குடிசைவாசி மனமும் வீடும் காவி மயம் காவி மணம்

தமிழ்ப் புத்தாண்டு அன்று சென்னையில் சேவாபாரதி அமைப்பின் மூலம் 58 துறவிகள் 127 இடங்களில் 4041 வீடுகளில் விளக்கேற்றி வைத்தனர். மக்கள் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி ஆசீர்வாதம் வேண்டினர். துறவிகள் அவர்களுக்கு விபுதி, குங்குமம், சாமி பட விநியோகம் செய்தனர்.

தமிழ்ப் புத்தாண்டு தினம். ஹிந்து துறவிகளை ஏழை, எளிய, பின்தங்கிய மக்கள் வாழும் பகுதிகளுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று சேவாபாரதி அமைப்பினர் கூறியிருந்தார்கள்.  இதனால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை என்று தீர்மானமாக இருந்தேன்.  விருப்பமே இல்லை இவர்களை அழைத்து போக.  இருந்தாலும், போய் பார்ப்போம் என்று மற்ற சமூக ஆர்வலர்களோடு சென்றோம்.  குடிசைப் பகுதிகளுக்கு சென்று பேசியபோது அவர்களால் நம்பவே முடியவில்லை.  எங்கள் பகுதிக்கா, ‘எங்கள் வீட்டுக்கா, வீட்டுக்கு வருவாரா, வீட்டுக்குள்ளேயே வருவாரா என்று ஆச்சரியப்பட்டு போனார்கள் மக்கள்.    இவ்வளவு ஆதரவு தருவார்களா, இவ்வளவு ஏங்குகிறார்களா என்று ஆச்சரியப்பட்டு போனோம்.  இந்த உணர்வுகள் சற்று நம்பிக்கை தரவே, தொடர்ந்துதான் பார்ப்போம் என்று துறவியை அழைத்துக்கொண்டு சென்றோம்.  ஒரு அன்பர் எங்கள் வீட்டில்தான் காலை உணவு என்று பிடிவாதம் செய்தார்.  இட்லி, பொங்கல், சட்னி, சாம்பார், காபி என்று தடபுடல் ஏற்பாடு செய்தார்.  நான் சொன்னேன், இட்லியும் டீயும் போதும் என்று.  வந்தவர், ஒரு இட்லியும், ஒரு கோப்பை டீயும் எடுத்துக்கொண்டார்.  அப்போதுதான் ஒரு துறவியின் உணவு முறை, பசி எல்லாம் எங்களுக்கும் தெரிந்தது.  அவர் பசிக்கு சாப்பிடுகிறவர். நாம் ருசிக்கு சாப்பிடுகிறோம் என்று புரிந்தது.  உடலோடு உயிரை ஒட்டி வைத்திருக்க அவர் உண்டார்.

அங்கிருந்து புறப்பட்டு நொச்சிக்குப்பம் பகுதிக்கு சென்றோம்.  முன்பே அறிவித்திருந்ததால், பெண்கள் சிறப்பாக வரவேற்றார்கள்.  தலைமை ஏற்று வரவேற்ற பெண்ணின் கணவர் பெரிதாக நம்பிக்கையில்லாத கிறிஸ்தவர்.  ஆனால், அந்த பெண் ஹிந்து.  வரவேற்று, பூஜை அறையை காண்பித்தார்.  பூஜை முறைகள், விளக்கு எப்படி ஏற்றவேண்டும், சாமி படங்களை தொங்க விடக்கூடாது, அடியில் ஆதாரம் இருக்கவேண்டும் என்றெல்லாம் விளக்கினார்.  விளக்கு ஏற்றும்போது குலதெய்வத்தை நினைத்து வணங்கி ஏற்றவேண்டும், அதில் மீண்டும் ஊதுபத்தி ஏற்றுதல், சூடம் ஏற்றுதல் செய்யக்கூடாது என்று விளக்கினார்.  மனமார ஆசிகள் வழங்கினார்.

