கொரோன காலம் நமக்கு பல படிப்பினைகளை வழங்கியுள்ளது. பலநூறு கோடிகளை குவித்து வைத்துக்கொண்டு லாப நட்ட கணக்குகளை கையாளும் சில பெரும் பணக்காரர்களிடம் இல்லாத பெருந்தன்மை அன்றாட வாழ்வுக்கே அல்லல் படும் சாமான்யர்களிடம் வெளிப்படுகின்றபோது அந்த பண்புக்கு மதிப்பு கூடுகிறது .
மதுரையில் யாசகம் பெற்றுவரும் பால்பாண்டி பத்தாயிரம் வீதம் ஒன்பது முறை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தது நாம் அறிந்ததே. மேலும் தனது மகளின் ஐஏஎஸ் படிப்புக்காக சேர்த்து வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாயை மகளின் பிடிவாதம் காரணமாக வங்கியில் இருந்து எடுத்து தெருவில் பசியால் வாடிய பல நூறு பேருக்கு கொரோனா நிவாரண பொருட்களாக வழங்கிய மதுரை சலூன் கடை மோகன் .
எங்கிருந்தோ முகநூலில் வந்த வேண்டுகோளை ஏற்று தனது சொற்ப வருமானத்தில் இருந்து 18000 ரூபாயை தானமாக்கி சென்னையை சேர்ந்த ஆதரவற்ற பெண்மணிக்கு தையல் இயந்திரம் ஒன்றை வாங்கிக்கொடுத்த மதுரையை சேர்ந்த சைக்கிளில் டீ விற்கும் 25 வயது இளைஞன் தமிழரசன். இது நம் கண்ணில் தென்பட்டதும் காதில் கேட்டதும் மட்டுமே. வெளிச்சத்திற்கு வராமல் எவ்வளவு என்று தெரியவில்லை.
மேலே சொல்லப்பட்ட மூன்று பேருமே பெரும் வசதி படைத்தவர்களோ அல்லது அரசு ஊழியர்களோ அல்ல அத்தணை பேருமே தங்களது மனிதாபிமானத்தை கருணையை வெளிப்படுத்தியுள்ளனர். உதவி செய்ய பெரும் பணக்காரர்களாகவோ அல்லது வசதி படைத்தவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதல்ல, தேவையானது அடுத்தவர்களுக்கு உதவும் மனம் மட்டுமே. என்பதை இந்த சாமாண்யார் மூவரும் நிரூபித்துள்ளனர்