காவிரி நதிநீர் பங்கீடு: சீராகிட

காவிரி நதிநீர் பங்கீடு: சீராகிட

அரை நூற்றாண்டுக்கு முன்பு இருந்த

அத்தனை நீர்நிலைகளும் வர அவசரச் சட்டம்!

இன்றைய காவிரிப் பிரச்சனைக்கு 1. உடனடித்தீர்வு, 2. குறுகிய காலத் தீர்வு, 3. நிரந்தரத் தீர்வு ஆகிய மூன்று விதமான தீர்வுகளைக் காண்போம்.

உடனடித்தீர்வு

கண்ணகி நீதி கேட்டுப் போராடினாள், வென்றாள். உடனடியாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் நீதி, நியாயத்திற்காக வாதாட,

அ. ராஜகோபால்,ராமன் போன்ற  நேர்மையான, திறமையான, பாரம்பரியமிக்க, தேசபக்தி மிக்க வழக்கறிஞர்கள் அனைத்துக் கட்சிகளின் சார்பாக நியமிக்கப்படவேண்டும்.

குறுகிய காலத் தீர்வு

கர்நாடகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் மரியாதைக்குரிய ராமக்கிருஷ்ண ஹெக்டே அவர்கள் முதல்வராக இருந்தார். அப்போது மிகக் கடுமையான வறட்சி ஏற்பட்டது. ஆடுமாடுகள் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இறந்து கொண்டிருந்த காலகட்டம், மரியாதைக்குரிய ராமக்கிருஷ்ண ஹெக்டே அவர்கள் கர்நாடக மாநிலம் முழுக்க ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட ஆட்சித் தலைவர், அரசு அதிகாரிகள், வேளாண் துறை வல்லுநர்கள், விவசாயிகள், விவசாயக் கூலி வேலை செய்பவர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடினார்.

கூலித் தொழிலாளிகளும் விவசாயிகளும் படும் துயர்கண்டு கூட்டத்திலேயே அவர் கண்ணீர் விட்டு அழுதார். ஒருசில மாவட்டங்கள் சுற்றுப்பயணம் செய்தவுடன் அவருக்குத் தெளிவு பிறந்தது.

கர்நாடகத்தில் அப்போது முக்கியப் பயிர்களாக நெல்லும் கரும்பும் மட்டுமே இருந்து வந்தன. அதற்கு மாற்றுப் பயிர்களாக மண்வளத்திற்கு ஏற்றவாறு வேளாண்துறை வல்லுநர்களின் அறிவுரையின்படி மக்காச் சோளம், நாட்டுச் சோளம், கம்பு, கேழ்வரகு, ராகி, சூரியகாந்தி போன்ற நீர் மிகக் குறைவாகத் தேவைப்படும் பயிர்வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

எங்கு முழுமையான, எதிர்பார்ப்பு இல்லாத தாயன்பு இருக்கிறதோ, அங்கு நல்லனவே நிகழும் என்று தனது வாழ்க்கையில் நிரூபித்த மாமனிதர் ராமக்ருஷ்ண ஹெக்டே.

கர்நாடகாவில் – (1967 என்ற வருடத்தை ஏன் நாம் சொல்கிறோம் என்று அரசியல்வாதிகளுக்குப் புரியும்) 1967 – லிருந்து இந்த 50 ஆண்டுகளில் விவசாய நிலப்பகுதிகள் 2 லிருந்து 2.5 மடங்கு உயர்ந்துள்ளது. குளம், குட்டை, ஏரி, கண்மாய், சிறு ஆறுகள், நீர் நிலைகளில் நீரைத் தேக்கி வைக்கும் வசதி இரண்டு அல்லது 3 மடங்கு உயர்ந்துள்ளது.

நமது தமிழகத்திலோ நடிகர் வடிவேலு சினிமாவில் சொல்வது போல 1967-லிருந்து கடந்த ஐம்பது ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50% குளம், ஏரி, குட்டைகளைக் காணவில்லை.

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் ஆங்காங்கே நிறுவப்படவேண்டும். விவசாயத்தின் நீர்த்தேவை தீர்ந்தால் மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

இத்தகைய குறுகிய காலத் தீர்வு நடைமுறைக்கு வந்தால் நீர்ப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

பிரச்சனை புரிந்தால் மட்டுமே அதற்கு தீர்வு சொல்லமுடியும்.

நிரந்தரத் தீர்வு

ஆகவே போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் 1967 – ல் குளம், குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகள் எந்தப் பரப்பளவில் இருந்தனவோ, அவை அனைத்தையும் கையகப்படுத்த அவசரசட்டம் இயற்ற வேண்டும்.

தமிழன் பொறியில் விஷயங்களில் மிகுந்த அறிவும் ஞானமும் உள்ளவன். தமிழகம் முழுவதும் குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளை ஆழப்படுத்த, அகலப்படுத்த நவீன முறையில் பல திட்டங்கள் ஈஷா யோகா மையம் போன்ற அறிவுஜீவிகளிடம் தயார் நிலையில் உள்ளன. அவையும், சமுதாய ஃபவுண்டேஷன் போன்ற அமைப்புகளும் இவ்விஷயத்தில் வழிகாட்ட, முழுமையான ஒத்துழைப்பு தர தயாராக உள்ளனர்.

ஆகவே, உடனடியாக தமிழக முதல்வர் விவசாயம் பாதிக்கப்பட்ட எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கூட்டங்களில் பங்கேற்கவேண்டும். அந்தக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள், வேளாண்துறை வல்லுநர்கள், விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளிகள் ஆகிய அனைவரும் பங்கேற்க வேண்டும். இஸ்ரேல் நாட்டு விவசாய மையம் நல்ல முறையில் தழிழகத்தில் திண்டுக்கல் அருகே இயங்கி வருகிறது. முதல்வர் தன் சுற்றுப்பயணத்திற்கு முன்பு அவர்களைக் கொண்டு மாவட்ட வாரியாக மண்பரிசோதனை, நீர் பரிசோதனை, விதைப் பரிசோதனை, உரப்பரிசோதனை செய்யவேண்டும்.