சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி கொள்கை குறித்த மாநாடு

திறன் மேம்பாட்டு பயிற்சியில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது என்று பல்கலைக்கழக நிதி நல்கை குழுத் தலைவர் எம்.ஜகதீஷ் குமார் கூறினார். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென் மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில்பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: உயர் கல்வியில் தமிழ்நாடுசிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டில்தான் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட மிக உயரிய பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இதேபோல சென்னை ஐஐடி உள்ளிட்ட மிகச் சிறந்த மத்தியகல்வி நிறுவனங்களும் இங்குதான் இருக்கின்றன. இதன் மூலம், தமிழ்நாட்டில் மிகச் சிறந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு, திறமையான மனித வளம் உருவாக்கப்படுவதால், தொழில் ரீதியாகவும் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் காரணமாக இந்தியப் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாட்டின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.

ஆனால், உலக அளவில் கல்வித் துறை போட்டி நிறைந்ததாக உள்ளது. எனவே உலகளாவிய பல்கலைக்கழகங்களின் தரத்துக்கு இணையாக நம்முடைய கல்வி நிறுவனங்களின் தரத்தையும் மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் சிறந்த திறனைப் பெறும் வகையில் நம்முடைய கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த ஓராண்டாக முழு வீச்சில்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மண்டல வாரியாக மொத்தம் 5 மண்டலங்களில் துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.

ஏற்கெனவே மேற்கு, வடக்கு மண்டலங்களில் மாநாடு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மூன்றாவதாகத் தஞ்சாவூரில் தென் மண்டல மாநாடு நடத்தப்படுகிறது. இதில் 200-க்கும் அதிகமான துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாணவர்களுக்கு சுதந்திரம், நெகிழ்வுத்தன்மை, வாய்ப்புகள் போன்றவற்றை வழங்கும் விதமாக இந்தத் தேசிய கல்விக் கொள்கை உள்ளது. நம்முடைய கல்வி நிறுவனங்கள் மிகச் சிறந்தமாணவர்களை உருவாக்க வேண்டும். கல்வி நிறுவனங்களும், கல்வியாளர்களும் கற்பித்தல் திறனை மேம்படுத்திக் கொண்டு மிகச்சிறந்த மாணவர்களை உருவாக்க முன்வர வேண்டும். இதன் மூலம் சமூகத்தில் சிறந்த மாற்றத்தை உருவாக்க முடியும் என்றார் ஜகதீஷ் குமார். மாநாட்டில் தேசிய தொழிற் கல்வி,பயிற்சி குழுத் தலைவர் நிர்மல் ஜித் சிங் கால்சி, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர்எஸ்.வைத்திய சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.