சமுதாயத்திற்கும் சமுதாயத்தை வழிநடத்து வோருக்குமான சாத்விகமான ஒழுக்கத்தினை உருவாக்குவதிலேயே மகாத்மா காந்தி முனைந்தார். தேசத்திலும் உலகெங்கிலும் பேராசையாலும் சுயநலத்தாலும் உந்தப்பட்டு ஆணவத்துடன் நடைபெற்ற வழிதவறிய அரசியலை அவர் முற்றிலுமாக நிராகரித்தார்.
1922ம் ஆண்டு காந்திஜி கைது செய்யப்பட்டதும் நாகபுரி நகர காங்கிரஸ் கிளை நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்று டாக்டர் ஹெட்கேவார், காந்திஜியை ‘புண்ய புருஷர்’ என்று வர்ணித்து உரை நிகழ்த்திய போது காந்திஜியின் சொல் செயல் இரண்டும் ஒன்றாக உள்ளதைக் குறிப்பிட்டார். தன் கருத்துக்களுக்காக அனைத்தையும் துறக்கத் தயாரானவர் காந்திஜி என்றார். காந்திஜியின், புகழ்பாடுவதால் மட்டும் அவரின் பணி நிறைவேறிவிடாது, அவரின் குணநலன்களை வாழ்வில் கடைப்பிடித்தால்தான் அவரின் பணியைப் பூர்த்தி செய்ததாகும் என்றார் டாக்டர் ஹெட்கேவார்.
அன்னியர் ஆட்சியால் உருவான அடிமைப் புத்தி எவ்வளவு கேடானது என காந்திஜி அறிந்திருந்தார். அந்த மனநிலையை உதறி, உயர்ந்த சுதேசி நோக்கத்தில் பாரதம் செயல்பட்டு வளர்ச்சி காணும் விதம் பற்றி அவர் “ஹிந்த் ஸ்வராஜ்” நூலில் சித்தரித்துள்ளார்.
காந்திஜி காலத்திய பிறநாட்டு தலைவர்கள் பாரதத்தை மையமாகக் கொண்ட அவரின் சில கருத்துக்களை ஏற்று அதனை அவரவர் தேச நிர்மாணத்தில் தமதாக்கிக்கொண்டனர்.
காந்திஜி 1936ல் வார்தாவிற்கு அருகில் நடைபெற்ற சங்க முகாமுக்கு வருகை புரிந்தார். அடுத்த நாள் காந்திஜி தங்கியிருந்த இடத்திற்கு டாக்டர் ஹெட்கேவார் சென்றார். அங்கு காந்திஜியை சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார். கேள்வி பதிலும் இடம் பெற்றது. அதன் விவரம் தற்பொழுது அச்சில் வெளிவந்துள்ளது. தேசப்பிரிவினை நடந்த கொடூர தினங்களில் தில்லியில் காந்திஜி தங்கியிருந்த இடத்திற்கு அருகில் நடைபெற்ற ஷாகாவிற்கு காந்திஜி வருகை புரிவதுண்டு. அவரின் கருத்துரையும் ஷாகாவில் இடம்பெற்றது. அதன் தொகுப்பு 1947 டிசம்பர் 27 ‘ஹரிஜன்’ பத்திரிகையில் விவரமாக வெளிவந்துள்ளது. சங்க ஸ்வயம்சேவகர்களின் ஒழுக்கத்தையும் சாதிபேதமற்ற இயல்பான தன்மையையும் பார்த்து காந்திஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் தினமும் காலை ஒரு துதி மூலம் தேசத்தின் மஹாபுருஷர்களை நினைவுகூர்கிற முறை சங்கம் துவங்கிய காலத்திலிருந்தே நிகழ்ந்து வருகிறது. 1963 ல் இது திருத்தி எழுதப்பட்டபோது அதனில் சில புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டன. அச்சமயத்தில் வணக்கத்திற்குரிய காந்திஜி மறைந்துவிட்டிருந்தார். அவருடைய பெயரும் அதில் சேர்க்கப்பட்டது. இன்று அதை ‘ஏகாத்மதா ஸ்தோத்திரம்’ என்கிறோம். சங்க ஸ்வயம்சேவகர்கள் தினமும் காலையில் காந்திஜியின் பெயரை உச்சரித்து முன் சொன்ன அந்த உயர்ந்த நற்பண்புகளை கொண்ட அவரின் வாழ்வை நினைவுகூர்கிறார்கள்.
அவரின் 150 வது பிறந்த தினத்தில் அவரை நினைவுகூர்வதுடன் நாம் அனைவரும் ஓர் உறுதி ஏற்கவேண்டும். அதாவது அவரின் தூய்மை, தியாகம் பொருந்திய ஒளிவுமறைவற்ற வாழ்க்கையையும் சுயசார்பு வாய்ந்த அவரது வாழ்க்கைக் கண்ணோட்டத்தையும் பின்பற்றி பாரதத்தை உலகின் குரு ஆக்குவற்காக நம் வாழ்வையும் கூட அர்ப்பணமும் தியாகமும் நிறைந்ததாக்கிட உறுதி ஏற்போம்.
(மகாத்மா காந்திஜியின் 150வது பிறந்த நாளையொட்டி ஆர்.எஸ்.எஸ். அகில பாரதத் தலைவர் வெளியிட்ட அறிக்கையிலிருந்து)