நட்பு என்னும் அற்புத உறவைக் கொண்டாட உருவாக்கப்பட்ட நாள்தான் நண்பர்கள் தினம். ஆனால் நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுவதில் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது. பொதுவாக பாரதம், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு அன்றுதான் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஒருசில நாடுகளில் ஏப்ரல் 27ம் தேதியும், பராகுவே, பிரேசில் போன்ற நாடுகளில் ஜுலை 20ம் தேதியும் நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஐ.நா சபை, ஜூலை 30’ஐ அதிகாரப்பூர்வ சர்வதேச நண்பர்கள் தினமாக அறிவித்துள்ளது. எனவே சர்வதேச நண்பர்கள் தினமான இன்றைக்கு அதனைக் கொண்டாடுவதோ அல்லது பாரதத்தில் நாம் கொண்டாடப்போகும் ஆகஸ்ட் 7 அன்று கொண்டாடுவதோ அல்லது இரண்டையும் கொண்டாடுவதோ நமது விருப்பமே. எந்த நாட்களாக இருந்தால் என்ன நண்பர்கள் ஒன்று கூடினாலே அது நண்பர்கள் தினம்தானே?
சிக்கல் நிறைந்த இருண்ட நேரத்தில் பக்குவம் தந்து தீபமாய் ஒளிரும் விடிவெள்ளி நட்பு, இன்பத்தை இரட்டிப்பாக்கி, துன்பத்தை பாதியாகக் குறைக்கும் மருந்தும் நட்பு. நாம் சறுக்கும் நேரத்தில் ஊக்கம் தந்து மேலே உயர்த்தி மகிழ்ச்சிக் கொள்பவரும் நண்பரே. அழகு, பணம், ஆண், பெண், ஜாதி, மதம் போன்றவற்றிற்கு கட்டுப்படாத ஒருமித்த கருத்துடையோர் மேற்கொள்ளும் அழகிய உணர்வு நட்பு. இங்கு மகிழ்ச்சியும்,விட்டுக் கொடுத்தலும், தியாகமும் நிறைந்திருக்கும். ஒருவரின் தனித்துவத்தைக் கண்டறியும் அளவுகோல் நட்பு.
நமது முன்னேற்றத்தின் படியாக, எந்த விதமான பலனையும் எதிர்பாராமல், நமது சுக துக்கங்களில் பங்குக் கொண்டு உடன் பயணிக்கும் இனிய வரவு அது. ஏதோ ஒரு விருப்பத்தின் பேரில் நமக்காக நாமே தேடிக் கொண்ட பந்தம் இது. எந்த சூழல்நிலையிலும்விட்டுக் கொடுக்காத நண்பரைப் பெற்றவர்கள்,இறைவனால் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள். விட்டுக் கொடுத்தலுடன் ஒருவரின் உயர்வுக் கண்டு மற்றொருவர் மகிழ்ச்சிக் கொள்வதுதானே உண்மை நட்பு. நண்பர்களை போல சில நலன் கெடுக்கும் மாதிரிகளும் உண்டு. அவற்றை இனம் கண்டு ஒதுக்கி, நல்ல நட்பைத் தேர்ந்தெடுப்பது நன்மை பயக்கும். அருகே இருந்தாலும், தொலைதூரத்தில் இருந்தாலும் நண்பருடன் தொடர்பு கொண்டு அகம் மகிழ்வோம். நெறிகாட்டும் நண்பர்களின் வகையறிந்து போற்றுவோம்.
” நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு” (படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல பழகப், பழக இன்பம் தரக்கூடியது பண்புடையவர்களின் நட்பு) என்னும் வள்ளுவரின் வாக்கிற்கிணங்க நல்ல நண்பர்களை நாளும் போற்றுவோம். நண்பர்களை மகிழ்விக்கும் நல்ல நண்பர்களாவோம். இனிய சர்வதேச நண்பர்கள் தின வாழ்த்துகள்.