சுவாமி விவேகானந்தரின் நேரிடை சீடர்களில் ஒருவர் சுவாமி நிஸ்சயானந்தர். அவர் இமயமலையின் அடிவாரத்தில் ‘கங்கல்’ என்னுமிடத்தில் உள்ள சேவாஸ்ரமத்தில் தங்கியிருந்தார். தினசரி பல கிராமங்களுக்கு நடந்தே சென்று கவனிக்க ஆளின்றி தவித்துக் கொண்டிருக்கும் நோயாளிகளையும் காலரா, வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு, தன்னை மறந்து மயங்கிக் கிடக்கும் நோயாளிகளையும் அன்போடு அரவணைத்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ சேவை புரிந்து வந்தார். நடக்கவே முடியாத சில நோயாளிகளைத் தனது தோளில் தூக்கிக் கொண்டு தனது சேவாஸ்ரமத்திற்கு கொண்டு வந்து பராமரித்து வந்தார்.
ஒருநாள் மகேந்திரநாத் குப்தா என்னும் துறவி ஆன்மிக சாதனைகள் புரிவதற்காக சேவாஸ்ரமம் வந்து, நிஸ்சயானந்த சுவாமியுடன் தங்கினார். மருத்துவ தொண்டுகள் தவிர சுவாமிஜி தியானமோ, ஜெபமோ, பூஜைகளோ எதுவும் செய்வதில்லை. இதை கவனித்த மகேந்திரநாத் நிஸ்சயானந்தரிடம், ஒரு துறவி தொண்டுகள் செய்தாலும் கூட, தியானம், ஜபம் செய்வது அவசியமானது என்று வலியுறுத்தினார்.
இதைப் பணிவுடன் கேட்ட நிஸ்சயானந்தர், சுவாமி விவேகானந்தர் என்னிடம், ‘துன்பப்படுவோருக்காக, அனாதைகளுக்காக, கைவிடப்பட்டவர்களுக்காக நீ சேவை செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அந்த வார்த்தைகள் எனக்குள் வேத வாக்காக ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனக்கு எந்த பஜனையும் தியானமும் மந்திரமும் ஜபமும் தெரியாது. மாறாக ஒன்றே ஒன்றுதான் தெரியும். அது என் குருநாதரின் சொற்படி நடப்பது” என்றார்.
படமும் தகவலும்: யதீஸ்வரி ராமகிருஷ்ணப்ரியா அம்பா, உளுந்தூர்பேட்டை
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்