குறைந்த பணவீக்கம்

ஏப்ரல் மாதத்தில் பாரதத்தின் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ) தெரிவித்துள்ளது. உணவு பணவீக்கம் குறைந்தது தான் ஏப்ரல் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்கம் குறைய முக்கியமான காரணமாக உள்ளது. மார்ச் மாதத்தில் 4.79 சதவீதமாக இருந்த உணவு பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் 3.84 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் கிராமப்புறத்தில் சில்லறை பணவீக்கம் 4.68 சதவீதமாகவும், நகர்ப்புறத்தில் சில்லறை பணவீக்கம் 4.85 சதவீதமாகவும் உள்ளது. இதேபோல, எரிபொருள் விலையிலும் எவ்விதமான மாற்றமும் இல்லாத காரணத்தால் உணவு பணவீக்கம் குறைந்துள்ளது. மேலும், நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் நீண்ட கால முயற்சிகள் தற்போது பலன் அளிக்கத் துவங்கியுள்ளதாகவே தெரிகிறது. மே மாதம் போதுமான மழை பெய்து வரும் நிலையில் உணவு பொருட்களின் விளைச்சலும் சிறப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், மே மாதமும் சில்லறை பணவீக்கம் ஆர்.பி.ஐ வரம்பு அளவுக்குள் கட்டாயம் இருக்கும் என்பதால், வரும் ஜூன் 6, 7, 8 ஆகிய தேதிகளில் நடக்கும் ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும், தற்போது அமெரிக்க அரசின் கடன் வரம்புக் கொள்கையில் நிலவும் கடுமையான பிரச்சனைகள், சர்வதேச சூழல்கள், கச்சா எண்ணெய் விலை, உலக மற்றும் உள்நாட்டு பொருளாதா சூழல்கள் உள்ளிட்ட பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டே ரிசர்வ் வங்கி இதில் முடிவெடுக்கும்.