சிறுவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படம். மாணவனுக்கு ஆசிரியர் உயர்ந்த நம்பிக்கையை சிந்தனையை போதிப்பதாகச் சொல்லி அந்த மாணவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது சரவணன் IAS என்று சொல்லுகிறான். இது பெற்றோருக்கும் மற்றோருக்கும் புளங்காகிதம் ஏற்படுத்தலாம். ஆனால் இது இரண்டு மோசமான செய்திகளை சமுதாயத்துக்குச் சொல்லுகிறது.
IAS என்றால் ‘கொம்பு’ மற்றபடி வேலை எல்லாம் வெறும் ‘சொம்பு’ என்ற செய்தியையும், அந்த மாணவன் எதிர்காலத்தில் IAS தேடுதலைத் தவிர வேறு ஒன்றையும் செய்யாமல் ‘‘வீணாகிப் போகும்’’ அவலம் உண்டாகுதலையும் சொல்கிறது. IAS உள்ளிட்ட அரசு சம்பந்தமான வேலைகளே ‘‘சமூக செருக்கு’’, அதுதான் ஒரு கெத்து என்பது தொடர்ந்து நிலவி வரும் பரப்பிவரும் நம்பிக்கைகள், பிரச்சாரங்கள். இதன்மூலம் 6 முதல் 8 ஆண்டுகள் தன் இளமையை விரயம் செய்துவிட்டு பரிட்சையில் வெற்றி கிடைக்காவிட்டால் ‘‘உலகே மாயம்’’ பிராண்ட் இளைய பட்டாளம் வருவதுதான் தொடர்கிறது.
இவ்வளவு பெரிய முன்னோட்டத்திற்கு காரணம் தற்போது மத்திய அரசின் UPSC தேர்வுகளில் வெற்றி கிட்டாதவர்கள் மாநில அரசின் TNPSC தேர்வுகளில் ‘‘எப்படியாவது வெற்றி’’ பெற்றுவிட வேண்டும் என்று எத்தனிக்கும் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட ‘‘மாபெரும் – தமிழ்நாடு புரோக்கர் சர்வீஸ் கமிஷன்’’ ஊழல்கள் தற்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
இதில் இரண்டு விஷயங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. ஒன்று சினிமாவை விஞ்சும் முறையில் ஸ்கீம் போட்டு பரீட்சை, மார்க், திருத்துதல் நடைபெற்றிருக்கிறது. இரண்டு குரூப் 4 சர்வீசுக்கு கூட‘‘என்ன விலையும்’’ கொடுக்கத் தயார் என ‘‘பரீட்சை எழுதுபவர்கள்’’ முன் வந்திருக்கிறார்கள் என்கிற அவலம் வெளிப்பட்டிருக்கிறது.
வேலியே பயிரை மேய்வது யுகயுகமாக உள்ளதுதான். ஆனாலும் அன்று அவை விதிவிலக்குகள். இன்று அவைகள் விதியாகிவிட்டன!
விஷயம் இதுதான். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் குரூப் 4 வேலைகளுக்கான தேர்வில் சினிமாவை மிஞ்சும் வகையில் ஊழல் நடந்தது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. நான் காட்சிகளை விவரித்துக் கொண்டே வந்தால் அது ‘‘ஜூனியர் விகடன்’’ பார்ப்பது போலாகிவிடும் என்பதால் ‘‘ஹைலைட்டுகளை’’ மட்டும் விளக்கிவிடுகிறேன். ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களை மட்டுமே தன்னுடைய கஸ்டமருக்காக ஜெயக்குமார் என்ற ‘‘கிங்பின்’’ தெரிவு செய்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சி குற்றம் செய்ய துணைபுரிகிறது. சீக்கிரம் மறையும் ‘‘மாஜிக் இங் பேனா’’ 12 முதல் 15 லட்சம் பணம் கொடுத்த தேர்வருக்கு பரிட்சை ஹாலில் பரீட்சை எழுத கொடுக்கப்படுகிறது.
எழுதி முடித்த விடைத்தாள்கள் வாகனத்தில் ஏற்றி வரும் வழியில் சினிமா பாணியில் ‘‘வேண்டியவர்களுக்கு” விடை எழுதப்படுகிறது. இதற்கு ஓம்காந்தன் என்னும் TNPSC ஊழியர் உதவுகிறார். இதற்கு துணைபுரிந்த சிவகங்கை போலீஸ் சித்தாண்டி தன் குடும்பத்தில் மனைவி உட்பட 4 பேருக்கு GROUP 2, GROUP 4 ல் வேலை கிடைக்கப் பெறுகிறார்.
