கிருஷ்ணாபுரம் குமார சஷ்டி விழா

தென்காசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் குமார சஷ்டி விழா கடந்த 26ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3
வரை ஏழு நாட்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றுஆறாம் நாள். சஷ்டி உட்சவத்தின் மிக முக்கிய தினம். பக்தர்கள் பால் குடங்கள் ஏந்தி பாலமுருகனைத் துதித்து விண்ணை பிளக்கும் அளவிற்கு” வேல் முருகனுக்கு அரோகரா” என்ற பக்தி கோஷங்களால் கும்பிட்டு வினைகள் நீங்க பிரார்த்திக்கும் நாள். இதனை தாரக ஹர குமார சஷ்டி என்றும் அழைக்கிறார்கள்.

முதல் நாளான 27.11.2019 அன்று அங்குள்ள விநாயகர் கோவிலிலிருந்து மயில் மீது மந்தஹாஸப் புன்னகையுடன்
வள்ளி தேவயானை சமேதராக அமர்ந்திருக்கும் முருகன் படங்களை தலைமுறை காத்து வருவோர் கைகளில் ஏந்தி மேல தாளங்கள் முழங்க வேல் வேல் வெற்றி வேல் என்ற கோஷங்களுடன் வீதி வலம் வந்து முருகன் சன்னதி வரை
வந்து பூசைத் தொடக்கம்.

முதல் நாள் திரு விழாவிற்கு இந்த வீதி உலா பிரம்மாண்டமான தொடக்கம். தினசரி வீதி பஜன்களும் உண்டு. சென்னை, செங்கோட்டை உள்ளிட்ட நகரங்களிலிருந்து புகழ் பெற்ற பஜனை விற்பன்னர்கள் இவற்றில் பங்கு பெறுகிறார்கள். அனைத்து நாட்களிலும் காலை மாலை இருவேளைகளும் பாலமுருகனுக்கு அர்ச்சனைகள் பெரிய அளவில் நடத்தப்பட்டு இறுதி நாளில் இந்த லக்ஷர்ச்சனை இனிதே நிறைவு பெறுகிறது. இன்று சஷ்டி நாளில் மாலை மயூர வாகனத்தில் முருகன் வீதி உலா. நாளை வள்ளி கல்யாணம் நூற்றுக் கணக்கானோர் பங்குபெறுதலுடன் நடந்து, நாளை மாலை பூம்பல்லக்கில் பாலசுப்பிரமணிய ஸ்வாமி வீதி உலா. இறுதி நாளில் பைரவ ப்ரீத்தி பூசைகளுடன் நிறைவு பெற்று, கார்திகேயனான முருகனின் படங்கள் முதல் நாள் அன்று எப்படி வீதி உலா வந்தது போல மீண்டும் அதே ரீதியில் சென்று முருகன் படங்கள் விநாயகர் கோவிலில் வைக்கப்படும். விழாவின் ஒரு பகுதியாகன் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது.

பொதுவாகவே இது போன்ற விழாக்களில் அங்கு பிறந்து வளர்ந்து பின்னர் மும்பை, சென்னை போன்ற வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் பக்தியுடன் கலந்து கொள்வர். இவர்களின் வசதிக்காக உறைவிடம், மூன்று வேலைகளும் வயிறு நிறைய உணவு என்று அணைத்து வசதிகளையும் விழா ஏற்பாட்டாளர்கள் குறைவின்றி செய்து
வருவது பாராட்டத்தக்க ஒன்று.

 

 

அவ்வூரிலேயே பிறந்து வளர்ந்தோர் தங்கள் பிள்ளைகளை இவ்விழாவிற்கு அழைத்து வந்து கிராமங்களில் இன்றளவும் பக்தி சிரத்தையுடன் நடைபெறும் குமார சஷ்டி போன்றன் விழாக்களில் கலந்து கொள்ளச் செய்கிறார்கள். அவர்கள் கற்றுன் வரும் கலைகளை அரங்கேறச் செய்கிறார்கள். இங்குள்ள உறவுகள், நண்பர்களுடன் கலந்து பழகி உறவுகளையும், நட்பினையும் புதுப்பித்துக்கொள்கிறார்கள். ஏழு நாட்களும் கோவில் வளாகத்தில், யஜுர் வேத பாராயணம் , பேராசிரியர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவுகள் என்று கிருஷ்ணாபுரம் விழாக்கோலம் பூண்டு வான் பொழியும் மழைக்கு நடுவே பக்தி மழையிலும் நனைந்து கொண்டிருக்கிறது.