பஞ்சாப் மாநிலம், கபுர்தலாவில் உள்ள குருத்துவாராவை கைப்பற்றுவதில் ஏற்பட்ட மோதலில் நிஹாங் சீக்கியர் பிரிவை சேர்ந்த ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ்காரர் பலியானார். 3 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கபுர்தலாவில் உள்ள குருத்துவாரா
இந்த சம்பவத்தை தொடர்ந்து குருத்துவாராவை ஆக்கிரமித்த குற்றச்சாட்டில் நிஹாங் பிரிவை சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையானது மேலும் தொடர்ந்து வருகிறது. குருத்துவாராவின் உள்ளே 30 பேர் வரை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கபுர்தலா குருத்துவாரா பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நிஹாங் சீக்கியர்கள் பிரிவை சேர்ந்தவர்கள் நீல நிற கயிறு, அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகை மற்றும் பெரும்பாலும் கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் காணப்படுவர். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கை அமல்படுத்த முயன்ற போது நிஹாங் போராட்டக்காரர்கள் போலீஸ் ஒருவரின் கையை வெட்டியது குறிப்பிடத்தக்கது