இந்த வெளியே வந்ததற்கு காரணமே மேற்சொன்ன கீழக்கரை ராமேஸ்வரம் சென்டர்களில் எழுதியவர்கள்தான் முதல் 99 ரேங்க் களை வாங்கி இருப்பதுதான். இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிரவைக்கிறது. ‘முதல் ரேங்க்’ வாங்கியவர் 7 முறை எழுதி தோற்றுப்போன ஆடு மேய்க்கும் விவசாயி. 2,3, ரேங்க் பெற்றவர்களுக்கு திருக்குறளிலிருந்து ஒரு குறள் கூட தெரியவில்லை.
இதுமாதிரி ஊழல் முதல் முறையாக தற்போது தான் நடந்திருக்கிறதா என்றால் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த 6 பரீட்சைகளிலும் ஊழல் நடந்திருப்பதாக ‘‘விசாரணையை முடுக்கி விட்ட
போது’’ உண்மை கொட்டத்து வங்கியுள்ளது.
எதற்காக இந்தக் குறுக்கு வழி? அரசு வேலை என்றால் வேலை உத்தரவாதம் – கேட்க ஆளில்லை. முதலீடு செய்த லஞ்சத்தை திரும்ப எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கைகள்தான்.
அதற்காக இதுவரை கஷ்டப்பட்டுபடித்து நேர்மையாக எழுதியவர்கள் எல்லாம் முட்டாள்களா?
அப்படித்தான் குறுக்கு வழியில் வெற்றி பெறுபவர்கள் நினைக்கிறார்கள்.
ஆளும் கட்சிக்காரர்கள், ஏற்கனவே இந்த பதவிகளில் இருந்து கொண்டு அதன் சுகத்தை தங்களது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் வாங்கித் தர துடிப்பவர்கள்.
பணத்தின் மூலம் அதிகாரத்தை விலைபேசும் சிலர்; சொத்துபத்திரங்களையும் நகைநட்டையும் விற்றாவது இந்த வேலையை பெற்று விட்டால் பின்னால் லஞ்சம் பெற்று அவைகளை அடைத்துவிடலாம் என நம்பிப் பலர் – இந்த வேலைக்காக அலைகிறார்கள். இதை பெற்றுத் தருவது எங்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல என விளம்பரப்படுத்தி ஏராளமானவர்களை சேர்த்து, TNPSC ஊழியர்களோடு அண்ட் கோ போட்டு பணம் பண்ணும் ‘பயிற்சி மையங்கள்’ வேறு.
இப்படி மாபாதகர்களுக்கு நடுவே நன்றாக படிக்கும் சாமானியனுக்கு எங்கே வேலை கிடைக்கப்போகிறது? அவன் வாழ்க்கை இலவுகாத்த கிளியாகத்தான் ஆகும்.
இதற்குத் தீர்வுதான் என்ன? ஒரு ஒரு சிஸ்டத்தையும் முழு பூரண சுத்தமாகவும் ஊழலற்றதாகவும் கொண்டு வரமுடியாது. சரி, அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் இந்த கட்டுரையே வேண்டாமே?
நான் சொல்ல வந்தது 100 சுத்தம்தான் முடியாது, முடிந்த வரை சுத்தப்படுத்தலாம். இப்போதுள்ள அசுத்தத்தை களைய வேண்டி
யது உடனடி அவசியம்!’
அந்த வகையில் மத்திய அரசால் நடத்தப்படும் UPSC பரிட்சை கிட்டத்தட்ட சுத்தமான அதாவது ஊழலோ, முறைகேடோ இல்லாமல் இருக்கிறது. இதில் மோடியின் பாஜக அரசு ‘‘பயிற்சி மையங்களின் ஆதிக்கத்தையும் இடைத்தரகர்களையும்’’ அடியோடு ஒழித்துவிட்டது. !
இந்தியாவிலுள்ள மாநில அரசுகள் நடத்தும் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் ஒன்றுக்கொன்று ஊழலில் போட்டி போடுவது வேதனையான செய்தி.
தற்போது அச்சிடப்படும் கேள்வித் தாள்கள், விடைத்தாள்கள் தனியார் அச்சகத் திடமும் ஏஜன்ஸி வசமும் உள்ளது. இது மாற்றப்படவேண்டும்!
நேர்காணலுக்கு வரும் எக்ஸாமினர்கள் யார் யார் என்பது பற்றிய ரகசியம் காக்கப்பட வேண்டும்.
ஒரு பேனாவிற்கு மேல் அனுமதிக்கக் கூடாது.
‘‘பயிற்சி மையங்களை’’ அரசே நடத்தவேண்டும்.
இடைத்தரகர்கள் பிடிபட்டால் தண்டனைகடுமையாக்கப்படவேண்டும்.
ஆலோசனைகள் சொல்லுவது எல்லாம் எளிதுதான், ஆனால் செயல்படுத்துவது மிகவும் கடினம். ஏனெனில் இதில் குற்றம் புரிபவர்களுக்கு துணைபோவோர் ‘‘மேலிடத் தரகர்கள்’’. இருந்தாலும் சொல்லுவதை சொல்லி வைக்கிறேன். நடப்பது நாராயணன் செயல்.