ஊர்த் தலைவரான பெண்மணி கடற்கரையோரம் தானே சப்தகன்னிகைகள் கோவிலை நிறுவி, பூஜை செய்து வருகிறார்.  அந்த கோவிலுக்கும் துறவி வரவேண்டும் என்று அவர் அன்புடன் நிர்பந்திக்கவே, ‘நீ அழைத்தால் எந்த கோவிலுக்கும் வருவேன் தாயே’ என்றார்.  கோவிலுக்கு சென்றதுதான் தாமதம்,  திறந்த வெளியாக இருக்கவே, பலர் பார்த்துவிட்டனர்.  திபுதிபுவென கூட்டம்.  பெண்களும், ஆண்களும் ஆளாளுக்கு திருநீறு கொடுங்கள், சாமி படம் கொடுங்கள் என்று மொய்த்து எடுத்துவிட்டார்கள்.  கோவிலுக்கு வெளியே தரை கொதிக்கிறது.  மீனவ சமுதாயத்தினரும், நாங்களும் செருப்பு போட்டுக்கொண்டு நிற்கிறோம்.  அப்போதுதான் துறவி பாதரக்ஷை அணியவில்லை என்று என்பதை கவனித்தோம்.  சூடு அவரை பாதிக்கவே இல்லை.  அவர் அதை உணர்ந்ததாகவும் தெரியவில்லை.

வீட்டுக்காரர் குடிக்கிறார், மகனுக்கு திருமணம் தள்ளி போகிறது, மகன் குடிக்கிறான், மருமகள் கோபித்துக்கொண்டு போய்விட்டாள், மகளுக்கு கால் சரியில்லை என்று எல்லார் வீட்டிலும் ஏதோ ஒரு குறையை இறைவன் விதிப்படி வைத்துள்ளான்.  உங்களுக்காக இறைவனிடம் வேண்டுகிறேன்.  மேற்கொண்டு எந்த பாவமும் செய்யாமல் புண்ணியம் செய்யுங்கள் என்று கூறி ஆசீர்வதித்தார்.

ஒரு வழியாக அவரை மீட்டு, வாகனத்தில் ஏற்றி, அடுத்த பகுதிக்கு கொண்டு சென்றோம்.  அதற்கே ஒரு மணி ஆகிவிட்டது.  எங்களுக்கோ பசி கொல்கிறது. தொண்டையை தாகம் வரட்டுகிறது.  துறவியோ உற்சாகமாக இருக்கிறார்.  ‘எங்கள் குருநாதர் கற்று தந்ததை, நாங்கள் அனுபவித்த விஷயங்களை மக்களுக்கு நேரடியாக கற்று தர எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தீர்கள் நீங்கள்’ என்று நம்மை பார்த்து அடக்கத்துடன் கூறினார். இதென்னடா வம்பா போச்சு, இவருக்கு நாம் எப்படி வாய்ப்பு வழங்க முடியும், இவர் வந்தது நம் பாக்கியமல்லாவா என்று உரிமையுடன் மறுத்து கூறி அடுத்த பகுதியில் உள்ள வீட்டுக்கு நுழைந்தோம்.

முதலில் சென்ற பகுதி மீனவர் பகுதி.  இப்போது செல்வது உற்சவ மூர்த்திக்கு தோள்கொடுக்கும் ஸ்ரீபாதம் தாங்கும் குடும்பத்தினர்.  முன்பே சொல்லியிருந்தாலும், இரவு இரண்டு மணிக்கு சேவை முடித்துவிட்டு படுத்திருந்தனர்.  வந்துவிட்டோம் என்றதும், அரக்கபரக்க எழுந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.  வழியெங்கும் தடபுடலாக வரவேற்பு ஏற்பாடு கூடாது என்று கூறியிருந்தோம்.  தேர்தல் நேரமாதலால், போலீஸ் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்று தெளிவாக இருந்தோம்.  அதனால், மக்களுக்கும் இன்னலில்லை.

