பசுமை பாதுகாப்புக்கு கைகொடுக்கும் மறுசுழற்சி முறையில் தயாரான, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை ரகங்களுடன், சர்வதேச பின்னலாடை கண்காட்சி, திருப்பூரில் நேற்று துவங்கியது. நாட்டின் பின்னலாடை தலைநகரான திருப்பூரில், ஆண்டுதோறும் ஐ.கே.எப்., எனப்படும் சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, ஐம்பதாவது சர்வதேச பின்னலாடை கண்காட்சி, பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் நேற்று துவங்கியது.
லண்டனைச் சேர்ந்த, ‘எத்திக்கல் டிரேடிங் இனிஷியேட்டிங்’ நிறுவன நிர்வாக இயக்குனர் பீட்டர் மெக் அலிஸ்டர், கண்காட்சியை துவக்கி வைத்தார். இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பான ‘பியோ’ தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் இளங்கோவன் உள்பட பல்வேறு அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
திருப்பூர், கோவை, கரூர், கோல்கட்டா, சென்னை உள்பட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள், புதுமையான ஆயத்த ஆடை ரகங்களை, 100 அரங்குகளில் காட்சிப்படுத்தியுள்ளன.
சுற்றுச்சூழல் மாசுபாடு களை தடுத்து, பசுமை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மறுசுழற்சி பாலியஸ்டர் இழையில் தயாரிக்கப்பட்ட ஆடை ரகங்கள்; செயற்கை இழை, கலப்பு இழையில் தயாரான மதிப்பு கூட்டப்பட்ட ஆடை ரகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன், கனடா என உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தக முகமை நிறுவனப் பிரதிநிதிகள், கண்காட்சியை பார்வையிட்டு, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் வழங்குவது தொடர்பான வர்த்தக விசாரணைகளை நடத்திவருகின்றனர். கண்காட்சி, நாளை நிறைவடைகிறது. ‘பியோ’ தலைவர் சக்திவேல் கூறியதாவது: கண்காட்சியில், செயற்கை இழைகளில் தயாரான மதிப்பு கூட்டப்பட்ட ஆயத்த ஆடைகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள்; 300 வர்த்தக முகமை நிறுவன பிரதிநிதிகள் பார்வையிடுவர் என எதிர்பார்க்கிறோம்.
கண்காட்சிக்குப்பின், திருப்பூர் உள்பட நாடு முழுதும் உள்ள பின்னலாடை ஏற்றுமதி துறையினருக்கு, வர்த்தக வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்கும்.இவ்வாறு கூறினார்.