சர்வசமய கருத்தரங்குகளில் கிறிஸ்தவ சதியைத் தகர்த்தேன்”

நியூயார்க் நகரில் ‘உலகளாவிய அமைதிக்கான பெண்களின் முயற்சி’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருபவர் டெனா மெர்ரியம் என்ற இந்தப் பெண்மணி. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் உலக மதங்கள் தொடர்பான கல்வி அளிக்கும் மையத்தினை வழி நடத்தும் நிர்வாகக் குழு அங்கத்தினர். ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதியால் துவக்கப்பட்ட ATM for seva அமைப்பின் நிர்வாகக் குழுவில் பங்கு வகிக்கிறார்.

நான் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தேன். என் பெற்றோர் கட்டுப்பெட்டியாக வளர்க்கவில்லை. மாறாக இறை வழிபாட்டில் எனக்கு இருந்த இயற்கை ஆர்வத்தை, எனக்கான தெய்வீக பயணத்தில் ஈடுபடுத்த ஆதரவா இருந்தார்கள்.

சிறுவயது முதற்கொண்டே கடவுள் என்பது சக்தியாக, அன்னையாக, தேவியாகவே எனக்குத் தோன்றியது.

நான் கல்லூரியில் படிக்கும்போது என் தோழி அளித்த பரமஹம்ஸ யோகானந்தாஜி எழுதிய ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ (The Autobiography of A Yogi) என்ற புத்தகம் எனக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது. தியானத்திலும் ஸனாதன தர்மம் தரும் வேதாந்தத்தின் பேரிலும் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

மேற்படிப்புக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அங்குப் புனித இலக்கியங்கள் என்ற விருப்பப் பாடத்திட்டத்தை ஆவலுடன் தேர்ந்தெடுத்தேன். பாரதத்தின் வேதங்கள் அவற்றுள் ஒரு பாடம். அந்தப் பாடத்தை நடத்திய பேராசிரியர் ஹிந்து மதத்தைச் சாராத ஒரு மேற்கத்தியர். பாடத்தை யாதொரு ஈடுபாடும் இல்லாமல் நடத்தினார். அவர் ஹிந்து கடவுளர்களையும் தத்துவங்களையும் தற்காலத்துக்குப் பொருந்தாதவை என்பது போல பேசினார். அவையெல்லாம் என் மனதைப் பெரும் வேதனைக்குள்ளாக்கின.

முதலில் மேற்கொண்டு படிப்பையே விட்டுவிடலாம் என்று கூடத் தோன்றியது. ஆனால் ஏற்கனவே மனதளவில் என்னை ஹிந்துவாக உணர்ந்திருந்தேன். ஆகையால், சுய ஊக்கம் பெற்று, உபநிஷதங்கள், யோக சூத்திரங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக பகவத் கீதையையும் கூடுதல் முயற்சியுடன் படித்தேன்.

என்னுடைய மேற்படிப்பு ஆராய்ச்சிக் கட்டுரைக்கு ‘பகவத் கீதை மற்றும் பழைய ஏற்பாட்டில் உள்ள ஜாப்பின் புத்தகத்தையும் (Book of Job)’ ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொண்டு ஆழ்ந்து படித்தேன். இரண்டுமே மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே நடந்த உரையாடல்களின் தொகுப்பே. இரண்டுமே பேரன்பினால் உந்தப்பட்டு அபேத உணர்வைப் பெற்று மனிதனை இறைவனிடம் பூரண நம்பிக்கையுடன் சரணாகதி அடையச் சொல்லி நிறைவடைகின்றன.

என்னுடைய கட்டுரையை மதிப்பிட வேண்டிய பேராசிரியையின் எண்ணமோ வேறாயிருந்தது. அவருடைய கருத்தின்படி கடவுளுக்கும் மனிதனுக்குமுள்ள உறவின் அடிப்படை அச்சம் என்பது. அன்பு என்பதே பழைய ஏற்பாட்டில் இல்லை என்பது அந்தப் பெண்மணியின் தீர்மானம். என்னுடைய கட்டுரையின் ஒவ்வொரு பக்கத்திலும் மீண்டும் மீண்டும் இதனைப் பதிவிட்டிருந்தார். அதனைப் படிக்கையில் முதலில் அதிர்ந்து போனாலும், அன்பின் மகத்துவத்தை உணர்ந்ததால்தான் நான் ஒரு ஹிந்து என்று மனதிற்குள் கர்வமும் மகிழ்வும் மேலும் வலிவுடன் பதிந்தன.

அதன் பின்னர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தனிப்பட்ட முறையிலும் ஐ.நா சபையின் மூலமாகவும் மதங்களுக்கு இடையேயான பரஸ்பர கருத்துப் பரிமாற்றங்களுக்கான உரையாடல்களுக்கான மாநாடுகளை – பட்டறைகளை நடத்திவருகிறேன். இதற்கு முன்னர் எல்லாம் மாநாட்டை நடத்தியவர்கள் கிறிஸ்தவ – இஸ்லாம் மதங்களுக்குச் சார்பாக நடந்து கொள்பவர்கள். ஆகையால் ஹிந்து மதத்திற்குத் தகுந்த எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் அளிக்க மாட்டார்கள். ஆகையால் கிறிஸ்தவமே மேலானது என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி வந்தார்கள். நான் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின்னர் ஹிந்து மதத்திற்கும் மற்றெல்லோரையும் போலச் சரியான எண்ணிக்கையில் உரிய தகுதி வாந்த அறிஞர்களைக் கலந்துகொள்ளச் செய்தேன். கிறிஸ்தவர்களின் கொட்டம் அடங்கியது.

ஒவ்வொரு நாளும் ஹிந்து மகரிஷிகள் உணர்ந்து வாழ்ந்து காட்டிய, உலகத்தின் ஒவ்வொரு உயிரும் ஒரே இறைசக்தியின் பல்வேறு வடிவங்களே; நாம் யாவரும் பேரன்பினால் இணைக்கப்பட்டுள்ளோம்’ என்ற மாறாத உண்மையின் பேரில் என் நம்பிக்கை மேலும் மேலும் வலுப்படுகிறது.

நன்றி: ஆர்கனைசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *