கடந்த ஆக.,5ம் தேதி, ஜம்மு – காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கி, சிறப்பு மாநில அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் கலவரம் எதுவும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரிவினைவாத இயக்க தலைவர்கள் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
காஷ்மீரில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதால், முதல்கட்டமாக சில பகுதிகளில் தகவல் தொடர்பு தொடங்கப்பட்டுள்ளது. வீட்டுகாவலில் உள்ள தலைவர்களில் சிலரை விடுவிக்கும் நடவடிக்கையை காஷ்மீர் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, காஷ்மீர் அரசு முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., யவார் மிர், காஷ்மீர் மாநில காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான நூர் முகமது, மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோனுக்கு நெருக்கமாக இருக்கும் முக்கிய தலைவரான சோயப் லோன் ஆகிய மூன்று தலைவர்களை வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.