குடும்பங்கள் சிறக்க நமது பங்கும் இருக்க வேண்டும்

தமிழக அரசு கல்வி முறை மனிதனை முழு மனிதனாக ஆக்குவதற்கு பதில் பலவீனமான, தன்னம்பிக்கையற்ற மாணவனாக தான் வளர்த்து வருகிறது. இந்த கல்வி முறையினால் சமூகத்தில் தற்கொலைகள், மதமாற்றம் போன்றவை சர்வ சகஜமாக நடக்கின்றது. இந்த நிலையை மாற்ற குடும்பம் என்ற மையம் முழு பலத்துடன் பணி புரிய வேண்டும்.

நமது கலாச்சாரத்தை பாதுகாத்து வருவது குடும்ப அமைப்பு. இதற்கு பின்புலமாக இருந்து செயல்படுபவள் பெண். எது நல்லதோ அதை குடும்பத்தில் பின்பற்ற வலியுறுத்த வேண்டும். எது தவறோ அதை செய்யாமல் தடுக்கவும் வேண்டும். இதற்கு குடும்பத்தில் தினசரி, வாரம், மாதம் ஒருமுறை, வருடம் இருமுறை செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. அந்த கடமைகளை சரிவர செய்தால் பழகுவதில் ஒரு ஒழுங்குமுறை ஏற்படும். இந்த வாழ்க்கை முறையைத்தான் ஹிந்துத்துவ வாழ்க்கை முறை, பண்பட்ட வாழ்க்கை முறை என்றும் கூறுகிறோம்.

குடும்பத்தில் தினசரி கொஞ்சம் கொஞ்சமாக நல்ல பழக்கங்கள் தொடர்ந்து பின்பற்றிக்கொண்டு அதையே தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பிறகு இவைகள் ஒரு பழக்கமாகவே குடும்பத்தினரிடம் வந்துவிடும். சில வழிமுறைகளை அடிப்படை மாற்றாமல் காலத்திற்கு ஏற்றபடி மாறுதல்களுடன் அமல்படுத்தலாம்.

இதற்கு பலர் கூடி தேவையான மாற்றங்களுக்கு வழி வகுக்கலாம். நாம் கொடுக்கும் மாற்றங்கள் நம்பிக்கை ஊட்டக் கூடியதாகவும், தன்னிறைவு கொடுக்கக் கூடியதாகவும் இருத்தல் மிகவும் அவசியம்.

நமது குடும்பத்தில் முன்னோர்கள் எதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தார்களோ அதையே நாம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மகாபாரதத்தில் கூட யக்ஷ பிரசன்னத்தில் கேள்விகளுக்கு தர்மபுத்திரர் பதில் அளிக்கும் போது நாம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய தர்மம் எது என்று யக்ஷன் கேட்கிறான். அதற்கு தர்மபுத்திரர் இதிகாசம், புராணம், ஸ்ருதிகள் முதலியவைகளில் கோட்பாடுகள் கால நேரத்தில் வேறுபட்டு இருப்பதால் நமக்கு குழப்பங்கள் ஏற்படுகின்றன. அதனால் தான் குடும்பத்தில் முன்னோர்கள் எந்த வழியை பின்பற்றுகிறார்களோ அதையே நாம் பின்பற்ற வேண்டியது அவசியம் என்று தர்மபுத்திரர் கூறுகிறார்.

ஒருமுறை அமெரிக்கா முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவி பாரத நாட்டிற்கு சுற்றுப்பயணம் வந்தார். பல புகழ் பெற்ற இடங்களை சுற்றிப் பார்த்த பிறகு தனது நாட்டிற்கு திரும்பும் முன்பு, பத்திரிகையாளர்கள் அவரிடம் பாரத நாட்டில் தாங்கள் பார்த்த இடங்களில் தங்களை கவர்ந்த அம்சம் எது என்று கேட்டனர். அப்போது அவர் எனக்கு இந்த நாட்டின் குடும்ப அமைப்பு பிடித்திருக்கிறது என்றார்.

இங்கு குடும்பங்கள் ஒவ்வொன்றும் கோயிலாக உள்ளது. குடும்பத்தில் நுழைந்தால் ஒருவகை அமைதி கிடைக்கின்றது. அமைதியை அளிக்கும் மையமாக குடும்பங்கள் உள்ளன  என்று ஹிலாரி கிளிண்டன் கூறினார்.

நமது குடும்பங்கள் ஆயிரம் காலத்து பயிர் போல தொடர்ந்து இருக்க நாம் நமது பங்கையும் அளிக்க வேண்டும்.