கீழடி அகழாய்வுக்கு, தேசிய அளவில் அங்கீகாரம் பெறுவதற்காக, தமிழக தொல்லியல் துறை அமைச்சர், பாண்டியராஜன், டில்லி சென்றுள்ளார்.
தமிழகத்தில், கொற்கை, பூம்புகார், அழகன்குளம், ஆதிச்சநல்லுார் உள்ளிட்ட இடங்களில், சங்ககால தமிழர்களின் வாழ்வியல் சான்றுகள் உள்ளதாக, தொல்லியல் துறை ஆய்வுகளில் தெரியவந்தது.மத்திய தொல்லியல் துறையும், அதைத்தொடர்ந்து, தமிழக தொல்லியல் துறையும், சமீபத்தில், அகழாய்வு செய்த இடம், சிவகங்கை மாவட்டம் கீழடி. அருங்காட்சியகம். இங்கு, கி.மு., 6ம் நுாற்றாண்டின் வாழ்வியல் சான்றுகளும், கட்டட சான்றுகளும் கிடைத்துள்ளன. இவற்றை, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றவும், அங்கு அருங்காட்சியகம் அமைக்கவும், தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தமிழக தொல்லியல் துறை அமைச்சர், பாண்டிய ராஜன், டில்லி சென்றுள்ளார். டில்லியில் உள்ள, ‘யுனஸ்கோ’ அரங்கில், இன்றும், நாளையும்(செப்., 23, 24) நடக்கும், பன்னாட்டு திருக்குறள் மாநாட்டை துவக்கி வைக்கிறார். பின், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் மற்றும் மத்திய கலாச்சாரத் துறை செயலர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மொழிகளுக்கான செயலர் உள்ளிட்டோரை சந்திக்கிறார். அவர்களிடம், தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய அகழாய்வுகளுக்கு, அனுமதி வழங்குவதன் அவசியம் குறித்தும், கீழடியின் தொன்மை குறித்தும் விளக்க உள்ளார்.
மேலும், கீழடியில், சர்வதேச தொல்லியல் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் அனுமதி கோர உள்ளார்.மேலும், சென்னை அருங்காட்சியகத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து, மத்திய கலாசாரத்துறை அமைச்சர், பிரகலாத் சிங் படேலிடம் விளக்க உள்ளார். அமைச்சருடன், தமிழக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் கூடுதல் செயலர், அபூர்வ வர்மா, தொல்லியல் துறை கமிஷனர், உதயச்சந்திரன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.