பிஹாரில் சீதாமர்ஹி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்ட கோயிலை கட்டும். சீதா தேவிக்கு கோயில் கட்ட, நரேந்திர மோடி மற்றும் பாஜக.,வால் மட்டுமே முடியும். நாங்கள் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படுவதில்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோயிலை கட்டியவர் பிரதமர் மோடி. தற்போது, சீதை பிறந்த இடத்தில் மிகப் பெரிய கோவில் கட்டும் பணிதான் எஞ்சியிருக்கிறது. ராமர் கோவிலுக்குச் செல்லாமல், ஒதுங்கியவர்களால் (எதிர்க்கட்சிகள்) நிச்சயமாக சீதா தேவிக்கு கோயில் கட்ட முடியாது. ஆனால் சீதையின் வாழ்க்கையைப் போல ஒரு கோயிலை யாராவது கட்ட முடியும் என்றால், அது நரேந்திர மோடி மற்றும் பாஜகவால்தான் முடியும்.
அதிகார அரசியலுக்காக, தனது மகனை முதல்வராக்க லாலு பிரசாத் யாதவ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார். பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது பற்றி காங்கிரஸும், ஆர்ஜேடியும் ஒருபோதும் நினைக்கவில்லை. மோடி அரசுதான் அதை செய்தது. பிஹாருக்கு வளர்ச்சி அரசியல்தான் தேவை, காட்டுராஜ்ஜியம் அல்ல” என தெரிவித்தார்.
இந்து சாஸ்திரங்களின்படி, ராமரின் மனைவியான சீதை, ராஜா ஜனகர் சீதாமர்ஹிக்கு அருகில் வயலில் உழுது கொண்டிருந்தபோது, ஒரு மண் பானையிலிருந்து உயிர்பெற்றார். அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்து சில மாதங்கள் ஆகி உள்ள நிலையில், தற்போது சீதா தேவி கோயில் தொடர்பாக அமித் ஷா பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிஹாரில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பிஹாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.