மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் நகரை ‘சத்ரபதி சம்பாஜிநகர்’ என்றும், உஸ்மானாபாத் நகரின் பெயரை ‘தாராஷிவ்’ என்றும் மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மா நில அரசு அனுப்பிய பெயர் மாற்றப் பரிந்துரைக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எதிர்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தன்வே, “இந்த பெயர் மாற்றம் சிவசேனா நிறுவனர் மறைந்த பால்தாக்கரேவின் நிலைப்பாட்டின் வெற்றி. காசி விஸ்வநாதர் கோயிலை உடைத்த நபரின் (ஔரங்கசீப்) பெயர் நீக்கப்பட்டது மகிழ்ச்சி. 1988ம் ஆண்டு மே 9ம் தேதி தாக்கரே ஔரங்காபாத் நகரத்தை சத்ரபதி சம்பாஜிநகர் என்று மறுபெயரிட்டார்” என்றார். சத்ரபதி சாம்பாஜி, மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் மூத்த மகன், அவரது தந்தையால் நிறுவப்பட்ட மராட்டிய மாநிலத்தின் இரண்டாவது ஆட்சியாளர் ஆவார். 1689ம் ஆண்டு ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் சாம்பாஜி மகாராஜ் தூக்கிலிடப்பட்டார். உஸ்மானாபாத் அருகே உள்ள 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு குகை கோயிலின் பெயர் தாராஷிவ் ஆகும். இதனிடையே இந்த முடிவை விமர்சித்துள்ள ஔரங்காபாத் எம்.பியும், அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) தலைவருமான இம்தியாஸ் ஜலீல், ஔரங்காபாத்தில் தங்கள் பலத்தை காட்டுவோம் என்று கூறியுள்ளார். மேலும், “ஔரங்காபாத் என்றும், என்றும், எப்பொழுதும் நமது நகரமாக இருக்கும். ஔங்காபாத் நகருக்கு நமது வலிமையை வெளிப்படுத்தும் வரை காத்திருங்கள். நமது நகரத்தின் பெயரால் அரசியல் விளையாட்டை விளையாடும் இந்த சக்திகளை தோற்கடிக்க ஔரங்கபாதிகள் தயாராகுங்கள். நாங்கள் கண்டிப்போம், போராடுவோம்” என்று டுவீட் செய்துள்ளார். ஔரங்காபாத்தை சம்பாஜிநகர் என்றும், ஒஸ்மானாபாத்தை தாராஷிவ் என்றும் மறுபெயரிடுவது என்பது சிவசேனா தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசின் கடைசி அமைச்சரவை முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.