காலனியவாதிகள், இடதுசாரிகளைப் புறந்தள்ளி தேசியவாதிகளை முதன்மைப்படுத்துவோம்

அயோத்தியா இயக்கம் 1980களின் பிற்பகுதியில் வேகமெடுத்தது. இருதுருவ அரசியல் உக்கிரமடையத் தொடங்கியது. இது 2014ம் ஆண்டு உச்சத்தை எட்டியது என்று உறுதிபட உரைக்கலாம்.

குருஷேத்திரப் போர் யார் யாருக்கு இடையே நடைபெற்றது என்பதை நாம் அறிவோம். இந்த நவீனகால குருஷேத்திரப் போரிலும் தர்மம் தான் வாகை சூடிக் கொண்டே இருக்கிறது. இடதுசாரிகள் குதர்க்கமான வாதங்களை அடுக்குவதில் வல்லவர்கள். “இந்த தேசம் காந்தியின் பூமி, கோட்சேயின் பூமி அல்ல’’ என்று இடதுசாரிகள் வார்த்தை ஜாலத்தை அரங்கேற்றுகின்றனர். காந்திஜி பொதுவானவர். அவர் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக சேர்ந்து வாழ வேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் பாரதம் பிளவுபட வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. இடதுசாரிகள், ஹிந்துத்துவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வாதங்களை முன் வைக்கிறார்கள். ஹிந்துத்துவம் மக்களை பிரிக்கவில்லை. மாறாக மக்களை ஒன்றுபடுத்துகிறது என்பதுதான் உண்மை.

7,000 ஆண்டுக்கும் மேலாக இந்த பாரத பூமி எத்தனையோ மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது. எனினும் ஆணிவேராக உள்ள சனாதன தர்மம் எவ்வித பாதிப்புக்கும் இலக்காகவில்லை.

இத்தருணத்தில் 2 சம்பவங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டபோது அதன் பிரதான லட்சியம் இந்திய விடுதலை என இலக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்ட நாளில் இங்கிலாந்து மகாராணி விக்டோரியா நீடுவாழ்க என கோஷம் எழுப்பினார்கள். எனவே ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸ் என்று எடுத்துக் கொள்ள முடியாது.

டாக்டர் ஹெட்கேவார் மாணவராக இருந்தபோது இங்கிலாந்து மகாராணி முடி சூடிய பவள விழா நடைபெற்றது. இதையொட்டி ஹெட்கேவார் படித்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடத்தில் இனிப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஹெட்கேவாரின் உள்ளத்தில் உறுத்தல் ஏற்பட்டது. இந்த இனிப்பை ஏற்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். முதல் சம்பவம் ஆங்கிலேயர்களுக்கு அனுசரணையானது. இரண்டாவது சம்பவம் ஆங்கிலேயர்களுக்கு எதிரானது.

காங்கிரசில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என இருதரப்பினரும் அங்கம் வகித்து வந்தார்கள். மிதவாதிகள் பிரிட்டிஷாருக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததில்லை. தீவிரவாதிகள் பிரிட்டிஷாரை கடுமையாக எதிர்ப்பதிலிருந்து பின்வாங்கியதில்லை. காந்திஜி பொதுவான நிலைப்பாட்டை மேற்கொண்டார். அவர் மக்களை பெருமளவு ஈர்த்தார். ஆனால் அதே நேரத்தில் ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தியின் அடிச்சுவட்டில் வந்தவர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டபோதிலும் காந்திக்கும் நேருவுக்கும் இடையே பெரிய இடைவெளி உண்டு. பாரதம் சார்ந்த காந்திய கண்ணோட்டத்திலிருந்து நேரு மாறுபட்டவர் என்பதை உணர்ந்து கொண்டால்தான் அரசியல் நிகழ்வுகள் எப்படியெல்லாம் ஏற்ற இறக்கங்களை சந்தித்தன என்பதை புரிந்து கொள்ள முடியும்.

சுவாமி தயானந்தர், சுவாமி விவேகானந்தர், திலகர், அரவிந்தர் போன்றோர் பாரதிய விழுமியங்களை உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப செயல்பட்டனர். வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அன்னிபெசன்ட் ஹிந்துத்துவத்தின் மைய கோட்பாட்டை புரிந்து கொண்டிருந்தார். இதனால்தான் இந்திய தேசியம் என்பதே ஹிந்துத்துவத்தின் மீது கட்டமைக்கப்பட்டதுதான் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

`தி பண்டமென்டல் யூனிட்டி ஆஃப் இந்தியா’ என்ற புத்தகத்தை ஆர்.கே.முகர்ஜி எழுதினார். இதற்கு முன்னுரை எழுதிய பிரிட்டிஷ் அரசியல்வாதி ராம்சே மெக்டெனால்ட், இந்தியா என்பது உடல், ஹிந்து என்பது ஆன்மா என சுருக்கமாகவும், சாலப்பொருத்தமாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இடதுசாரிகள் காலனிய சித்தாந்தத்திலிருந்து விடுபடவே இல்லை. அவர்கள் பாரதத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை. அரவிந்தர், சனாதன தர்மம்தான் பாரதத்தின் ஆணிவேர். இதுவே தேசியத்தை வளர்ந்தோங்க வைக்கிறது என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

