காஷ்மீர்: இதுவே சரியான பாதை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடரும் வன்முறைகள் தொடர்பாக  12 ஆகஸ்டு அன்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகச் சரியான, தீர்மானமான முடிவை எடுத்திருக்கிறது. இங்கு தொடர்ந்து பயங்கரவாதத்தை விசிறி வரும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அதன் மொழியிலேயே பதில் கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறை.

காஷ்மீரி மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு தொடர்ந்து முழு ஆதரவை பாக். அரசு வழங்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவு ஆலோசகர் குறிப்பிட்டிருக்கிறார். அந்நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆகஸ்டு 14), காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி பர்ஹான் வானியின் படத்துடனும் காஷ்மீர வன்முறைக் காட்சிகளுடனும் சிறப்புக் கண்காட்சி ரயிலை பாக். அரசு இயக்கியுள்ளது. இத்தனைக்குப் பிறகும், பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் நம் ஊர் மனித உரிமைவாதிகளை எப்படி வர்ணிப்பது?kashmir-apm

பாகிஸ்தானில் தற்போது உள்நாட்டுப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பலுசிஸ்தான், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள மக்கள் – அவர்களும் இஸ்லாமியர்கள் தான் – பாகிஸ்தான் அரசின் பாரபட்சமான போக்கை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். அங்கு அரச வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதேசமயம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரிலோ, யாரும் கனவிலும் கண்டிராத வகையில், மக்கள் ஜனநாயகக் கட்சி- பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்த அரசு ஆக்கப்பூர்வமான மாற்றங்களை நிகழ்த்திவிட்டால், பிரிவினைவாதிகளின் சொல் எடுபடாமல் போய்விடும் என்பதை பாக். அரசு உணர்ந்திருக்கிறது. எனவே தன், உள்நாட்டு பிரச்னைகளிலிருந்து பாக். மக்களின் கவனத்தை திசை திருப்பவும், ஜம்மு காஷ்மீரில் மக்களாட்சி நிலைகொள்வதைத் தடுக்கவும், எல்லைக்கு அப்பாலிருந்து பிரிவினைவாதிகளைத் தூண்டி விடுவதுடன், அவ்வப்போது ஆயுதங்களுடன் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்கிறது.

ஆனால், முந்தைய அரசுகள் போலல்லாது, மத்திய பாஜக கூட்டணி அரசு பிரிவினைவாதிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான கட்சியாக இருந்த ம.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால் அதன் நிலைப்பாடு நீர்த்துப்போகும் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு ஏமாற்றம். மாறாக, ம.ஜ.க. தேசிய நீரோட்டத்தில் இணைய முற்பட்டிருக்கிறது.

இதைக் குலைக்கவே, காஷ்மீரில் சி.ஆர்பி.எஃப். படையின் வாகன அணிவகுப்பின் மீது 2015 ஆகஸ்டில் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரு வீரர்கள் கொல்லப்பட்டனர். எனினும் அப்போது, முகமது நவேத் என்ற லஷ்கர் எ தொய்பா அமைப்பைச் சார்ந்த பாக். பயங்கரவாதி ஒருவன் உயிருடன் பிடிபட்டான். அவனிடம் கிடைத்த தகவல்கள் மூலமாக பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தொடர்ச்சியாக பாதுகாப்புப் படையினர் தாக்கப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னணியில் இருந்தவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் பயங்கரவாதியான பர்ஹான் வானி எனத் தெரியவந்ததை அடுத்து, அவரை அனந்தநாக் மாவட்டத்தில் அவரது மறைவிடத்திலேயே புகுந்து ராணுவம் சுட்டுக் கொன்றது (ஜூலை 8).

அந்தத் தாக்குதல் மிகவும் சரியான பதிலடி என்பது, அதைத் தொடர்ந்து நடந்துவரும் வன்முறைகளிலிருந்து உறுதியாகிறது. வன்முறையின் மூலாதார வேரான பர்ஹான் வானி கொல்லப்பட்டதை பாகிஸ்தானாலோ, உள்ளூர் பிரிவினைவாதிகளாலோ நம்ப முடியவில்லை. எனவேதான், அரசை எதிர்த்து அமளியைத் துவக்கினர்.

தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் (முழு மாநிலத்திலும் அல்ல) நடைபெற்ற கலவரங்களால் அங்கு ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. இதுவரை 50-க்கு மேற்பட்டோர் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்; 5,000 பேர் காயம் அடைந்துள்ளனர். அதேசமயம், வன்முறையாளர்களிடம் சிக்கி 4,500 வீரர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் தான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்று ம.பி.யில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜனநாயகம், காஷ்மீரியம் (காஷ்மீர் கலாசார மதிப்பீடுகள்) ஆகியவற்றின் அடைப்படையில், அடல்பிகாரி வாஜ்பாயின் பாதையில், மத்திய அரசு செயல்படும் என்று அறிவித்தார்.

தவிர, நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. காஷ்மீரில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ம.ஜ.க.- பாஜக ஆட்சி அமைந்ததே காஷ்மீர் வன்முறைக்குக் காரணம் என்றார். அரசியல் லாவணி பாடும் நோக்குடன் அவர் இதைக் குறிப்பிட்டாலும், அது உண்மைதான். இந்த ஆட்சி நல்லாட்சியாகத் தொடரக் கூடாது என்பதில் பயங்கரவாதிகளைவிட காங்கிரஸுக்கு ஆர்வம் அதிகம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

அடுத்து, காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு தில்லியில் கூட்டியது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி தவிர்த்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அதில் எடுக்கப்பட்ட இரு முடிவுகள் முக்கியமானவை.

அதில் மிகவும் முக்கியமானது, பாக். பிரதமரின் புகாரை ஏற்று ஜம்மு காஷ்மீருக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஆய்வுக்கு வர அனுமதி கோரியதற்கு ஏகமனதாகத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு. ஐ.நா. தலையீட்டுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் எதிர்ப்பை பதிவு செய்தன. அதேபோல, இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  இன்றைக்கு நாம் காஷ்மீரைப்பற்றி பேசுகிறோம் என்றால், நாம் ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய 4  பகுதிகளைப் பற்றியும் பேசித்தான் ஆக வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான்.  அரசியல் சாசன அடிப்படையில் காஷ்மீர் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தரமான, அமைதியான தீர்வு காண உறுதி கொண்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது” என்றார்.

இந்த அணுகுமுறை இதுவரை இருந்த அரசுகள் மேற்கொள்ளாததாகும். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பலுசிஸ்தானிலும் பாக். அரசை எதிர்ப்பவர்கள் கொடூரமாக ஒடுக்கப்படுகின்றனர். அவர்கள் வெளிப்படையாகவே இந்தியாவுடன் இணைய விரும்புவதாக பேசத் துவங்கி உள்ளனர். இந்த சமயத்தில், இந்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்திருக்கிறார் பிரதமர். அதுமட்டுமல்ல, இந்திய வெளியுறவு அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களின் தற்போதைய நிலையை அறிந்து அது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் பரிசீலிக்கும் என்றும் மோடி அறிவித்தார்.

தொலைநோக்குத் திட்டத்துடனும், தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசு செயல்பட வேண்டியுள்ளது. அந்த வகையில், மோடி அரசு செல்லும் திசை சரியானதாகவும் கச்சிதமானதாகவும் உள்ளது.