இங்கும் சென்று பூஜா முறைகள் எல்லாம் விளக்கினார்.  சாப்பிடாம போறீங்களே சாமி என்று வருத்தப்பட்டார்கள்.  சென்றிருந்த பகுதியில், நாங்கள் சென்ற வீட்டுக்கும் அருகில் இருந்த கோவில்காரர்களுக்கும் பழைய மனஸ்தாபம்.  இந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும் புறப்பட்டோம்.  உடனே வெளியே இருந்த கோவில்காரர்கள், எங்கள் ஊருக்குள் வந்துவிட்டு கோவிலுக்கு வராமல் போனால் என்ன அர்த்தம், எங்கள் கோவிலுக்கு வாருங்கள் என்று உரிமையோடு அழைத்தார்கள்.  துறவியும், ‘நீங்க பூஜை செய்ங்கம்மா,  ஆத்தா உங்க கிட்ட தினம் பேசறா.  இவளை விட்றாதீங்க.  தினம் பேசுங்க’ என்றார்.  அழுதே விட்டார் அந்த பெண்மணி.  ‘நான் சொன்னா யாரும் நம்ப மாட்டேன்றாங்க சாமி’ என்றார்.  ‘நான் சொல்றேம்மா.  இவங்க கிட்ட தினம் பேசுங்க.  விளக்கு பூஜை செய்ங்க’ என்று உத்தரவு போல பிறப்பித்துவிட்டு பிரசாதங்கள் பெற்று புறப்பட்டார்.

இரண்டரை மணி ஆனதால், இன்னொருவர் வீட்டில் மதிய உணவை முடித்தோம்.  அதுவரை துறவிக்கு உற்சாகம் குறையவே இல்லை.  மனதுக்கு உணவு கிடைத்ததால், வயிறு பசிக்கவில்லை என்றார்.  இருந்தாலும், வெயிலையும், நேரத்தையும் கருத்தில் கொண்டு உணவும், ஓய்வும் நடந்தது.

அருகில் உள்ள கோவில் நடை திறந்ததும், சுத்தப்படுத்திக்கொண்டு அழைத்து சென்றோம்.  பலர் அவரிடம் விபூதியும், குங்குமமும் இட்டுக்கொண்டனர்.  செல்லுமிடமெல்லாம் மக்கள் சட்டென்று குவிந்துகொண்டு அவரிடம் அருளாசி பெற்றனர்.  அருகிலுள்ள சித்தர் பீடங்களுக்கு அழைத்து சென்றோம்.  அங்குள்ளவர்களை மிகவும் தெரிந்தவர் போல விசாரித்தார்.  பின் சிறிது நேரம் தியானம் செய்தார்.  புறப்பட்டார்.

எப்படி இருக்குமோ, என்று தெரியாமல் ஒரு தயக்கத்துடன் துவங்கிய துறவியர் யாத்திரை பெரும் நம்பிக்கையுடன் முடிந்தது.  மக்கள் ஹிந்து மதத்தை அரவணைக்க, ஒன்றுபட, துதி செய்ய,  கோவில் செல்ல மிகுந்த முனைப்புடன் இருக்கிறார்கள் என்று புரிந்தது.  விவரம் அறிந்தவர்கள் சொல்லித் தந்தால் ஏற்கிறார்கள்.  வீட்டுக்கு வந்தால் விருந்தோம்பல் செய்கிறார்கள்.  மீனவர்கள், கோவில்காரர்கள், மற்ற ஜாதிக்காரர்கள் என்று பேதமே இல்லாமல் எல்லோரும் அன்புடன் நடத்துகிறார்கள்.  நாம்தான் இவர்கள் வீடுகளுக்கு செல்லாததால் மற்றமதத்தினர் வருகிறார்கள்.  மிக சிறிய அளவு முயற்சி செய்தால் போதும்.  இறைவன் போல நாம் ஒரு அடி எடுத்து வைக்க, அவர்கள் பத்து அடி எடுத்து வைத்து நம்மை நோக்கி நகர்வார்கள் என்று புரிந்தது.  துறவியர் யாத்திரை ஏற்பாடு செய்த சேவாபாரதி அமைப்பினர் மக்கள் தெரி
வித்த தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க எங்களால் ஆனவற்றை செய்கிறோம் என்று நம்பிக்கை அளித்தார்கள்.

ஏழை, எளிய மக்களுக்கு பெரும் உபகாரம் செய்ய போகிறோம் என்று எண்ணி புறப்பட்ட நாங்கள், இன்னும் உழைக்க வேண்டும் என்ற பெரும் படிப்பினையுடன் நாளை நிறைவு செய்தோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *