ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தோல்வியில் முடிந்தது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்த. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும்’ என அமெரிக்கா சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு உட்பட பல நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சியது.ஆனால் ‘இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; அதில் தலையிட மாட்டோம்’ என அமெரிக்கா உட்பட பல நாடுகள் தெரிவித்தன.
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பும் இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருகிறது.இது பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்சியாக அமைந்தது. இதையடுத்து காஷ்மீர் பற்றி விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்ட வேண்டும் என கூறியது. இது தொடர்பாக கவுன்சிலின் தற்போதைய தலைமை நாடான போலந்து நாட்டின் துாதர் ஜோனா வெரோனெக்காவுக்கு கடிதம் எழுதியது.
இதையடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய கூட்டம் நேற்று காலை துவங்கியது.இதில் கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர் நாடுகளான அமெரிக்கா பிரான்ஸ் பிரிட்டன் ரஷ்யா சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பெல்ஜியம் குவைத் பெரு போலந்து தென் ஆப்ரிக்கா ஜெர்மனி இந்தோனேசியா உள்ளிட்ட நிரந்தர உறுப்பினர் அல்லாத 10 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ஐ.நா. சபை வட்டாரங்கள் ‘ இது ஒரு சாதாரண விவாதம் தான்’ என்றன. இந்நிலையில் ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தோல்வியில் முடிந்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் நேற்றிரவு தெரிவித்தது.