வடகிழக்கு பருவமழை மற்றும் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், தென்னேரி உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர், கால்வாய் வாயிலாக நீஞ்சல் மடுவு அணைக்கட்டுக்கு வந்தடைந்தது.
திம்மாவரம் ஊராட்சி, மஹாலட்சுமி நகரில் உள்ள கால்வாய் பகுதியில் கரைக்கு மேல் தண்ணீர் அதிகமாக சென்றதால், குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழந்துள்ளது.
திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஊராட்சி, செங்கண்மால் கிராமத்தில் ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. இதில் 1,100 தனித்தனி வீடுகள் உள்ளன. இங்கு, தையூர் பெரிய ஏரி உபரிநீர் வெளியேறி, ஓ.எம்.ஆர்., சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில், செங்கண்மால் ஓ.எம்.ஆர்., சாலை ஒட்டியுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு தரைத்தளம் பகுதிகள் முழுவதுமாக மழைநீர் சூழ்ந்து தனி தீவாக மாறியுள்ளது.
மதுராந்தகம் அடுத்த, பூதுாரைச் சேர்ந்த யாதேஷ், 20 மற்றும் அதே ஊரைச் சேர்ந்த நண்பர் ஆனந்தும், நேற்று வல்லிபுரம் பாலாற்று தடுப்பணையில் குளித்த போது, நீர்ச்சுழலில் இருவரும் சிக்கினர். அங்கிருந்தவர்கள் ஆனந்தை மீட்டனர்; யாதேஷ் மாயமானார்.
சித்தாமூர் அருகே விளாங்காடு ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், வெடால் அருகே உபரிநீர் கால்வாயை கடக்கும் தரைப்பாலத்தில் போதிய தண்ணீர் செல்லாமல், கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது.
நந்திவரம் – -கூடுவாஞ்சேரி நகராட்சி, அருள்நகர், ஜெகதீஷ் நகர் பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் உள்ள மழைநீர் வடிகால்வாயில், அதிகமாக தண்ணீர் சென்றதால், பாலம் உடைந்து விழுந்தது. செங்கண்மாலில் பள்ளம் இருப்பது தெரியாமல், லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரி ஓட்டுனர் உயிர் தப்பினார்.
பாலாற்றில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தால், வாயலுார் தடுப்பணையில், வினாடிக்கு 36,000 கன அடி உபரிநீர் கடலுக்கு செல்கிறது.
செய்யூர் அருகே வெடால் கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்த பொன்னம்மாள், 85, என்பவரது வீடு, கனமழை காரணமாக இடிந்து விழுந்து சேதமடைந்தது.