தஞ்சை விமானப்படை தளத்தில், ‘சுகோய் – 30’ ரக போர் விமானங்கள் சேர்க்கப்பட்டன. ”இவை, இந்திய பெருங்கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும்,” என, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.
தஞ்சை விமானப்படை தளம், 1940ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1945 வரை நடந்த, இரண்டாம் உலகப் போரின் போது, இங்கிலாந்து விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள், இங்கிருந்து இயக்கப்பட்டன.சோதனைஅதன்பின், செயல்பாடுகள் இன்றி முடங்கி போனது. சுதந்திரத்திற்கு பின், மீண்டும் சீரமைத்து, சிறிய பயணியர் விமானம் இயக்கப்பட்டது. 1988ல், சென்னைக்கு சிறிய ரக விமானம் இயக்கப்பட்டது. பயணியர் வருகை குறையவே, அச்சேவையும் நாளடைவில் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில், தென் மாநிலங்களின் பாதுகாப்பு, குறிப்பாக, அண்டை நாடுகள் மூலம் நமக்கு பாதுகாப்பில் பிரச்னை ஏற்படும்போது, அவற்றை உடனடியாக சமாளிக்க, தஞ்சை விமானப்படை தளத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள, ‘சுகோய்’ ரக போர் விமானங்களை இங்கிருந்து இயக்குவதற்கு தேவையான பணிகள், சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டன. கடந்த, 2013ம் ஆண்டு, தஞ்சை விமானப்படை தளத்தை, அப்போதைய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தரம் உயர்த்தினார். தொடர்ந்து, சுகோய் விமானங்கள் மூலம், போர் விமானிகளுக்கு பயிற்சியையும் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, 2019, மே, 22ல், சுகோய் – 30 ரக போர் விமானத்தில் இருந்து, தரை இலக்கை நோக்கி பிரம்மோஸ் ஏவுகணை வீசும் சோதனை, வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த விமானங்கள், கிழக்கு கடற்கரை பகுதியின் பாதுகாப்பை முக்கிய பணியாக கொண்டு செயல்படும். பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்கும், இந்த விமானப்படை தளம் பேருதவியாக இருக்கும். போர் அணிவகுப்புஇந்நிலையில், தஞ்சை விமானப்படை தளத்தில், பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட, ஆறு சுகோய் – 30 ரக போர் விமானங்களை, நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நேற்று நடந்தது.இதன் செயல்பாடுகளை, முப்படைகளின் தலைமை தளபதியான, ஜெனரல் பிபின் ராவத் தொடங்கி வைத்தார். விமானப் படை தலைமை தளபதி பதோரியா உட்பட, பலர் கலந்து கொண்டார்.அப்போது, சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகச நிகழ்ச்சி, சூரிய கிரண் எனப்படும் விமானங்களின் போர் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
முன்னதாக, சுகோய் – 30 ரக போர் விமானம், விமானப்படை தளத்துக்கு வந்தபோது, அதற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பேசியதாவது: முப்படைகளுடன், இந்த படைப் பிரிவை இணைப்பதால், எதிர்காலத்தில் மிகவும் பலம் வாய்ந்ததாக மாறும். பாதுகாப்பு துறையில் இது மிகப் பெரிய மாற்றம். முதல் முறையாக, பிரம்மோஸ் ஏவுகணை இந்த விமானத்தில் பொருத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த முயற்சி நடந்து, தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.
பின், அவர் அளித்த பேட்டி: இந்திய பெருங்கடல் அருகில் உள்ளதால், தஞ்சை விமானப்படை தளம் முக்கியத்துவம் பெற்றது. பாதுகாப்பு நோக்கில், கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்கு, ஒவ்வொரு நாட்டுக்கும், சுதந்திரம் உள்ளது.குறிப்பாக, வணிக இயக்கம் நடைபெறும் கடல் வழியில், கொள்ளையர்களின் ஆதிக்கத்தைத் தடுக்க, கண்காணிப்பு செய்வது இயல்பானது. நம் படைப் பிரிவை, நாம் தரம் உயர்த்தியாக வேண்டும் என்பதால், தஞ்சாவூரில் இந்த படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இதில் அதிகளவு வீரர்கள் சேர்க்கப்பட்டு, படைப் பிரிவு விரிவுப்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.