சர்க்கரை நோயை சமாளிக்க இயற்கை உணவு

உடலில் உள்ள பழைய கழிவுகளை நீக்கியபின் செய்யும் மருத்துவமே மிக சிறந்த பலனை தரும் என்பது நம் பாரம்பரியம் சார்ந்த மருத்துவ முறைகளில் உள்ள விதி. அதற்காக சில எளிய முறைகளை இங்கு காணலாம். இந்த செயல்முறைகளை இந்த உணவுமுறைகளை தொடங்கும்போது சேர்த்தே செய்ய வேண்டும்.
ஆயில் புல்லிங்: காலையில் எழுந்த உடன் வாயில் 5 முதல் 10 மில்லி சுத்தமான நல்லெண்னையை ஊற்றி 10 நிமிடங்கள் வரை கொப்பளித்து உமிழ்ந்த பிறகு சாதாரணமாக பல் துலக்க வேண்டும். இதனால் வாய் சுத்தமாகும், உடற்சூடு குறைவதுடன் பல்வேறு நன்மைகளும் ஏற்படும்.

சிறுநீரகத்தை பலப்படுத்த: ஒரு டீஸ்பூன் அளவு டீத்தூளை 250 மில்லி நீரில் கொதிக்க வைத்து அதை பாதியாக சுண்ட வைத்து வடிகட்டி மீண்டும் அதில் 150 மில்லி நீரை சேர்த்து பால், இனிப்பு ஏதும் சேர்க்காமல் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு அதிகபட்சமாக 21 நாட்கள் மட்டுமே இதனை தொடர்ந்து குடிக்க வேண்டும் கோடைகாலத்தில் இதனை குடிப்பதை தவிர்ப்பது நல்லது. உடலில் அதிக உஷ்ணம் உள்ளவர்கள், அதிக அளவில் மருந்து எடுத்து கொள்பவர்களுக்கு இது உடலில் நமைச்சலை ஏற்படுத்தலாம். அப்படி ஏற்படுத்தினால் உடனடியாக இதை நிறுத்திவிட வேண்டியது மிகவும் அவசியம். அவர்கள் சித்த அல்லது ஆயுர்வேத மருத்துவரை அணுகி சிறுநீரகத்தை பலப்படுத்த நெருஞ்சிமுள் சூரணம் போன்ற மாற்று மருத்துவ முறைகளை கடைபிடிக்கலாம்.
இதனை குடிக்கும்போது சூடு காரணமாக மலச்சிக்கல் ஏற்படுவதாக உணர்ந்தால் அதிக அளவில் நீர், பச்சைக் காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது. நம் உடலில் உள்ள திரவ கழிவுகளை அகற்ற ஓயாமல் வேலை செய்து வரும் கிட்னியை மிக எளிதாக பலப்படுத்தி அதில் உள்ள கழிவுகளை வெளியேற்றலாம்.
இதனை செய்வதன் மூலம் நம் தலைமுடி கொட்டுவது குறையும், முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும் என்பது கூடுதல் அழகுக் குறிப்பு.

கல்லீரலை கவனிப்போம்: வாரம் ஒருமுறை நம் வயிற்றின் வலது பக்கத்தில் கல்லீரல் உள்ள பகுதியில் தாங்கும் சூட்டுடன் கூடிய வெந்நீரில் முக்கிய டர்கி டவல் எனப்படும் தடிமனான துண்டை போடவும். சூடு போகாமல் கம்பளி போர்த்தி 10 நிமிடம் வைத்திருந்து அதை எடுத்த உடன் அறை வெப்பநிலையில் உள்ள குளிர்ந்த நீரில் முக்கிய துண்டை 5 நிமிடமும் போட்டு வைக்க வேண்டும் இந்த முறையை மாற்றி மாற்றி 3 அல்லது 5 முறை செய்வது நல்லது. முடியாதவர்கள் கீழாநெல்லி போன்ற மூலிகைகளை தகுந்த மருத்துவரின் அறிவுரையுடன் சாப்பிட்டு கல்லீரலை பலப்படுத்த வேண்டும்.

