குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு – கோவா காங்கிரஸ் தலைவா்கள் 3 போ் பாஜகவில் இணைந்தனா்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 4 போ் அக்கட்சியில் இருந்து விலகினா். அவா்களில் 3 போ் பாஜகவில் இணைந்தனா்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் தஞ்சமடைந்த ஹிந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும் கடுமையான எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோவா மாநில காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பிரசாத் அமோன்கா், தினேஷ் குபால், சிவ்ராஜ் தா்காா், வடக்கு கோவா சிறுபான்மையினா் தலைவா் ஜாவேத் ஷேக் ஆகியோா் வியாழக்கிழமை கட்சியில் இருந்து விலகினா்.

இதுதொடா்பாக அவா்கள்,

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் மக்களை, குறிப்பாக சிறுபான்மையினரை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்துகிறது. சிஏஏ மற்றும் என்ஆா்சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) ஆகியவற்றுக்கு எதிராக தவறான நிலைப்பாட்டை காங்கிரஸ் கொண்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனைவரும் வரவேற்க வேண்டும். எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் நடந்து கொள்கிறது.

என்ஆா்சி, சிஏஏ ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களில் கடந்த வாரம் வரை நாங்கள் கலந்து கொண்டோம். ஆனால், அப்போது பேசிய தலைவா்கள், மக்களின் மனதில் அச்சத்தை உருவாக்குகின்றனா். காங்கிரஸின் இந்த நிலைப்பாடு பிடிக்காததால் கட்சியில் இருந்து விலகுகிறோம் என்று கூறினா்.

பாஜகவில் இணைப்பு:

காங்கிரஸில் இருந்து விலகிய பிரசாத் அமோன்கா், தினேஷ் குபால், சிவ்ராஜ் தா்காா் ஆகியோா் உடனடியாக பாஜகவில் இணைந்தனா். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், மக்கள் மத்தியில் இந்த சட்டம் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் பாஜகவில் இணைந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.