பாரதம் தேக்கமடைந்துவிடவில்லை. வற்றாத ஜீவ நதியைப் போல பாரத விழுமியம் பாய்ந்து கொண்டே இருக்கிறது. கிளை நதிகள், இதில் ஆங்காங்கே சங்கமிக்கின்றன. ஹிந்துத்துவம்தான் ஜீவநதி. மற்றவை கிளை நதிகளே. ஜீவநதியின் இயல்புதான் இந்த பாரத பூமியின் இயல்பாக இருக்க முடியும். இதற்கு மாறாக கிளை நதிகளை முதன்மைப்படுத்தக் கூடாது.

துரதிருஷ்டவசமாக அரவிந்தர் கூறியதை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இப்பிரச்சினையில் ஜவஹர்லால் நேரு குழப்பவாதியாகவே நடந்துகொண்டார்.

ஆரியர்கள் படையெடுத்து வந்து பாரதத்தை ஆக்கிரமித்தார்கள் என்ற கட்டுக்கதையை ஆங்கிலேயர்கள் பரப்பினார்கள். இதற்காக சில பொய்யான தரவுகளையும் அவர்களே உருவாக்கி வெளியிட்டனர். இந்த கற்பனையான கட்டமைப்பின் மீதுதான் மார்க்சிஸ்ட்டுகள் இன்று வரை சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இத்தருணத்தில் 1980களின் பிற்பகுதியில் அயோத்தி இயக்கம் வேகமெடுக்கத் தொடங்கியது. மகத்தான திருப்புமுனையை ஏற்படுத்தியது. மக்களிடையே பாரத விழுமியம் சார்ந்த உணர்வை உச்சப்படுத்தியது. 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் பெயரால் உருவாக்கப்பட்டிருந்த கட்டிடம் தகர்க்கப்பட்டது. இதை சாதாரண நிகழ்வாக கடந்து சென்று விட முடியாது. கோபாவேஷம் கொண்ட மக்கள் கட்டிடத்தை இடித்து தள்ளி விட்டார்கள் என்பது மேலோட்டமான பார்வைதான். பன்னெடுங்காலமாக ஹிந்துக்கள் அடக்கப்பட்டிருந்தார்கள், ஒடுக்கப்பட்டிருந்தார்கள், குஜராத் சோமநாதர் ஆலயம் உள்ளிட்ட பல கோயில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. கிலாபத் இயக்கம் முஸ்லிம்களுக்கு ஆதரவான அலையை ஏற்படுத்தியது. இதையெல்லாம் கண்டு கொந்தளித்துக் கொண்டே இருந்த ஹிந்துக்களின் உணர்வு 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி எரிமலையாக வெடித்துச் சிதறியது என்பதுதான் இதன் உள்ளர்த்தம்.

பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற வாதமே தவறானது. காங்கிரசில் தீவிரவாதிகளுக்கும், மிதவாதிகளுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றதைப் போல இப்போதும் உண்மையான தேசியவாதி
களுக்கும், போலி தேசியவாதிகளுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. போலி தேசியவாதிகளும், போலி மதச்சார்பின்மையாளர்களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களே. தங்களது சித்தாந்தம் வெற்றி பெற முடியாமல் போய்விட்டதே என விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிற இடதுசாரிகள், உண்மையான தேசியவாதிகளான ஹிந்துத்துவவாதிகளை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த இடதுசாரிகள், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க தயங்குவதுமில்லை. எல்லாவற்றையும் மதச்சார்பின்மை என்ற கண்ணாடியின் வழியாகவே இடதுசாரிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்களிடம் மனிதநேயம் சார்ந்த பார்வை மங்கிக் கொண்டே வருகிறது என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற வாதத்தை தர்க்கரீதியான நிறை நிலைக்கு கொண்டு செல்வோம். இடதுசாரிகள் எதை எதிர்பார்க்கிறார்கள். சிறுபான்மையினருக்காக பெரும்பான்மையினரை தொல்லைப்படுத்த வேண்டும் என்பதுதான் இடதுசாரிகளின் நிலைப்பாடு என்றால் இதை பாரதம் ஒருபோதும் ஏற்காது. காலனியவாதிகள் கட்டமைத்த கற்பனை கதையையே உண்மை என்று இப்போதும் நம்பிக்கொண்டிருக்கின்ற அல்லது குறைந்தபட்சம் நம்புவதாக நடித்துக் கொண்டிருக்கின்ற இடதுசாரிகள் இதே நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக நின்றால் அவர்கள் தேசிய அரசியலிலிருந்து வெகு விரைவிலேயே தனிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள்.

கட்டுரையாளர்: சமூக அறிவியல் ஆய்வாளர்

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி