இரண்டு யூனியன் பிரதேசங்களாக, ஜம்மு – காஷ்மீர் பிரிக்கப்பட்டதை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி, தாக்கல் செய்த மனு:ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, மறுசீரமைப்பு சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றியது. அரசியலமைப்பு சட்டத்தில், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. தற்போது, ஜம்மு – காஷ்மீரில், ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. மாநில அரசின் ஒப்புதல் இன்றி, மத்திய அரசு மறு சீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.மாநில அரசின் ஒப்புதல் இன்றி, யூனியன் பிரதேசங்களாக மாற்ற, மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் நடவடிக்கை, கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணானது.எனவே, இரண்டு யூனியன் பிரதேசங்களாக, ஜம்மு – காஷ்மீரை பிரித்த, மறுசீரமைப்பு சட்டம் செல்லாது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.சக்திவேல், ”மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிட, மத்திய அரசை அனுமதித்தால், மாநிலங்களே இல்லாமல் போகவும் வாய்ப்பு உள்ளது,” என்றார்.இதையடுத்து, மனு விசாரணைக்கு ஏற்புடையது தானா என்பது குறித்து, உத்தரவு பிறப்பிப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்வழக்கில், நீதிபதிகள், நேற்று பிறப்பித்த உத்தரவு:சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு ரத்து மற்றும் மறுசீரமைப்பு சட்டம், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிக்கு மட்டுமே பொருந்தும். மனுதாரர், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ல.சிறப்பு பிரிவு ரத்து மற்றும் மறுசீரமைப்பு சட்டத்தால் பாதிக்கப்படுபவர் யாராக இருந்தாலும், அவர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.இதேபோன்று, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும், அரசியலமைப்பு சட்ட அமர்வு முன் பரிசீலனையில் இருப்பதாகவும், எங்கள் கவனத்துக்கு வந்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்க, பதிவுத் துறை ஆட்சேபனை எழுப்பியது சரி தான். மனு, நிராகரிக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.