இந்த வருடம் பத்ம விருதுகள் பட்டியலைப் பார்க்கையில், கடந்த பத்து ஆண்டுகளைப் போலவே அக்கறையுடன் சமுதாயத்திற்கு பங்களிப்பு செய்து வருவோர் கௌரவிக்கப்படுகிறார்கள் என்பது பளிச்சென்று தெரிந்தது. அது மட்டுமல்ல, இவர்கள் அவரவர் துறையில், கலையோ தொழிலோ, பல தசாப்தங்களாக அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபடுபவர்கள். தவிரவும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களை உச்சத்திற்கு ஏற்றி விட்டு மகிழ்ந்து வருபவர்கள். எடுத்துக்காட்டாக அவர்களில் சிலர்.
குமுதினி ரஜனிகாந்த் லாக்கியா (பத்ம விபூஷண்)
பாரதிய நடன வகைகளில் ஒன்று கதக். 70 ஆண்டுகளாக அந்த நடன வகைக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்த குமுதினி லாக்கியா ஆமதாபாதில் கடம்ப என்ற பெயரில் கலைக்கூடம் நிறுவி கதக் பயிற்சி அளித்து ஏராளமானவர்களின் நடனத் திறன் மேம்படுத்தி வருகிறார். தனி ஒருவர் ஆடும் முறைக்கு பதில் குழுவாக ஆடி கதக் வாயிலாக இதிகாச கதைகளை சொல்லும் புதுமை இவர் கைவண்ணம். பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகளும் சொற்பொழிவுகளும் நிகழ்த்தி உலக அரங்கில் பாரதத்தின் பெயர் விளங்க செய்து வருகிறார் 94 வயது குமுதினி.
சாத்வி ரிதம்பரா (பத்ம பூஷண்)
கடந்த 40 ஆண்டுகளாக ஆதரவற்ற பெண்களுக்கும் ஆதரவற்ற குழந்தை
களுக்கும் சாத்வி ரிதம்பரா நடத்தும் ‘பரம் சக்தி பீடம்’ நம்பிக்கை அளிக்கும் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது. பாதுகாப்பு தருவதுடன் பயிற்சி அளித்து அவர்களின் கல்வி தொழில் திறன் மேம்படுத்தி பொருளாதார சுயசார்புடன் சமுதாயத்துடன் ஒன்றி வாழ வழிகாட்டுகிறார் (ராம ஜன்ம பூமி மீட்பு இயக்கத்தில் வீர சாகசங்கள் புரிந்தவராக ஹிந்து சமுதாயம் ‘வாத்ஸல்ய கிராம்’ வாசியான இந்த பெண் துறவியை நினைவுகூர்கிறது)..
நிர்மலா தேவி (பத்மஸ்ரீ)
பிஹாரின் முஸபர்பூர் தந்த கலை சுஜனி எம்பிராய்டரி. அதன் உண்மையான முன்னோடியான நிர்மலா தேவி இந்த பாரம்பரிய கலையை மீண்டும் உயிர்ப்
பிக்கவும் ஊக்குவிக்கவும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை அர்ப்பணித்துள்ளார், இது இப்போது புவிசார் குறியீடு (GI) பெற்றுள்ளது. பூஸ்ரா மகிளா விகாஸ் சமிதியை நிறுவி 15 கிராமங்களில் 1,000த்துக்கும் அதிகமான பெண்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கியுள்ளார்
75 வயதான நிர்மலா தேவி.
வெங்கப்பா அம்பாஜி சுகதேகர் (பத்மஸ்ரீ)
கர்நாடகாவின் நாடோடி இசை கோந்தளி. அதில் தலை
சிறந்தவராக விளங்குகிறார் 81 வயது வெங்கப்பா அம்பாஜி சுகதேகர். பல தலை
முறைகளாக இந்த இசை கட்டிக் காப்பாற்றப்பட்டு வந்துள்ளது. வெங்கப்பா 73 ஆண்டுகளாக நாடோடி இசையை பல்லாயிரம் பாடல்களாக மக்கள் மத்தியில் இலவசமாக வழங்கி வருகிறார். மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார். இவரது சந்ததியினர் இந்த இசையை கற்று வழங்கி வருகிறார்கள்.
ரேவாகாந்த மஹந்தா (பத்மஸ்ரீ)
தன்னுடைய தாத்தாவிடமிருந்து மூங்கிலாலான முகமூடிகளை உருவாக்கும் நுட்பத்தைக் கற்றவர் அசாமின் ரேவாகாந்த மஹந்தா (89). சிறுவயதில் பசுத் தலை போன்ற முகமூடி செய்து தன் கைநுணுக்கத்தை நிரூபித்தவர். இவரால் நமது பாரம்பரிய கலையானது தொடர்ந்து நீடிக்கும் என்று பெரியவர்களுக்கு மகிழ்ச்சி. 600 ஆண்டுகளுக்கு முன் அசாமின் சமயப் பெரியவர் சங்கர்தேவ் தொடங்கிவைத்த இந்த கலை 700 மடாலயங்களில் (சத்ரங்கள்) பொலிந்தது. பிறகு அது 100க்கும் குறைவாக சுருங்கியது. அந்த நிலையில் ரேவாகாந்த மஹந்தா இந்தக் கலைக்குப் புத்துயிரூட்டி உலக அரங்கில் நிலைநாட்டினார்.
துர்கா சரண் ரன்பீர் (பத்மஸ்ரீ)
பாரதத்திலும் உலகின் பல நாடுகளிலும் உள்ள ஏராளமான மாணவர்களுக்கு 60 ஆண்டுகளாக ஒரிசா தந்த ஒடிஸி நடனம் பயிற்றுவித்து வருகிறார் குரு துர்கா சரண் ரன்பீர். இவர் சமகால முன்னணி ஆசான்.
பர்மார் லவஜிபாய் நாகஜிபாய் (பத்மஸ்ரீ)
குஜராத்தில் சௌராஷ்டிரா பகுதியில் 700 ஆண்டு பாரம்பரியம் உள்ள நெசவு நுட்பம் தாங்களீயா. 40 ஆண்டுகளாக பாடுபட்டு தங்காசியா (எஸ்.சி) சமூகத்தை சேர்ந்த பர்மார் லவஜிபாய் நாகஜிபாய் இந்த நெசவு முறையை உயிர்ப்பித்து ஊக்குவித்து வருகிறார். இந்த நுட்பத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
தலைமுறை தலைமுறையாக
நெசவாளர்கள், விக்ரகம் வடிப்போர், தெருக்கூத்துக் கலைஞர் என்று எந்தத் துறையினர் ஆனாலும் தலைமுறை தலைமுறையாக கலையை அல்லது நுட்பத்தை போற்றிப் பாதுகாத்து வருவது பாரத நாட்டின் கலாச்சார மரபு அந்த வகையில் பத்மஸ்ரீ விருதுபெற்ற மூன்று அன்பர்கள்:
பாரூக் அஹமது மீர் (பத்மஸ்ரீ)
காஷ்மீர் ‘கானி’ ரக பொன்னாடை / ஷால் உற்பத்தியில் 5 வது தலைமுறையாக ஈடுபட்டுள்ளார் பாரூக் அஹமது மீர். ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்த இவர் 60 ஆண்டுகளாக இந்த நுண்கலையில் புகழ் பெற்று விளங்குகிறார். கபீர்தாஸரின் இரண்டடி பாடல்கள் (தோஹா) காலிகிராபி முறையில் ஷால்களில் நெய்திருக்கிறார். இந்தக் கலை “என் முன்னோர் சொத்து” என்கிறார் இந்த ஸ்ரீநகர்வாசி.
புரிசை கண்ணப்ப சம்பந்தன் (பத்மஸ்ரீ)
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் கிராமம் ‘புரிசை’. இங்கு, 150 வருடங்களாக தெருக்கூத்துக் கலையை பேணி வரும் குடும்பத்தின் 5 வது தலைமுறை புரிசை சம்பந்தன். 40 ஆண்டுகளாக இவர் இக்கலையை வளர்த்து வருகிறார். புரிசையில் ‘தெருக்கூத்து பயிற்சி பள்ளி’ நிறுவி நடத்தி வருகிறார்.
ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி (பத்மஸ்ரீ)
சுவாமிமலை ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி 34 வது தலைமுறை ஸ்தபதி. உலக அளவில், உலோக சிற்பங்கள் தயார் செய்வதில் சுவாமிமலை புகழ் பெற்று விளங்குகிறது. சென்ற ஆண்டு டெல்லி பாரத மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இவர் கைவண்ணம். சோழர் பாணி சிலைகள் வடிப்பது இவர் சிறப்பு.