காளையார்கோவில் அருகே குருவி கட்டிய கூட்டை பாதுகாக்கும் கிராமத்தினர்ஒரு மாதமாக இருளில் நடமாடுகிறார்கள்

காளையார்கோவில் அருகே சின்னஞ்சிறு குருவி கட்டிய கூடு கலைந்துவிடாமல் இருக்க ஒட்டுமொத்த கிராமத்தினர் அதற்கு உதவி உள்ளனர். இதனால் ஒரு மாதமாக அவர்கள் இருளில் நடக்க வேண்டிய நிலை தொடர்ந்து வருகிறது.

பறவைகள் என்றாலே மனம் புத்துணர்வு அடைந்து விடும். அதிலும் சிட்டுக்குருவி மனிதனை தேடி வந்து உறவாடும். வீடுகளுக்குள் புகுந்து தனக்கும் ஓர் கூடு கட்டி சொந்தம் கொண்டாடும்.

சிட்டுக்குருவி மட்டுமல்ல, தற்போது பல்வேறு பறவையினங்கள் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருவது வேதனை தருவதாகும். இந்த குருவிகளை பாதுகாக்க நடவடிக்கைகள் இருந்தாலும், அவற்றை முழுவதுமாக அழிவில் இருந்து பாதுகாக்க முடியவில்லை.

வாகன இரைச்சல், புகை என்று பல்வேறு வடிவங்களில் சுற்றுச்சூழல் சீர்கெடுவதால் பறவைகள் மனிதர்களை தேடி வருவது இல்லை. ‘கெட்டதிலும் ஓர் நன்மை இருக்கிறது’ என்பது போல் கொரோனா ஊரடங்கானது, வாகன இரைச்சலுக்கு சில மாதங்களாக விடை கொடுத்துள்ளது. அதன் விளைவு, மீண்டும் பறவைகள் மனிதனை நாடி வந்துள்ளன. அதற்கு இந்த ஓர் நிகழ்வே சாட்சி.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தை அடுத்தது பொத்தக்குடி குக்கிராமம். 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு சில தெருக்கள் உள்ளன. தெருக்களில் இரவு வெளிச்சத்துக்கு ஆங்காங்கே மின்கம்பங்களில் விளக்குகள் உள்ளன. அந்த மின்விளக்குகளை ஒளிரவிடும் சுவிட்ச், அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் பொருத்தி இருந்த பெட்டியின் உள்ளே உள்ளது. மாலையில் சுவிட்ச் போடுவார்கள். விடிந்ததும் ‘ஆப்’ செய்துவிடுவார்கள்.

கடந்த ஒரு மாதமாக யாரும் சுவிட்ச் போடுவதில்லை. ஏன், இப்படி…?

சுவிட்ச் அமைந்துள்ள பெட்டிக்குள் தஞ்சம் அடைந்திருந்தது, சின்னஞ்சிறு குருவி. அந்த பெட்டிக்குள் முதலில் விருந்தினர் போல் சென்று வந்த அந்த குருவி, அதற்குள் கூட்டினை கட்டத் தொடங்கியதும் அந்த கிராமத்தாரின் பார்வையில் பட்டது. கூட்டை யாரும் தொடவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட அந்த குருவி, அதில் முட்டைகள் இட்டது.

ஒருகட்டத்தில் கூடு சுவிட்சை மறைத்தது. கூட்டை கலைத்தால் முட்டைகள் உடைந்து விடும். குருவியும் அச்சத்தில் பறந்துவிடும் என மனிதாபிமான எண்ணம் கொண்ட கிராம மக்கள் நினைத்தனர். நாம் இருளில் நடந்தாலும் பரவாயில்லை; கூட்டில் யார் கையும் பட்டுவிடக்கூடாது என முடிவு செய்தனர். இதையடுத்து சுவிட்ச் போடுவதை நிறுத்தினர். தெருவிளக்குகள் ஒளிர்வதையும் நிறுத்தினர். நாட்களும் நகர்ந்தன.

தற்போது அந்த குருவி அடைகாத்த முட்டைகள் பொரித்து, 2 குஞ்சுகள் வந்துள்ளன. இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. அந்த கிராமத்து மக்களின் செயலுக்கு பாராட்டும், வாழ்த்தும் குவிகின்றன.

இதற்கு பொத்தக்குடி கிராமத்தினர் கூறுவது என்ன?

குருவியினம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகிறது. அறிவியல் வளர்ச்சி, அடுக்குமாடி குடியிருப்புகளால் குருவிகள் வசிக்க இடமின்றி தவிக்கின்றன. செல்போன் டவரில் இருந்து வரும் கதிர் வீச்சுகளால் குருவிகள் இனம் அழிந்து வருவதாக சொல்கிறார்கள். செல்போன் டவர் இல்லாத ஒரு சில கிராமங்களில்தான் சின்னஞ்சிறு குருவி இனத்தை பார்க்க முடிகிறது.

எங்கள் கிராமத்தில் அடைக்கலம் புகுந்த குருவியை பாதுகாக்க அனைவரும் முடிவு எடுத்தோம். அதன்படி கடந்த 30 நாட்களுக்கும் மேலாக குருவி கூட்டை பாதுகாத்து வருகிறோம். இந்த கூட்டில் குருவிகள் 3 முட்டையிட்டு அதில் 2 குஞ்சுகள் தற்போது பொரித்துள்ளன. இந்த குஞ்சுகள் பறக்கும் வரை இந்த கூட்டை பராமரிக்க முடிவு செய்துள்ளோம். அதுவரை எத்தனை நாட்கள் ஆனாலும், நாங்கள் காத்திருக்க தயாராக உள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *