கீதையில் மனதைப் பறிகொடுத்த உலகம்

பகவத் கீதை என்று முள நிலைத்த உண்மையை,- சனாதன தர்மத்தை, – எடுத்துரைப்பதால் திறந்த மனத்துடன் அணுகும் எல்லோரையும் எளிதில் கவர்கிறது. பாரத நாட்டை அடிமையாக்க வந்த கிழக்கு இந்திய கம்பெனியின் இரண்டாவது பிரதிநிதியான வாரன் ஹேஸ்டிங்ஸ் கீதை காட்டும் உயர்நெறிகளால் கவரப்பட்டு இங்கிலாந்து நாட்டவர்களுக்கு அறிமுகப் படுத்தினார். பின்னர் ஹென்றி டேவிட் தோரோ என்ற சிந்தனையாளர் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டபோது ரால்ப் வால்டோ எமர்சனுக்கு பகவத் கீதை புத்தகத்தைப் பரிசாக அளித்தாராம். அதன் பின்னர் சுவாமி விவேகானந்தரும், ராமதீர்த்தரும், பக்தி வேதாந்த பிரபுபாதா, ஸ்வாமி சின்மயானந்தா போன்றோரின் உரை களாலும் எழுத்துக்களாலும் இன்று அமெரிக்காவின் எல்லா தரப்பினரும் கொண்டாடும் புனித நூலாகியுள்ளது கீதை.

மேற்சொன்னவர்கள்  எல்லாம் தங்களை கீதை எவ்வாறு கவர்ந்தது என்று பற்பல வரிகளில் அழகாக தர்க்க ரீதியாக விளக்குகிறார்கள். மாதிரிக்கு ஒன்று:

முஸ்தபா புலேன்ட் எசெவிட் என்பவர் துருக்கியர். அவர் மேற்படிப்புக்கு இங்கிலாந்து சென்றிருந்த போது, வங்காளி, சமஸ்க்ருதம், கீழை நாட்டு தத்துவங்கள் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். அரசியல்வாதி, அறிஞர், கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று பல் திறன் கொண்டவர். 1974 முதல் 2002 வரை நான்கு முறை துருக்கியின் பிரதமராக இருந்தவர். சைப்ரஸ் நாட்டில் துருக்கிக்கு எதிராக எழுந்த கிளர்ச்சிக்கு தம் நாட்டிலிருந்து சேனையை அனுப்பி விரைவாக அமைதியை ஏற்படுத்தியவர். அவரிடம் ஒரு நிருபர் கேட்டார்:

‘‘உங்களை உறுதியான நடவடிக்கை எடுக்க வைத்தது யார் அல்லது எது?”

எசெவிட் பதில்: ‘‘பகவத் கீதை. உங்கள் நோக்கம் அறமானது என்று நீங்கள் தீர்மானமாக உணர்ந்தால், அநியாயத்தை ஒடுக்க போரிட தயங்க வேண்டியதே இல்லை.” என்ன ஒரு புரிதல் பாருங்கள் !

இறுதியாக ஒன்று: ஏதோ இவர்கள் எல்லாம் பாராட்டித் தான் கீதைக்கு பெருமை என்று நாம் கருதவில்லை. கீதையைப் படித்து உலக அறிஞர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டார்கள் என்பது தான் நம் பார்வை.