திருவண்ணாமலையில் 2,668 அடிஉயர மலை உச்சியில் மகா தீபதரிசனம் (6/12/23) அதிகாலை நிறைவு பெற்றதும், மலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு மகா தீபக் கொப்பரை கொண்டுவரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ. 14-ம் தேதி தொடங்கி, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கடந்த 30-ம் தேதி நிறைவுபெற்றது. 17 நாட்கள் நடைபெற்ற விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த26-ம் தேதி நடைபெற்றது.
மூலவர் சந்நிதி முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும்ஏற்றப்பட்டது. பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றி வைக்க, மகாதீபத்தை பருவத ராஜ குலசமூகத்தினர் ஏற்றி வைத்தனர். ஜோதிப் பிழம்பாக அண்ணாமலையார் காட்சி அளித்தார். 11-வதுநாளாக நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்ட மகா தீப தரிசனம் நேற்று அதிகாலையுடன் (டிச. 7) நிறைவுபெற்றது.
இதையடுத்து, மலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு மகா தீபக் கொப்பரை கொண்டு வரப்பட்டது. பின்னர் கொப்பரைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கொப்பரையில் இருந்து சேகரிக்கப்படும் தீப மை வரும் 27-ம்தேதி நடைபெற உள்ள ஆருத்ராதரிசனத்தின்போது நடராஜருக்கு சாற்றப்படும். தொடர்ந்து, பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் வழங்கப்படும்.