ஜூலை 1993ல் ‘ஷுமேக்கர் லெவி’ என்ற ஒளி நட்சத்திரம் ஒன்று மணிக்கு 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று வியாழன் கோளை மோதியது. மணிக்கு கிட்டதட்ட 2 லட்சம் கிலோ மீட்டர் வேகம் என்றால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?
ஆனால் வியாழன் கோள் எதுவுமே ஆகாமல், தூசி விழுந்தது போல எரி நட்சத்திரத்தை தட்டிவிட்டுக் கொண்டது. இவ்வளவு வேகத்தை வியாழன் தாக்குப்பிடித்தது எப்படி? அதுதான் குரு பலம்… (இந்த வியாழன் கோளைத்தான் நாம் குரு என்று கும்பிடுகிறோம்). குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும்… எப்படி…? அதற்கு முன் வியாழன் கோளைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
சூரிய குடும்பத்தில் அதிக நிறை கொண்டது வியாழன். சூரிய குடும்பத்தின் பீமன் என்பது இதன் செல்லப் பெயர். சூரிய குடும்பத்தில் உள்ள எல்லா கோள்களின் நிறையைக் கூட்டினால் கிடைக்கும் நிறையை விட இரண்டரை மடங்கு அதிக நிறை கொண்டது வியாழன். வியாழன் கோளின் விட்டம் (ஒரு முனைக்கும் இன்னொரு முனைக்கும் இடையே உள்ள தூரம்) பூமியின் விட்டத்தைப் போல பதினோரு மடங்கு.
வியாழன் கோளில் உள்ள அடுக்கில் ஹைட்ரஜன் வாயு திண்மமாக உறைந்து போயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். வியாழனின் வளிமண்டலத்தில் உள்ள மேகங்கள் வட்ட வளையப் படலங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் படலங்கள் தான் வியாழன் கோளைச் சுற்றி வளையங்களாக சுழல்கின்றன.
வியாழன் கோளில் காணப்படும் அடர் சிவப்பு நிறத்திட்டுகள் ஆச்சரியமானவை. மேகங்களின் கொந்தளிப்பில் உருவாகின்ற இந்த பள்ளங்கள் அல்லது திட்டுகள் சிவப்பு நிறமாக இருப்பதற்கு சிவப்பு பாஸ்பரஸ் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
வியாழனின் வளி மண்டலத்தில் சாதாரண பாஸ்பரசும் ஹைட்ரஜனும் சேர்ந்த ‘பாஸ்பின்’ ஒரு நச்சுப் பொருளாக வியாழனை வலம் வருகிறது. இந்த பாஸ்பின் வளிமண்டலத்தின் மேல் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சூரிய ஒளியில் வேதிவினைக்கு ஆட்படுகிறது. இந்த வேதி வினையின் காரணமாக சிவப்பு பாஸ்பரஸ் உருவாகி சிவப்பு நிறத் திட்டுகள் உருவாகலாம் என்றும் கணித்திருக்கிறார்கள்.
ஓ.கே. இரண்டு லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் தன் மீது மோதிய ஷு மேக்கர் லெவி” எரிநட்சத்திரத்தை வியாழன் எப்படி தாக்குப்பிடித்தது? விளக்கம் ரொம்ப சிம்பிள். வியாழன் பெரிய காற்றுக்கோளம். காற்று நிரப்பிய ஒரு பெரிய பந்தினை கையால் குத்தினால் எப்படி பந்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதோ, அதே மாதிரி தான் வியாழனுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை.
குரு (வியாழன்) போல, காற்று மாதிரி நாமும் இருந்துவிட்டால் கவலை இல்லை, இல்லையா?