சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழாவில் “வரலாற்றுத் திருப்புமுனைகள்” கருத்தரங்கம்

சேலம் மாதவம் மண்டபத்தில் பிப்ரவரி ௧௯ அன்று சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் “வரலாற்றுத் திருப்பு முனைகள்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ் வட தமிழக
தலைவர் குமாரசாமி அவர்கள் வழிநடத்தினார்.  கலந்துரையாடலில் தங்கள் கருத்துக்களை 8 பேர் முன்வைத்தனர்.

பாரத வரலாற்றில் இதுவரை நடைபெற்ற திருப்புமுனைகளாக குமாரசாமி அவர்கள் விவரித்த கருத்துக்களின் சாராம்சம்:

1) பாரத வரலாற்றில் முதல் திருப்பு
முனை பொது ஆண்டு 1630ல் இதே நாளில் சத்ரபதி சிவாஜி அவதரித்தது ஆகும். அவரது அன்னை ஜீஜாபாய் அவரை தேசபக்தி, தெய்வபக்தி, இந்து உணர்வு அனைத்தையும் ஊட்டி வளர்த்தார்.

1674ம் ஆண்டு சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவினார். அதை “மராட்டிய பேரரசு” என்று சில மேல்நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் தவறாக சித்தரிக்கின்றனர்.

உண்மையில் அது ஹிந்து சாம்ராஜ்யம் ஆகும். முகலாய மன்னன் ஔரங்கசீப் காலத்தில் ஒரு “ஹிந்து” வாக வாழ்வதற்கே “ஜஸியா” என்னும் வரியைக் கட்ட வேண்டியிருந்தது.

சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய பிறகுதான் “நான் ஒரு ஹிந்து” என்று பெருமிதம் கொள்ளும் நிலை உருவானது.

2) ஆன்மீகத்துறையில் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய உரை அடுத்த திருப்புமுனை.

“ஹிந்து மதமே எல்லா மதங்களுக்கும் தாய்”- என்று அவர் முழக்கமிட்டதை உலகமே வியந்து பார்த்தது.

3) 1925ல் ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்டது அடுத்த திருப்பு முனை. காந்திஜியும் நேருவும் இந்தியாவை அரசியல்ரீதியாக ஒன்றுபடுத்த முயன்றார்கள்.

ஆனால் இந்த தேசத்தை ஒன்றுபடுத்தும் சக்தி (Unifying Force) ஹிந்து தர்மமே என்றார் ஹெட்கேவார். ஆர்.எஸ்.எஸ் மிக மகத்தான சக்தியாக வளர்ந்து நிற்கிறது – அதன் எந்தத் தலைவரும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டதில்லை.

இன்று நீங்கள் எவரிடம் “மகாத்மா காந்தி யார்?” – என்று கேட்டாலும் கோடிக் கணக்கானோருக்கு தெரியும். ஆனால் காந்திஜியை பின்பற்றுபவர்கள் எத்தனை பேர்? மிக மிக சொற்பம்.

ஆனால் ஹெட்கேவார் யார்?- என்று ஒரு பொது இடத்தில் நின்று கேட்டால் பலருக்கும் தெரியாது! ஆனால் அவர் உருவாக்கிய ஹிந்து தர்மக் கோட்பாடுக்காக உழைப்பவர்கள், அதன் வழி நிற்பவர்கள் லட்சக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் காரர்கள்!

அந்த ஆர்.எஸ்.எஸ் 1925ல் உருவானது பாரத வரலாற்றில் திருப்புமுனை!

4) மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற மத
மாற்றத்தை ஆர்.எஸ்.எஸ் நடத்திய போராட்டம் – ஒரு திருப்புமுனை.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் – வாஜ்பாயும் அத்வானியும் அவரை சந்தித்தபோது – “ஒவ்வொரு சிறு கிராமங்களிலும் பட்டி தொட்டிகளிலும் RSS ஷாகா நடைபெற வேண்டும்!”- என்றார்.

இந்தத் தலைவர்களுக்கே அவர் கூறியது வியப்பு!

இந்திரா காந்தி விளக்கினார்:- “இந்த தேசத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளவரைதான் நான் பிரதமராக இருக்க முடியும்!”- என்றார்.

மீனாட்சிபுரம் சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வலிமைமிக்க தலையீடு அன்றைய பாரதப் பிரதமரையே ஆர.எஸ்.எஸ் ஐ பாராட்ட வைத்தது.

5) 1989/90 ல் கிழக்கு, மேற்கு என்று இரண்டாக இருந்த ஜெர்மனி ஒன்றாக இணைந்ததும், கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிச ஆதிக்கம் முடிவுக்கு வந்ததும் முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனை! மேலும் அதே காலகட்டத்தில் சோவியத் ஒன்றியமாக இருந்த (USSR) என்பது 17 நாடுகளாக சிதறியதும் கம்யூனிசம் ரஷ்யாவில் விழுந்ததும் முக்கியத் திருப்புமுனை.

6) 1992 – டிசம்பர் 6 அன்று அயோத்தியில் மசூதி என்று அழைக்கப்பட்ட “டோம்” கொண்ட அந்த சர்ச்சைக்குரிய கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது அடுத்த திருப்புமுனை.

7) 1998ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற ஃபோக்ரான் அணு
குண்டு சோதனை முக்கியத் திருப்புமுனை.

அமெரிக்க சாடிலைட்டுகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு – ராஜஸ்தான் பாலை
வனத்தில் நாம் நடத்திக் காட்டிய அணுகுண்டு சோதனை – ஆயுதபலத்தில் நாம் யாருக்கும் சளைத்தவரில்லை என்பதை காட்டியது.

அமெரிக்கா தனது கண்ணுக்குப் படாமல் நாம் அணுகுண்டு சோதனை நடத்தியதைக் கண்டு ஆத்திரமடைந்தது.

நம் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்போம் என்று மிரட்டியது அமெரிக்கா.

ஆனால் நமது பிரதமர் வாஜ்பாய் துணிச்சலாகக் கூறினார்:- “எங்கள் நாட்டு ஆயுதபலத்தைப் பெருக்க உங்கள் அனுமதி எதற்கு? பொருளாதாரத் தடை விதித்தால் விதியுங்கள் – இந்தியர்கள் ஒருவேளை உணவைக் கூட தியாகம் செய்யத் தயார்!”- என்று துணிச்சலாக  அறிவித்தார்.

8) 2014 தேர்தலில் முதன்முறையாக தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்கு வந்தது.

அப்போது லண்டனில் இருந்து GUARDIAN ஆங்கில ஏடு இவ்வாறு எழுதியது:- “BRIRAIN FINALLY LEFT INDIA!”

அதாவது இதுவரை ஐரோப்பிய மனோபாவம் கொண்ட காங்கிரஸ் பிரதமர்களையே – லால்பகதூர் சாஸ்திரி நீங்கலாக – பார்த்த பாரத தேசத்தில் – இப்போது முதன்முறையாக -தேசத்தை தெய்வமாகப் பார்க்கும் HINDU SOCIAL FORCE ஆட்சிக்கு வந்துள்ளது – என்று “கார்டியன்” எழுதியது

அப்படி 2014 ல் ஹிந்துத்வா கொள்கை கொண்ட பாஜக முதல்முறையாக சொந்த பலத்தில் ஆட்சிக்கு வந்தது திருப்புமுனை! “இனி இதை மாற்ற முடியாது”- என்றும் எழுதியது கார்டியன் ஏடு.  “காரணம் இது தேசம்- தெய்வம் – தர்மம் என்ற கோட்பாட்டுடன் பிணைந்த ஆட்சி”- என்றது கார்டியன் ஏடு.

9) பிறகு 2019 ல் ஆட்சிக்கு வந்ததும் – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ஆர்டிகிள் 370 நீக்கமும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதும் அடுத்த திருப்புமுனை.

10) இன்று அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வந்தவுடன் அவரை சந்திக்க மோடி செல்லும்போது – அவரே நமது பிரதமருக்கு நாற்காலியை நகர்த்தி அமர வைக்கும் அளவுக்கு பாரதம் முக்கியத்துவம் பெற்றிருப்பது அடுத்த திருப்புமுனை.

ட்ரம்ப் – MAGA – Make America Great Again- என்ற வாசகத்தை முன்வைத்தார்.

மோடிஜி – MIGA – Make India Great Again – என்றதோடு நில்லாமல் – MAGA + MIGA = MEGA – ஆம் அது மாபெரும் வலிமை மிக்க இந்தோ – அமெரிக்க நட்புறவு என்றார். இது நமது சர்வதேச உறவுகளில் ஏற்பட்டுள்ள முக்கியமான திருப்புமுனை!

தொகுப்பு : முரளி சீதாராமன, சேலம்

தொடரும்