குடலை காப்போம்: (அகிம்ஸா எனிமா) இயற்கை அங்காடிகளில் கிடைக்கும் அகிம்ஸா எனிமா குவளையில் தினமும் காலையில் சுமார் 300 மில்லி சாதாரண நீரில் எனிமா எடுத்து குடலில் உள்ள கழிவுகளை நீக்க வேண்டும். இதனை ஓரிரு மாதங்கள் மட்டும் தினமும் காலையில் செய்து பிறகு படிப்படியாக குறைத்து நிறுத்திவிடலாம். முடியாதவர்கள் தினமும் இரவு உணவுக்கு பிறகு ஒரு மணி நேரம் கழித்து திரிபலா எடுத்து கொள்ளலாம்.
முதுகுத் தண்டை சரிப்படுத்துவோம்: தினமும் யோகா அல்லது “8” நடை போட்டு நம் முதுகு தண்டை சீராக்குவது சர்க்கரை மட்டும் அல்ல நம் உடலில் உள்ள பல நோய்களை நீக்கும்.
நுரையீரலை வலிமை செய்வோம்: புகைப்பழக்கம் அறவே கூடாது. அதிக புகை, தூசு உள்ளே செல்லாமல் பார்த்துகொள்வது நல்லது. நுரையீரலை பலப்படுத்த சிறந்த உபாயம் பிராணயாமம் எனவே அதை தகுந்த யோகா ஆசிரியரிடம் கற்று தினமும் பழகுவது நல்லது.

மனதும் முக்கியம்: நம் உடலில் ஏற்படும் தாக்கம் மட்டும் அல்ல மனதில் ஏற்படும் தாக்கமும் நம் உடல்வழியாக நோயாக வெளிப்படுத்தப்படுகிறது எனவே மனதின் ஆரோக்கியம் மிகவும் அவசியம், அதற்காக தினமும் தியானம் செய்வதுடன் மனதை சந்தோஷமாக வைத்திருப்பது நல்லது.
கண்டிப்பாக உடலுக்கு தேவையான அளவுக்கு நீர் குடிக்க வேண்டும். காபி, தேனீர், சர்க்கரை போன்றவை கூடவேகூடாது. எளிதில் ஜீரணமாகும் உணவுகள், நார்சத்து நிறைந்த உணவு, அந்தந்த சீதோஷண நிலைக்கு ஏற்ப விளையும் பச்சைக் காய்கறி, பழவகைகள் போன்றவற்றை அதிகமாக எடுத்துகொள்வது நல்லது. வாரம் ஓரிரு முறையாவது ஆவியில் வேகவைத்த முளைவிட்ட தானியங்களை உணவில் சேர்க்க வேண்டும். மதிய உணவில் கண்டிப்பாக பசுநெய்யும் கடைசியில் மோரும் சேர்த்துகொள்ள வேண்டும்.
பொதுவானவை:

கூடுமானவரை அமிலத்தன்மை உணவுகளை குறைத்து காரத்தன்மை உணவுகளை எடுத்துகொள்வது நல்லது. நன்றாக மென்று மெதுவாக உண்ண வேண்டும். காலையில் கொடுக்கப்பட்ட ஜூஸ் வகைகளை காலை அல்லது மாலையில் விருப்பம் போல பிரித்தும் குடிக்கலாம். அதிக வேலை செய்பவர்கள் இரவில் சொல்லப்பட்டுள்ள சிறுதானிய உணவுகளை காலையிலும் காலையில் சொல்லபட்டுள்ள இயற்கை உணவுவகைகளை இரவிலும் மாற்றி எடுத்துக்கொள்ளலாம். வெந்தயத்தை ஊறவைத்த நீரை குடித்தபின் அந்த வெந்தயத்தை தோட்டத்திலோ அல்லது சிறு தொட்டிகளிலோ போட்டு வளர்த்து வந்தால் அதன் புத்தம்புதிய கீரை நம் மதிய உணவுக்கு தயார்.

காலையில் விரைவில் எழுவதும் இரவில் விரைவாக உறங்க செல்வதும் வாடிக்கையாக்கி கொள்வது சிறந்தது.
இயற்கை மருத்துவமுறையுடன் இணைந்த இந்த உணவுமுறையை மூன்று முதல் நான்கு மாதங்கள் விடாமல் கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் நம்மை விட்டு நிச்சயம் அகலும், அது மட்டும் அல்ல உடல் இழந்த பொலிவை. பெறும் உடல் எடை சீராகும். ரத்த அழுத்தம் சரியாகும், உடலின் வளைந்து கொடுக்கும் தன்மை அதிகமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும். மூன்று மாதங்கள் கடை பிடித்த பிறகு விட்டுவிட்டாலும் அது செய்த நன்மையின் தாக்கம் நம் உடலில் பல காலம் இருந்து நம்மை காக்கும். பிறகு தேவைபட்டால் மீண்டும் இதே டயட் அட்டவணையை தொடரலாம்.
எக்காரணத்தை கொண்டும் தற்போது எடுத்துவரும் மருத்துவத்தை நீங்களாகவே நிறுத்திவிடாதீர்கள். இதில் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்படுவது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *