலுவலகம், கரூர் செங்குந்தபுரத்தில் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள், ‘சீல்வைத்துள்ளனர்.இந்நிலையில், கரூர் அருகே மாயனுார் எழுதியாம்பட்டியில் உள்ள, சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் நேற்று காலை, வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர்.

கரூர், காந்தி நகர் பழனியப்பா தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள, அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்தின் வீட்டிலும் சோதனை நடந்தது.கரூர் ராயனுாரில் உள்ள, செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரின் நெருங்கிய நண்பரும், கொங்கு மெஸ் உரிமையாளருமான சுப்ரமணியத்தின் வீடு, கரூர் லாரி மேடு தெருவில் உள்ள, வக்கீல் செங்கோட்டையன் அலுவலகம் ஆகியவற்றிலும், நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.மேலும், கரூர் அருகே கொங்கு மெஸ்ஸில் வைக்கப்பட்ட சீலை அகற்றி, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .