குருபெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

சிம்மம் :

முன்னேற்றம் பற்றியே சிந்திக்கும் சிம்மராசி அன்பர்களே!

ஆன்மிக சிந்தனையும் பேச்சாற்றலும் உடைய நீங்கள் ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவர்கள். உயர்பதவியில் இருந்தாலும் எளியவர்களிடம் இரக்கம் கொண்டவர்கள். சேவை மனப்பான்மையில் நாட்டம் உண்டு. அதே சமயம் கோவமும் உண்டு. பிரச்சினை கண்டு அஞ்சாமல் துணிந்து செயல்படுவீர்கள்.

உங்கள் சிம்மராசிக்கு 5,8–க்கு உரிய குரு பகவான் 4–ம் இடமான விருச்சிக ராசியிலிருந்து 5–ம் இடமான குரு பகவானின் சொந்த வீடான தனுசுவிற்குள் செல்கிறார். உங்கள் ராசியை தனது பார்வையினால் புனிதப் படுத்துவது மட்டுமல்ல; 9, 11 ஆம் ஸ்தானங்களான மேஷத்தையும், மிதுனத்தையும் பார்வையிடுகிறார்.

தனுசு ராசியில் தங்கியுள்ள சனி, கேது ஆகியோருடன் குருவும் இணைவதால், இது நாள் வரை இருந்து வந்த அனைத்து சிக்கல்களும் விலகும். பொருளாதார வளம் அதிகரிக்கும். புத்தி சாதுர்யமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். கவுரவம், அந்தஸ்து, மரியாதை, பதவி எல்லாம் கிடைக்கும். நண்பர்களால் நன்மை உண்டு. வாகன வசதி கிடைக்கும். சிறந்த நீதிமானாகவும் விளங்குவீர்கள்.

ராகு பகவான் 11–ல் அமர்ந்துள்ளது மேலும் உங்களுக்கு நன்மை தரும். விதவிதமான ஆடை, அலங்காரங்களும், உணவுகளும் கிடைக்கும். வெளிநாட்டு அன்பர்களால் வளமான வாழ்வுக்கு வழிகிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள்:

உயரதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு பொறுப்பு மிகுந்த பதவி கிடைக்கும். அதேசமயம் வேலையில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அரசுப் பணியில் உள்ளவர்கள் அதிக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும். ராகு– கேது இடமாற்றத்தாலும், அதிச்சார குரு மகரத்திற்குள் செல்லும் காலமும் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டியதிருக்கும். விடாமுயற்சியும் நம்பிக்கையும் உங்களின் மனோபாவத்தை நல்ல விதமாக மாற்றும். பணிகளில் பதற்றம் தவிர்க்க வேண்டும். உங்களுடன் பணியாற்றுபவர்களின் ஆதரவு கிடைக்காது.

அவசரத் தேவைகளுக்குத் தேவையான பணம் கடனாக கிடைக்கும். அலைச்சலும் ஆரோக்கிய குறைவும் உங்களின் பணியினை பாதிக்கும் என்றாலும், பொருளாதாரம் எப்போதும் போல நிலையாக இருக்கும். உங்களை பாராட்டுபவர்களிடம் நோக்கத்தை புரிந்து கொண்டு பழகவும். ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியே சிந்தித்து பிரச்சினைகளை தீர்க்க முயற்சி தேவை. கடின உழைப்பே வளர்ச்சிக்கு உதவும்.

பெண்மணிகள்:

பல்வேறு தடைகளை கண்ட சுபநிகழ்ச்சிகள் குருவின் பார்வையினால் இனிதே நடைபெறும். உங்களின் பாக்கியஸ்தானமான மேஷத்தையும், லாப ஸ்தானமான மிதுனத்தையும் அதில் சஞ்சரிக்கும் ராகுவையும் குரு பார்வை புனிதப்படுத்துவதால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

இல்லறத் துணையின் குணம் அறிந்து செயல்படவும். மகிழ்ச்சியான நேரத்தில் உங்களின் எண்ணத்தை எடுத்துரைத்து, குடும்பத்தின் வளர்ச்சியை காணலாம். குடும்ப பிரச்சினைகளில் வேறு நபர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். சகோதரர்களின் வளர்ச்சி கிடைக்கும். வசதி குறைந்த உறவினருக்கு உள்ளன்போடு உதவி செய்யுங்கள்.

