சவாலை துணிவுடன் சந்தி, வாழ்க்கை இனிக்கும்

மிளிரும் புத்தொளி தொடரில் 5வது பேட்டி. திருமதி பத்மினி ராஜன், சென்னையில் பிறந்து கனடாவில் வாழும் பெண்மணி. பணி புரிந்த அனுபவமும் உண்டு – தொழில் முனைவோராக சவால்களை வென்று சாதனை புரிந்த அனுபவமும் உண்டு. அனைத்துக்கும் மேலாய் இளைய தலைமுறைக்கு நம்பிக்கை, பொது நலம், தொண்டு புரியும் ஆவல் இவற்றைக் கொண்டு சேர்ப்பவர். கொரானா சமயத்தில் நம் நாட்டில் நீண்ட விடுமுறையில் தங்கியிருப்பவருடன் விஜயபாரதம் சார்பாக உரையாடுபவர் எம் ஆர் ஜம்புநாதன். பேட்டி இரண்டு பகுதிகளாக இன்றும் நாளையும் வெளி வரும்.

உங்கள் பள்ளிக்கூடகல்லூரி சாதனைகள்!

ஓரளவு வசதியான குடும்பம் தான் எங்களுடையது.  பொதுவாவே கொஞ்சம் சுறுசுறுப்புடனும், கொஞ்சம் தைரியம் கொண்ட பெண்ணாவாகவே இருந்தேன். யாராவது முடியாது என்று  சொன்னால் போதும், அதை உடனே முடியும் என்று காட்டிவிட  கூடிய தன்னம்பிக்கை இருந்தது. பள்ளி நாட்கள் முதலாகவே விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் உண்டு.   மாவட்ட அளவில் தடகள போட்டிக்கு என்னை தேர்ந்தெடுத்து மாநில அளவில் தயார் படுத்தினார்கள், தேசிய மாணவர் படையில் சார்ஜன்ட்டாக ( Sergeant ) இருந்தேன் தமிழ்நாடு  கபடி கைப்பந்து அணிகளில் உறுப்பினர்.    அதனாலே  பள்ளி – கல்லூரியில் நான் ஒரு செல்ல பிள்ளை.

ஒரு சமயம் இன்று நினைத்தால் சிரிப்பு  வரும். அன்று தேசிய படையில் கடைசி நாள் தேர்வுக்கான போட்டி. அதில் நடை வகுப்பு , தட கள ஓட்டம், துப்பாக்கி சுடும் போட்டி என்று பல போட்டிகள், டெல்லி சென்று குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள வேண்டுமானால் அந்த அடிப்படைத் தேர்வில் கட்டாயம் கலந்து கொண்டேயாக வேண்டும்.. அன்று வழக்கம் போல் காலை 6.00 மணிக்கு நானும், தோழியும் பேருந்துக்காக காத்துகொண்டு இருந்தோம். பேருந்தும் வருவதாக தெரியவில்லை. மணி 6.30 ஆகியும் விட்டது, அந்த வழியே போனவர், இன்று பேருந்து வராது, அரசாங்க வேலைநிறுத்தம் என்று சொல்லி கொண்டு போனார். அதை கேட்டு இன்னும் பதற்றம் ஏறிவிட என்ன செய்வது என்று புரியவில்லை.

அந்த வழியாக லாரி ஒன்று போனது, நான் உடனே கை காட்டி நிறுத்தி எங்களை பச்சையப்பா கல்லூரி மைதானத்தில் கொண்டு விட முடியுமா என்று கேட்க, ஓட்டுநரும் சரி ஏறி கொள்ளுங்கள் என்று சொல்ல, பயந்து போன தோழியும் பலவந்தமாக ஏற்றி ஒருவழியாய் நேரத்திற்குள் போய் சேர்ந்தோம். நாங்கள் அணிந்து இருந்த காக்கி உடை, அவர் எங்களை போலீஸ் என்று பயந்து பத்திரமாக ஏற்றி, சொன்ன இடத்திற்கு கொண்டு விட்டார். இந்த துணிவுக்கு காரணம் என் பெற்றோர் கொடுத்த கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரம் என்பேன்.

இன்னொரு சம்பவம். நான் ஏழாம் வகுப்பில் இருந்த சமயம், காலையில் பிரார்த்தனைக்காக (Prayer) மைதானத்தில்  ஒரு  மரக்கிளையில்  ஒரு  காக்கை மாஞ்சா கயிற்றில்  அகப்பட்டு தத்தளித்துக் கொண்டு இருந்தததைக் கண்டு அருகில் இருக்கும் வீட்டில் உள்ள முருங்கை பறிக்கும் உயரமான கம்பைக் கொண்டு பி.டி . ஆசிரியர்  உதவியுடன் காப்பாற்றினேன். அவர் தலைமை ஆசிரியையிடம் எடுத்துச் சொல்லி மறுநாள் காலை வணக்கத்தின் கூட்டத்தில் பரிசு கொடுத்து  பாராட்ட வைத்தார். இந்த பொது நலம் என் பாட்டியிடம் இருந்து  வந்தது.

