திருமதி சௌம்யா அன்புமணி சென்ற வாரம் எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார் புரட்டாசி சனிக்கிழமை “கோபாலம் எடுத்து, பெருமாளுக்குத் தளிகை அமுது செய்து பெயரன் பெயர்த்தியுடன் மனநிறைவாக பூஜை செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவுக்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். காரணங்கள் இரண்டு.
ஒரு சில பெரிய இடத்துப் பெண்களின் ஆடம்பர ஆன்மிகம் போலில்லாமல் தனது ஆன்மீக நம்பிக்கையையும் தன் குடும்ப பாரம்பரியத்தையும் அழகு தமிழில் அழுத்த
மாகப் பதிவு செய்ததற்குப் பாராட்டுக்கள். “கோபாலம் எடுப்பது” பற்றிய அவரது குறிப்பு பலரது மனதில் நினைவலைகளை எழுப்பியது; அதற்காகவும் பாராட்டுவோம்.
சிறுபிராயத்தில், புரட்டாசி சனிக்கிழமை
களில் வெங்கட்ராமா…..கோவிந்தா என்று வாசலில் குரல் கேட்கும். நெற்றியில் திருமண், கையில் மஞ்சள் துணியால் அலங்கரிக்கப்பட்ட செம்பு. அதில்தான் அரிசி சமர்ப்பிப்போம் என்கிறார் காவிரிக்கரைவாசி ஒருவர்.
எங்க ஊர்லல்லாம் “கோவிந்தா…கோவிந்தா …கோ…..விந்தா” தான் என்றார் வடசென்னைவாசி. சில ஊர்களில் “கோவிந்தா … அக்ஷயம் கோவிந்தா” என்று முழங்குவோம்; பெருமாள் பெயரைச் சொல்லி வீடுகளில் யாசகம் பெற்று அதைக் கொண்டு தளிகை செய்து வேங்கடவனுக்குப் படையலிட்டு சுற்றத்தாருடன் மகிழ்ந்து உண்ணுவது வழக்கம்… இது ஆந்திராக்காரர் ஒருவரின் ஆனந்தமான மலரும் நினைவு.
“நானும் சிறுவனாக திருமண் தரித்து கோபாலம் எடுத்திருக்கிறேன்… இப்போது ஞாபகம் வருகிறது” என்றார் ஒரு புதுச்சேரிக்காரர்.
வேங்கடவனைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் {வைணவர்கள், சைவர்கள் என அனைவரும்) தங்கள் குல வழக்கப்படி கோபாலம் எடுத்துப் படையலிடுவது மரபு.
கோபாலம் எடுப்பதில்தான் என்னென்ன மேன்மைகள் பாருங்களேன்! முதலில் பக்தி, அடுத்து பாரம்பரியத்தைக் கடைபிடித்தல், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என வள்ளுவர் கூறுவது போல் உற்றார் உறவினருடன் பகிர்ந்து பிரசாதத்தை உண்ணுதல். எல்லாவற்றிற்கும் மேலாக நமது பதவி, அதிகாரம், அந்தஸ்து, வசதியெல்லாம் மறந்து நான்கைந்து வீடுகளில் கையேந்தி நிற்கும் போது … ‘நான்’ என்ற அகந்தை அழிகிறதே. என்னால் தான் எல்லாம் என்ற அஞ்ஞான இருள் அகலுகிறதே! நம்மைப் பண்படுத்த இதைவிடச் சிறந்த பயிற்சி உண்டா என்ன?
‘தெய்வத்துக்காக நான்கைந்து வீதிகள் செல்வது
போல் நாம் நம் ஹிந்து சமுதாயத்திற்காக, தேசத்துக்காக, தினம் நாலைந்து வீடுகள் ஏறி இறங்கலாமே?’ என்று நமக்குத் தோன்றச் செய்கிறது, கோபாலம் எடுத்ததில் நமக்குக் கிடைத்த அனுபவம். நாலு நல்ல கருத்துகளை, விழிப்புணர்வு தரும் தகவல்களை பகிரலாம்.
நிகழும் அமுதகாலத்தில் இது பாரதத்தைக் கட்டமைக்க நம்மால் இயன்ற சிறுதுளி. பெரு
வெள்ளமாக்குவது கோவிந்தன் பொறுப்பு.
குறையொன்றுமில்லை, கோவிந்தா!