தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்ரீராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயிலின் அர்ச்சகர் பெரிய நம்பி நரசிம்ம கோபாலன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘கோயில் அர்ச்சகர்கள், மணியம், பேஷ்கார், ஒதுவார், தவில் நாதஸ்வர வித்வான் மற்றும் பிற ஊழியர்களுக்கு சம வேலை, சம ஊதியம் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்கவும், சம வேலைக்கு, சம ஊதியம் வழங்குவதற்கு எதிரான அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜரான தமிழ அகரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரகதிரவன், “ஒவ்வொரு கோயிலிலும் தனித்தனி நிர்வாகம், வரவு, செலவு மற்றும் பணியாளர்கள் உள்ளனர். அந்தந்த கோயில் வருமானத்தில் இருந்து தான் அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. முதன்மை கோயில்கள், அதற்கு அடுத்த நிலையில் உள்ள கோயில்கள், வகைப்படுத்தப்பட்ட கோயில்கள் மற்றும் வகைப்படுத்தப்படாத கோயில்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர முடியாது. நிதி சிக்கல்களை சந்தித்து வரும் சில கோயில்களில், பணியாளர்கள் நல நிதி உருவாக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. கோயில்களில் சம ஊதியம் சம வேலை என்ற கோட்பாடு நியாயமற்றது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் மாதம் ரூ. 750 சம்பளம் பெற்று வந்துள்ளார். தற்போது அவரது சம்பளம் ரூ. 2,984. இந்த சம்பளம். இதனுடன் கோயில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொருட்களைக் கொண்டு குடும்பம் நடத்துவது என்பது இயலாத காரியம். கோயில்கள் என்பது நமது கலாச்சாரத்தில் ஒரு அங்கம். தமிழகத்தில் அதிக கோயில்கள் உள்ளன. அதில் பல கோயில்கள் பழமையான கட்டடக்கலை, கலாச்சார மதிப்பைக் கொண்டிருப்பதால் அவை அப்படியே பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். இப்பணியை கோயில் ஊழியர்களால் மட்டுமே சரிவர செய்ய முடியும். மனுதாரர் பணிபுரியும் கோயிலுக்கு அறநிலையத் துறை சார்பில் நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கோயிலின் முழு பொறுப்பும் மாநில அரசை சார்ந்தது. கோயில் பணியாளர்களின் கோரிக்கையை அப்படியே விட்டுவிட முடியாது. அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசில் பணியாற்றும் பணியாளர்கள் ஆண்களாகவோ, பெண்களாகவோ இருந்தாலும் சமமான பாதுகாப்பும், வாழ்வாதாரமும் வழங்க வேண்டும். எனவே, குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் அடிப்படையில் பணியாளர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும். அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. மனுதாரர் பணிபுரியும் கோயில் பணியாளர்களுக்கு தமிழக அரசின் அரசாணை பொருந்தாது. அவர் புணிபுரியும் கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் 8 வாரத்தில் குறைந்தபட்ச ஊதியச் சட்டப்படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு, பணப்பலன்களை வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.