நம் பிரதமர் ஜூலை 21 அன்று தில்லியின் பாரத் மண்டபத்தில் உலகப் பாரம்பரிய கண்காட்சியின் துவக்க விழாவில் ” பாரதம் மிகவும் பழமையானது, நிகழ்காலத்தின் ஒவ்வொரு வெளிப்பாடும் ஏதோ ஒருவிதத்தில் புகழ் பெற்ற கடந்த காலத்தின் வரலாற்றைச் சொல்கிறது” என்று தன் உரையைத் தொடங்கினார்.
மைதம் என்ற அஸ்ஸாமின் சரைதேவ் மாவட்டத்தின் ஊர்,- வடகிழக்கு மாநிலங்களிலிருந்து முதலாவதாகவும் – பாரதத்தின் 47ஆவதாகவும் – உலகப் பாரம்பரிய தலம் என்ற வரிசையில் சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளதற்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
“பாரதத்தின் வரலாறும் நாகரிகமும் அவற்றைப் பற்றிய பொதுவான புரிதலைக் காட்டிலும் ஆழமானது; பரந்து விரிந்தது….பாரத பாரம்பரியம் ஒரு வரலாறு மட்டுமல்ல, அறிவிலும் ஆகும் ” என்று தொடர்ந்தார்.
சான்றாக, குஜராத்தின் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகளுக்குப் புகழ் பெற்ற பொது ஆண்டு 3000 வரை பழமையான தோலாவிராவும் தெருக்கள் மற்றும் வடிகால்களின் விரிவான வலையமைப்பிற்கான அற்புதமான திட்டமிடலுக்கும் பெருமை பெற்ற லோதல் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும் கட்டிட- சிற்பக்கலைக்கு தஞ்சைப் பெருவுடையார் கோயில், இடிபாடுகளுடன் இன்று நின்றாலும் கம்பீரமான தன் முந்தைய காலத்தை சுட்டிக் காட்டும் ஹம்பி போன்ற பல உதாரணங்களை எடுத்துக் காட்டினார்.
பாரம்பரியம் என்ற சொல்லுக்கு’ தொன்று தொட்டு இடையறாமல் போற்றப்படும் விழுமியங்கள் -கடைபிடிக்கப்படும் பண்புகள் பழக்கங்கள்- இவற்றின் மீது மரியாதை – ஆர்வம்- இயன்றவரை கால தேச மாறுதல்களை பற்றிய புரிதலுடன் கடைபிடித்தல் ‘ என்று சுருக்கமாக புரிந்து கொள்ளலாம். முன்னோரின் நல்வாக்குகளை செயல்களை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றால் நாடும் சமுதாயச் சூழலும் அந்த வாய்ப்பை ஆதரிக்கும் விதமாய் – குறைந்தது இடையூறு ஏற்படுத்தாமல் – இருக்க வேண்டும். அதற்கு அந்த நாடு சுதந்திரத்துடன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் அல்லவா? சுதந்திரம் என்றால் அரசியல் விடுதலை மட்டுமல்ல.
சிந்தனாமுறை எதிர்காலத்தைப் பற்றிய கனவு, அணுகுமுறை, கொள்கை முடிவு, செயல் திட்டம், வழிகாட்டி நெறிகள், ஆய்ந்து தேர்ந்து முடிவெடுத்து அதன்படி நடக்கும் தன்னுரிமை, உரிமையின் இணைபிரியா உடன்பிறப்பான கடமை, தற்சார்பு, இவற்றைப் பற்றிய புரிதல் எல்லாம் உண்டாக இன்றைய இளம் தலைமுறைக்கு பாரதத்தின் புராதன வரலாறு தெரிய வேண்டும். உதாரணமாக, சென்ற மாத ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்ட ‘வட கிழக்கு மாநிலங்களில் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேல் தன்னாட்சி நடத்திய அஹோம் பேரரசு ‘போன்றவற்றை அறிந்து கொள்ள தேசிய கல்வி கொள்கை தேவை.
விடுதலை வேட்கையும் விழிப்புணர்வும் வீரமும் தான் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.