பின்னாளில்  நிறைய வெள்ள நிவாரப்பணிகளுக்காக லியோ சங்கம் மூலம் நிகழ்ச்சிகள் நடத்தி பணம் திரட்டியது , போலியோ முகாம்கள், மரம் நடுவது என்று பல சேவைகள் என்று இவற்றிற்கு அடிகோலிட்டது இளம் வயதில் கற்றுக்கொண்ட பொது நலம்தான்.

தங்கள் அயல் நாட்டு வாழ்க்கையில் நீங்கள் பெற்ற  அனுபவங்களும் அவை தந்த படிப்பினைகள் பற்றி..

நான் சந்தித்த அத்தனை சவால்களுக்கும் உறுதுணையாக இருந்தது என் விடாமுயற்சியும், தன்னம்பிகையையும். திருமணம் ஆகி வெளிநாடு பெயர்ந்து கனடா செல்ல  நேர்ந்தது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங்  தகுதியைக் கொண்டு,  அங்கு இறங்கியதும் வேலை தேடி கொள்ளலாம் என்று கனவோடு இறங்கினேன். போனதும் தெரிய வந்தது அது பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மாநிலம், அதுவும் நாங்கள் இருந்தது ஒரு சின்ன ஊர்.. வேலை வாய்ப்பு கம்மி, அதுவும் பிரெஞ்சு மொழி தெரிந்தால் மட்டுமே!  அக்கம் பக்கத்தில், எவருடனும்  பேச முனைந்தாலும் ஆங்கிலம் தெரியாது என்று தலை ஆட்டவும், பள்ளி கூடம் சென்ற பிள்ளைகளும் பிரெஞ்சு பாடம் கொண்டு வர இதை எப்படி புரிந்து கொண்டு  இவர்களின் படிப்பை எப்படி கண்காணிப்பது என்ற கவலை அதிகரித்தது.  அங்கு இருந்த ஒரு இந்திய தோழி சொன்னாள்: “இங்கே அரசாங்கம் பிரெஞ்சு மொழி இலவசமாக கற்று தருவார்கள். ஆனால் கடினம், என்னால் முடியவில்லை, நிறுத்தி விட்டேன், இங்கே இருந்து பிள்ளைகளையும் கூடி கொண்டு ஆங்கிலம் பேசும் மாநிலம் செல்ல போகிறோம்” என்று.   தூக்கி வாரி போட்டது.

எனக்குத் தான் சவால் என்றால் இனிப்பு சாப்பிடுவது  போலாயிற்றே! புதிய சூழ்நிலை, வருடம் முழுவதும் சென்னை வெயிலுக்கு நேர் மாறான குளிர், கணவன், குழந்தைகள் படிப்பு இவற்றையும் கவனித்துக் கொண்டு நானும் ஆறு மணிக்கே பேருந்து பிடித்து பிரெஞ்சு பள்ளிக்கு சென்று வர வேண்டும்.  கடுமையான பயிற்சியோடு, எப்பவும் படிப்பு , தேர்வு, சமையல் என்று வாழ்க்கையே ஒரு தடகள ஓட்டம் மாதிரி மூன்று வருடங்கள் கழிந்தது…கொஞ்சம் நிமிர்ந்து  பார்த்தல் நாங்கள் சேரும் போது நூறு பேர் இருந்தோம்.  படிப்பு முடியும் தருணத்தில் இருபது பேர் கூட இல்லை. எங்கள் பிரெஞ்சு புலமை கண்டு எங்களுக்கே வியப்பாக இருந்தது, பிரெஞ்சில் கவிதை எழுதும்  அளவிற்கு எங்களிடம் திறமை இருந்தது.  படிப்பு முடித்து சான்றிதழ்களை பெறும் போது  வானில் பறக்கும் உணர்வு.  மொழி தெரிந்து விட்டது இனி வேலை தேடலாம் என்றால் அதுவம் ஒரு பெரிய சவால்தான்.  பல சிறிய கம்பெனிகளில் வேலை பார்த்து, பிறகு பிள்ளைகளின் நலன் காரணமாக நானே சொந்த தொழிலும் தொடங்கி  திறம்பட செயல் ஆற்றி வந்ததும் ஒரு சிறந்த அனுபவமே!

(நாளை நிறைவுறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *