காலனி ஆதிக்கத்தை ஆதரிக்கும் சிலர்

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “ஜனசங்கத் தலைவராக இருந்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் கருத்துரை தொகுப்பு நுால் வெளியீட்டு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசிய கருத்தை, அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தி.க தலைவர் வீரமணி மற்றும் தி.மு.கவினர் சிலர் விமர்சித்து வருகின்றனர். ஆளுநர் தெரிவித்த கருத்தை விமர்சிப்பவர்களது எண்ணம் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருக்கிறது. பாரதம் குடியரசு நாடாக அறிவித்த நாளில் இந்திய மக்கள் அனைவருக்கும் ஓட்டுரிமை என்பது நிறைவேற்றப்பட்டது. பாகுபாடு அற்ற இந்தப் புரட்சி வேறு எந்த நாட்டிலும் கிடையாது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பெண்களுக்கும் கறுப்பினத்தினருக்கும் ஓட்டுரிமை மறுக்கப்பட்டே வந்துள்ளது. மகாத்மா காந்தி, நமது நாட்டுக்கு ஏற்ற கொள்கை கம்யூனிசமோ, முதலாளித்துவக் கொள்கையோ அல்ல; ராமராஜ்யமே என அறிவித்தார். நமது துரதிர்ஷ்டம், காங்கிரஸ் ஆட்சியாளர்கள் காந்தியின் கொள்கையை விடுத்து கம்யூனிச சோஷலிச பாதையில் நாட்டை இழுத்துச் சென்றனர். இதற்கு மாற்றாகத்தான், பண்டிட் தீனதயாள் உபாத்யாய சுதேசி கொள்கையை முன்னிறுத்தினார். அதுவே சுயசார்பு கொள்கை. பீட்டர் அல்போன்ஸ், வீரமணி, முத்தரசன் போன்றோர் இன்னமும் தோற்றுப்போன சித்தாந்தத்தை ஆதரித்து தமிழக ஆளுநரை விமர்சித்து வருகின்றனர். தமிழர்கள் இவர்களது மலிவான அரசியலை புரிந்து கொண்டு விட்டனர். இவர்களது வெற்று அரசியல் பேச்சுக்களை தமிழக இளைஞர்கள் புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான கருத்துகளை ஆதரிக்க வேண்டு” என தெரிவித்துள்ளார்.