மாணவ மணிகள்:

நண்பர்களில் சிலர் தக்க சமயத்தில் உதவிடுவார்கள். சிலர் பிரச்சினைகளை உண்டாக்கி விடுவார்கள் என்பதால் புரிந்து கொண்டு பழக வேண்டும். கிரகங்களின் இடமாற்றமும், அதிச்சாரமும், வக்கிரகதியும் உங்களின் செயல்களை மாற்றி அமைக்கும். வாகனங்களால் செலவு அதிகரிக்கும். பாடங்களில் சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும். உயர் கல்விக்கான முயற்சிகளை ஆலோசகர்களின் வழியே செய்வதின் மூலம் சுலபமாக நிறைவேறும். நேர்மையான முறையில் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்:

பொருளாதார பிரச்சினைகள் ஏற்றத் தாழ்வுடன் இருக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டியது அவசியம். பங்குதாரர்களின் மனப்போக்கை அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் அவர்களின் அறிவுரையும் நல்ல பலனைத் தரும். ராகுவால் நல்ல லாபத்தை பெறலாம் என்றாலும் புதிய தொழிலை துவக்குவதோ, விரிவுபடுத்துவதோ இப்போது தவிர்க்க வேண்டும். அதீத ஆசை காட்டும் நபர்களிடமிருந்து விலகிச் செல்லவும். போட்டியாளர்களை சமாளிக்கவும் பழக வேண்டும். பெண்களால் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையுடன் பழகவும். தனித்திருப்பத்தை தவிர்க்கவும்.

அரசியல்வாதிகள்:

கட்சியினரின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கட்சியின் ரகசியங்களை கண்டு கொள்ளக்கூடாது. எதிர்க்கட்சியினரிடத்திலும் ஒதுங்கிச் செல்வது சந்தேகத்தை தவிர்க்கும்.

உங்களின் கருத்துகளை கேட்கும்போது மட்டும் எடுத்துரைத்தால் போதும். பொதுவெளியில் பேசும்போது குற்றம் குறைகளை சொல்லிவிட வேண்டாம். உங்களின் சுய விருப்பத்தை தொண்டர்களிடையே சொல்வதை தவிர்க்கவும்.

பரிகாரம்:

முருகப்பெருமானை மனமார வழிபட்டால் நலமும் வளமும் தழைத்தோங்கும்.

கன்னி :

கனிவுடன் பழகும் கன்னி ராசி அன்பர்களே!

நீங்கள் சமூகப் பணிகளில் நாட்டம் கொண்டவர்கள். இரக்க குணம் கொண்ட உங்களுக்கு சுயகவுரவமும் உண்டு. சிறுவயதில் அனுபவித்த கசப்பான சம்பவங்களை கண்ட நீங்கள் பிற்காலத்தில் செல்வமும் செல்வாக்கும் பெற்று மகிழ்வீர்கள்.

உங்கள் கன்னி ராசிக்கு 4,7 க்குரிய குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குள் இனி சஞ்சரிக்கப்போகிறார். இதுவரை 3–ம் இடத்தில் இருந்த குரு சாதகமான பலனை தர இயலவில்லை என்றாலும் பெரும் பாதகம் எதுவும் செய்யவில்லை. சனி, கேது ஆகிய இருவரும் குருவின் வீட்டில் அமர்ந்துள்ள நிலையில் தனது சொந்த வீடான தனுசுவிற்குள் குருபகவான் இடம் பெயர்கிறார். 4–ல் இருந்தாலும் நன்மை தர இயலாதவர் குரு என்றாலும் அதிச்சாரம் பெற்று 5–ம் இடமான மகரத்திற்குள் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதாரம் வளரும். ராகுவினாலும் நன்மை இருக்காது. அதே சமயம் கேது 3–ல் காலடி வைத்து எதையும் சமாளிக்கும் தைரியத்தை அளிப்பார்.

ஒவ்வொரு பிரச்சினையையும் பிரத்யோகமாக சந்தித்து சிக்கல்களை தீர்க்க முடியும். கடின உழைப்பே வெற்றியைத் தரும். சேமிப்புகள் செலவாகலாம். கடன் தருவதை தவிர்க்கவும். ஆதாயம் பெற அவசரம் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்கள்:

அதிக பணி பளுவினால் அயர்ச்சி ஏற்படும். அதிக நேரம் உழைக்க வேண்டியது இருந்தாலும் நிதானத்துடன் செயல்பட்டால் தேவையான உதவிகள் கிடைக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு தானாகவே கிடைக்கும். சக பெண்களால் உதவி கிடைக்கும். குடும்பத்து உறுப்பினர்களால் அரவணைப்பு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதால் மகிழ்ச்சி கிடைத்தாலும் பொறுப்பும் அதிகரிக்கும்.

உறவினர் வகையில் விரோதம் வரலாம். எவரிடமும் வாக்குவாதம் தவிர்க்க வேண்டும். செலவுகளை தவிர்க்க முயற்சி செய்யவும். எடுத்துக் கொண்ட பொறுப்புகளை கவனத்துடன் செய்யவும்.

வெளியூரில் பணியாற்றிய சிலர், இனி குடும்பத்துடன் வாழ முடியும். முன்பின் தெரியாத பயணிகளிடம் எச்சரிக்கை தேவை. பழக்கம் தொடர வேண்டாம்.

பெண்மணிகள்:

மன உளைச்சலை தவிர்த்துவிட்டு உற்சாகத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், பொறுமையும் நிதானமும் பெருமை தரும். விட்டுக் கொடுத்துப் போவது குடும்ப நன்மைக்காக என்பதை உணர்ந்து, இல்லறத் துணையின் கருத்துக்கு இணங்கிச் செல்லுங்கள் தடைபட்ட திருமணங்கள் நடைபெறும்.

8,10,12–ம் இடங்களை குரு பார்ப்பதால் நோய்கள் அகலும். சுபச் செலவு ஏற்படும். கேதுவின் 3–ம் இட சஞ்சாரத்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உற்சாகத்துடன் செயலாற்றி குடும்பத்தை மேன்மை நிலைக்கு எடுத்துச் செல்வீர்கள். அசையா சொத்துக்களின்  தகராறுகள் தீரும்.

அன்பு இல்லங்களுக்கு உதவிடுங்கள்!

மாணவமணிகள்:

தன்னம்பிக்கையுடன் நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்றால் வெற்றி பெற இயலும். விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளும் பாராட்டுதல்களும் கிடைக்கும். சகவாசத்தில் நல்லவர்களை தேடி பழகவும். முக்கிய கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் ஆசிரியர்களின் ஆலோசனை பெறுவது அவசியம். தீவிரமான பயிற்சிகள் செய்தால் தான் தேர்வுகளில் வெற்றி பெற இயலும் எதிர்பாலினத்தவரின் ஈர்ப்பு ஏற்படாமல் உங்கள் லட்சிய பாதையில் செல்லவும். துணிவுடன் செயல்படுங்கள். சாதித்துக் காட்டுங்கள்.

சிறுதொழில்,வியாபாரம்:

குரு பகவான் 3லிருந்து 4ஆம் இடம் செல்வதும் அதிச்சாரமாக 5–ம் இடம் செல்வதும் சனி வக்கிரம் பெறுவதும் என இருப்பதால் தொழிலில் தொய்வு ஏற்படாது. போட்டியார்கள் பிரச்சினை தரலாம், பங்குதாரர்கள் வம்புக்கு இழுக்கலாம் என்றாலும் அனைத்தையும் சமாளித்து வெற்றி காண இயலும். வாடிக்கையாளர்களை வசமாக்கிக் கொள்ள முயற்சி செய்யும். பணம் விரையம் ஆகும் என்பதால் பொறுப்புகளை நேரிடையாக கவனிக்கவும்.. நம்பிக்கையானவர்களை எப்போதும் அருகிலேயே வைத்துக் கொள்ளவும்.

அரசியல்வாதிகள்:

நல்லவர்களின் தொடர்பை அதிகப்படுத்த வேண்டும். சாதாரண மனிதர்களின் பிரச்சினையை தீர்க்க பணி செய்ய வேண்டும் பதவி, பொறுப்புகள் நாடி வரும்போது, சமூகத்தில் சில பெரிய மனிதர்களின் நட்பும் கிடைக்கும். ராகு சாதகமற்று இருப்பதால் நேர்மையாகச் செயல்பட்டால் பிரச்சினை இன்றி செயலாற்றலாம். ஆன்மீகத்தில் நிலைத்திருக்கும் பாரம்பரிய மகான்களின் தரிசனம் மன அமைதியைத் தரும்.

பரிகாரம் :

பத்ரகாளியை பக்தியுடன் வழிபட்டால் சூரியனைக் கண்ட பனிபோல் துன்பம் பறந்தோடி விடும்.

துலாம் :

தார்மீக குணங்களைக் கொண்ட துலாராசி அன்பர்களே!

உழைப்பிற்கு அஞ்சாது, நேர்மையுடன் செயலாற்றும் நீங்கள், பேச்சாற்றலும் மிக்கவர். அன்புக்கு அடிபணியும் நீங்கள் அடுத்தவர் விஷயங்களில் தலையிட மாட்டீர்கள். உங்களின் துணிவான வாழ்வில் சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள்.

உங்கள் துலாம் ராசிக்கு ௩,௬ க்கு உடைய குருபகவான், இதுநாள் வரை தன ஸ்தானமான விருச்சிகத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை அளித்துள்ளார். வேலை, சொத்துகள் வாங்குவது, சுப நிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்தி வைத்துள்ளார். தற்போது ஆட்சி வீடான தனுசுவில் அமர்ந்து வெற்றிகளை அள்ளித்தரும் சனி, கேது ஆகியோருடன் குருவும் இணைகிறார். அங்கிருந்து களத்திர ஸ்தானமான மேஷம், பாக்கிய ஸ்தானமான மிதுனம், லாபஸ்தானமான சிம்மம் ஆகியவற்றை தனது சுபப்பார்வையால் புனிதப்படுத்துகிறார். மேலும், மிதுனத்தில் உள்ள ராகுவை நேரிடைப் பார்வையாக நோக்குவதால் உங்களுடைய தந்தையின் உடல்நிலை, வெளியில் சொல்ல இயலாத மனக்குறைகள், உத்தியோகம், வருமானம் ஆகியவற்றை பற்றி கவலைகள் இனி நீங்கும்.

சனி பகவானின் வக்கிர காலத்தில் அவர் தரும் நற்பலன்கள் குறையும். அதேசமயம் அவரது பார்வையினால் சாதகமான பலன்களும் நடைபெறும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எக்காரியத்தையும் ஆலோசித்து செயல்படுத்துவதும் குறைகளைக் கண்டு குற்றம் கூறுவதைத் தவிர்ப்பதும் நன்று.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆன்மிகப் பயணமும், ஆன்றோர்களின் ஆசியும் கிடைக்கும். ௩–ல் உள்ள கேதுவும் உங்களின் மேன்மையான முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார். அமைதியாக இருந்து, ஆற்றலை பெருக்கிக் கொள்ளுங்கள்.

உத்தியோகஸ்தர்கள்:

அந்தஸ்தும் அதிகாரமும் பெற்றிருந்த உங்களின் நிலையில் சமயோஜிதமாக செயல்பட்டு வெற்றிகளை அடைந்தீர்கள். பதவி உயர்வும், சம்பள உயர்வும், ஊதிய உயர்வும் பெற சற்று தாமதமாகும். உங்களின் விருப்பங்கள் நிறைவேற காத்திருக்கத்தான் வேண்டும். ஆதாயங்களைப் பெற அவசரம் வேண்டாம்.

சக ஊழியர்களிடம் சந்தேகம் கொள்வதும், பதற்றமாக பணிபுரிவதும் தவிர்க்க வேண்டும். ௩–ல் உள்ள சனி, கேது ஆகியோர் சாதகமாக இருப்பதால், உங்களின் தகுதியிலிருந்து கீழே இறக்க முடியாது என்பதால் அனைவரிடமும் அன்புடன் பழகவும். மூன்றில் அமரும் குருவால் உங்களின் முன்னேற்றத்தை தடுக்க இயலாது. ௭,௯,௧௧–ம் ஸ்தானங்களைப் சுபப்பார்வை பார்ப்பதினால் குருவின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறீர்கள். ௯–ல் உள்ள ராகுவை குரு ௭–ம் பார்வையாக நோக்குவதால் தந்தைக்கு ஏற்பட்ட சில சங்கடங்கள் நீங்கும். அலைச்சலை தவிர்க்கவும். ஆரோக்கியம் பேணவும். அதிகம் பாராட்டுபவர்களை அருகே சேர்க்க வேண்டாம். பிரச்சினைகளை நேரில் சந்தித்து பேசி தீர்க்கவும். கடின உழைப்பு நற்பலன் தரும்.

பெண்மணிகள்:

குருபகவான் உங்களின் ௭–ம் வீடான மேஷத்தை நோக்குவதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். இளம் பெண்களுக்கு திருமணம் நடைபெறும். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணி, வீடு, மனை வாங்கும் பணி இப்போது நடைபெறும்.

