கிருஷ்ணர் சிலை கண்டுபிடிப்பு

மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூரில் கெத்மக்தா கிராமத்தில் வசிக்கும் கஜனன் என்பவரது வீட்டு கட்டுமானப் பணியின்போது, பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, சுமார் ஏழு அடி ஆழத்தில், கி.பி 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான பகவான் கிருஷ்ணரின் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. புல்லாங்குழல் வாசிக்கும் அழகிய அந்த ஸ்ரீ கிருஷ்ணரின் சிலையை கட்டுமானத் தொழிலாளர்கள் பத்திரமாக வெளியே எடுத்தனர். புதிய சிலை கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல் வெளியானவுடன், அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களும் பக்தர்களும் அந்த வீட்டிற்கு வந்து கிருஷ்ணருக்கு வழிபாடு நடத்தினர். வரலாற்று அறிஞர் அசோக் சிங் தாக்கூரின் கூற்றுப்படி, கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிருஷ்ணர் சிலை 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது, சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தது. தென்னாட்டு பாணியில் வடிக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. அந்தச் சிலையில், ஸ்ரீ கிருஷ்ணர் தலையில் கரந்தக் கிரீடம் அணிந்துள்ளார், அவரது கையில் புல்லாங்குழல் உள்ளது, சிலையின் இருபுறமும் தட்சிணாத்ய சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது, அக்காலத்தில் இந்த சிலையை யாரோ தெற்கிலிருந்து சந்திராபூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.