சட்டப்பிரிவு 370 ரத்தால் பயங்கரவாதம் முடிவுக்கு வரும் – அமித் ஷா

”ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சட்டப்பிரிவு, 370ஐ ரத்து செய்ததால், அந்த மாநிலத்தில் பயங்கரவாதம் முடிவுக்கு வரும்,” என, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாதெரிவித்தார்.

துணை ஜனாதிபதியாக, வெங்கையா நாயுடு பொறுப்பேற்று, இரண்டு ஆண்டு முடிந்துள்ளது. அவரின், இரண்டு ஆண்டு கால பணியை ஆவணப்படுத்தும் விதமாக, ‘கற்றல், கற்பித்தல் மற்றும் தலைமையேற்றல்’ என்ற அவர் எழுதிய நுால் வெளியீட்டு விழா, சென்னையில், நேற்று நடந்தது.நுாலை, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா வெளியிட, துணை ஜனாதிபதி, வெங்கையாநாயுடு பெற்றுக்கொண்டார்.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சட்டப்பிரிவு 370ஐ சமீபத்தில் மத்தியஅரசு ரத்து செய்தது. வெங்கையா நாயுடு மாணவராக இருந்த போது இந்த சட்டப்பிரிவை எதிர்த்து போராடியிருக்கிறார்.காஷ்மீர் விவகாரம் பற்றி கம்யூனிஸ்ட் பேராசிரியர் ஒருவர் அவரிடம் கேட்டபோது, ‘ஒரு கண்ணை மற்றொரு கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் ஒரு கண்ணில் வலி இருந்தால் அதை மற்றொரு கண் உணரும். அது போல காஷ்மீர் பிரச்னையை உணர வேண்டும்’ என பதில் அளித்தார்.

இந்தச் சட்டப்பிரிவால் நாட்டிற்கோ ஜம்மு – காஷ்மீருக்கோ எந்த நன்மையும் இல்லை என நம்பினேன். அதனால் அதை விரைவாக ரத்து செய்ய முடிவு செய்தேன்.நான் குஜராத் மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஆனது முதல் மத்திய உள்துறை அமைச்சராகும் வரை சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதில் மாற்று கருத்து இருந்ததில்லை. ராஜ்யசபாவில் மசோதாவை எடுத்து வரும் போது ஒருவித தயக்கம், அச்சம் இருந்தது.

வேண்டுமென்றே முதலில் ராஜ்சபாவில் நிறைவேற்றுவோம்; பின் லோக்சபாவிற்கு எடுத்து செல்வோம் என முடிவு செய்தோம்.ஆனால் ராஜ்யசபாவில் விவாதம் முதல் ஓட்டெடுப்பு வரை வெங்கையா நாயுடுவின் சீரிய தலைமை காரணமாக அனைத்து கட்சி ஆதரவுடன் மாசோதா நிறைவேறியது.