இல்லறத்துணையின் உடல்நிலை ஆரோக்கியம் பெறும். உங்களின் விருப்பங்களைக் கேட்டுப் பெறலாம். குடும்பத்தின் மேன்மைக்காக நீங்கள் எடுக்கும் சில வேலைகள் அனைவரின் விருப்பத்துடன் நடைபெறும். சகோதரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். குருவின் அதிச்சார காலத்தில் மேலும், சுப காரியங்களில் மூன்றாவது நபரின் தலையீட்டை தவிர்க்கவும். வேத பாடசாலைக்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள்.

மாணவ மணிகள்:

பாடங்களில் சிறந்து விளங்கமுடியும். உயர்கல்விக்கான முயற்சி செய்வதில் ஏற்படும் தடை தாமதங்களை கண்டு அஞ்சாமல் தொடர் முயற்சி செய்தால் நற்பலன் கிடைக்கும். கல்வியில் முழு கவனமும் இருக்க வேண்டும். நல்ல நண்பர்களை இனம் கண்டு பழகவும். குரு அதிச்சாரமாக மகரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் மாணவர்கள் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். எச்சரிக்கையுடன்  இருக்க வேண்டும்.

சிறுதொழில், வியாபாரம்:

தொழிலில் போட்டியாளர்கள் விலகுவார்கள். பணியின்காரணமாக வெளியூர் செல்ல நேரிடலாம். வருமானம் குறையாது. வசதி வாய்ப்புகள் இன்றி அலைச்சல் அதிகரிக்கும். அரசு ஆதரவைப் பெற்று வளர்ச்சி காணலாம். வழக்குகள் சாதகமாகும். சனி வக்கிர காலங்களிலும், குரு அதிச்சார காலங்களிலும் ராகு– கேது இடம்மாறிய பின்னரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

அரசியல்வாதிகள்:

செலவுகள் அதிகரிக்கும். கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை, உள் விவகாரங்களில் அதிகம் கண்டுகொள்ள வேண்டாம். இரண்டாம்நிலை தலைவர்களின் போட்டா போட்டியிலிருந்து விலகி நிற்கவும். எதையும் எதிர்பார்க்காமல் அனைவரிடமும் பழக வேண்டும். சிலரின் நம்பிக்கை துரோகத்தை கண்டு கலக்கம் ஏற்படும். தொண்டர்களின் ஆதரவில் ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக மக்கள் பணியில் ஈடுபட வேண்டும்.

பரிகாரம்:

வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகளை வழிபட்டால் கவலைகள் நீங்கும், களிப்பு ஓங்கும்.

விருச்சிகம் :

திறமையை பெற தீவிரமாக பயிற்சி பெறும் விருச்சிக ராசி அன்பர்களே!

பரந்த மனமும் சிறந்த பேச்சாற்றலும் மிகுந்த உங்களுக்கு ஆன்மிக எண்ணமும் உண்டு. ஊக்கத்துடன் பணியாற்றும் நீங்கள், உழைப்புக்கு அஞ்ச மாட்டீர்கள். தூய மனம் உள்ளவர்கள் என்பதால் துன்பங்களை கண்டு கொள்ள மாட்டீர்கள்.

விருச்சிக ராசிக்கு ௨, ௫–க்குரிய குரு பகவான் தனது ஆட்சி வீடான தனுசு ராசிக்கு செல்கிறார். ௨–ல் உள்ள சனி, கேதுவினால் ஏற்பட்டு வரும் இன்னல்களை ஆட்சி செய்யும் குரு குறைத்திடுவார். மேலும் வக்கிரம் பெறும் சனி, தனது தீய பலன்களை தர இயலாத நிலையில் இருப்பார். ராகு–கேதுக்களின் இடமாறுதல்களும் ஓரளவு நல்ல மாற்றங்களை தருவார்கள்.

பொதுவாக ௨–ல் குரு சஞ்சரிக்கும் காலங்களில் வாக்கு வன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அதேசமயம் ராகு–கேதுக்கள் உடல்நலனில் பிரச்சினைகளைத் தரலாம். பொருட்கள் திருடு போகலாம். மனநிலையில் உற்சாகம் பிறக்கும். துணிச்சல் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். பகை உள்ளம் கொண்டவர்களின் பழகும் தன்மையில் நல்ல மாற்றம் உண்டாகும். ஏழரைச் சனியின் இறுதியான காலக்கட்டத்தில் தங்களுக்குத் தேவையான நற்பலன்களை கொடுத்துவிட்டு செல்வார் என்பதால் விசனப்பட வேண்டாம். குருபகவானில் ஓராண்டு சஞ்சாரத்தால் ஏற்றங்களை காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்:

பணியிடத்தில் உங்களின் வளர்ச்சிக் குறித்து பொறாமை அடைந்தவர்கள், இடம் மாறி செல்வதால் இதர சக ஊழியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். துணிவுடன் செயலாற்றும் உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். வளர்ச்சி தொடரும். குரு, தனுசு ராசியில் உலா வரும் காலங்களில் வெளியூரில் வேலை பார்த்தவர்கள் குடும்பத்துடன் இணைய முடியும். குரு அதிச்சாரமாக மகரத்திற்குள் வசிக்கும் நேரங்களில் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். மீண்டும் உத்தியோக விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். பணியில் பலவித தொல்லைகளும் ஏற்படும். அதிக வேலையினால் அயர்ச்சி ஏற்படும். குருவின் பார்வை பலத்தினால் பகையை வெல்லலாம். கடன் தீரும். ஆரோக்கியம் ஏற்படும். அதிருஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்மணிகள்:

இளம் பெண்களுக்கு தடைபட்டிருந்த திருமணங்கள் நடைபெறும். குழப்பமான மனநிலை மாறி, தெளிவான சிந்தனை பிறக்கும். மழலை விரும்பிய பெண்கள் மனம் மகிழும் செய்தி கிடைக்கும். வசதியான வீடு வாங்க முடியும். உறவினர்களால் நன்மை உண்டு. வேலை தேடியவர்களுக்கு உதவி கிடைக்கும். தேவைக்கு அதிகமாக இருக்கும் பணத்தை சேமித்து வைப்பீர்கள். இல்லறத் துணையுடன் இணக்கமாக இருக்கப் பழக வேண்டும். குருவின் அதிச்சாரத்தால் மந்த நிலை உருவாகும். ராகு–கேது பெயர்ச்சியால் குடும்பத்தில் நிலவப் போகும் உரசல்களை தணிக்க விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

கோசாலை சென்று பசுவிற்கு உணவிடுங்கள்!

மாணவமணிகள்:

ஆசிரியரின் அனுபவத்தை கேட்டுப் பெற்ற நீங்கள், உயர் கல்விக்கான ஆலோசனையும் பெறுவீர்கள். இயல்பிலேயே எதையும் ஆராயும் குணமுடைய உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். சுய தொழில் விரும்பும் மாணவர்களுக்கு அரசு நிறுவனங்கள் ஆதரவு தரும். விளையாட்டுகளிலும் பரிசு, பாராட்டுகள் கிடைக்கும். மனம் தளர்ச்சி அடையாமல் பார்த்துக் கொண்டால் வளர்ச்சியைக் காணலாம்.

சிறுதொழில், வியாபாரம்:

குருபகவானில் இரண்டாம் இட சஞ்சாரக் காலத்தில் பகைவர்களின் தொல்லைகள், பங்குதாரர்களின் குறுக்கீடுகள் என ஏற்பட்டாலும் அனைத்தையும் வெல்லும் வல்லமை உருவாகும். நம்பிக்கை உள்ள நண்பர்கள், ஆலோசகர்கள் வழியாக முன்னேற்றம் கிடைக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். அதேசமயம் குறைந்த முதலீட்டில் துவக்கப்படும் தொழில் லாபம் ஈட்டும். நேரடியாக தொழிலை கவனிக்க வேண்டும். சொந்தமான கட்டிடத்திற்கு தொழிலை மாற்ற முடியும். குரு அதிச்சார காலத்திலும், சனி வக்கிர காலத்திலும் எச்சரிக்கையுடன் வரவு–செலவுகளை கண்காணிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள்:

சக அரசியல் கட்சியினரில் நம்பிக்கையானவர்களை உடன் வைத்துக் கொண்டு செயலாற்றவும். மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் செயல்பட்டால் தேர்தல் காலத்தில் வெற்றி தானாகவே கிடைக்கும். மகான்களை தேடிச் சென்று ஆசியைப் பெற்று வந்தால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் நிலைத்து நிற்கும். தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்:

பெருமாளை உளமார வழிபட்டால் உயர்வும், உன்னதமும் கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *