‘காங்., செய்தது தி.மு.க., மறைத்தது’ பா.ஜ., செய்தி தொடர்பாளர் விமர்சனம்

‘காங்கிரசின் முதல் குடும்பமும், தி.மு.க.,வின் முதல் குடும்பமும் கைகோர்த்து வேண்டுமென்றே உண்மையை மறைத்து, கூட்டு சதி செய்து கச்சத்தீவை தாரை வார்த்துள்ளனர். மொத்தத்தில், காங்., செய்தது; தி.மு.க., அதை மறைத்தது’ என்று, பா.ஜ., சாடியுள்ளது.

டில்லியில் நேற்று பா.ஜ., செய்தி தொடர்பாளர் ெஷஷாத் பூனவாலா கூறியதாவது:
கச்சத்தீவு பிரச்னையை, தி.மு.க., தலைவர்கள் தான் இடைவிடாது கிளப்பி வருகின்றனர். இந்த பிரச்னையில், மொத்தம் மூன்று அம்சங்கள் அடங்கி உள்ளன.

ஒன்று, சதி; இரண்டாவது உண்மையை மறைத்தல்; மூன்றாவது கூட்டுச்சதி.

இந்த மூன்றுமே தற்போது அம்பலமாகியுள்ளது. அதாவது, காங்கிரசின் முதல் குடும்பமும், தி.மு.க.,வின் முதல் குடும்பமும் கைகோர்த்து, வேண்டுமென்றே உண்மையை மறைத்து, கூட்டுச் சதி செய்துள்ளன என்பது, தற்போது வெளிவந்துள்ள ஆவணங்கள் வாயிலாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இரண்டு கட்சிகளும் சேர்ந்து, தாம்பூல தட்டில் வைத்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துள்ளன. நாட்டின் இறையாண்மையிலோ அல்லது பாதுகாப்பிலோ அல்லது ஒருமைபாட்டிலோ மட்டும், இக்கட்சிகள் சமரசம் செய்து கொண்டன என்று கருதி விடக்கூடாது.

தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வையும், அவர்களது வாழ்வாதாரத்தையும், மிகப்பெரிய அபாயத்தில் சிக்க வைத்து, இந்த கட்சிகள் சின்னாபின்னம் ஆக்கியுள்ளன. மொத்தமாக பார்த்தால், காங்கிரஸ் செய்தது; தி.மு.க., அதை மறைத்துள்ளது. இந்த இரு கட்சிகளும் தான் கச்சத்தீவு பிரச்னைக்கு பொறுப்பாளிகள். ஒப்பந்தம் போடும் முன், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியையும், காங்கிரஸ் தன் வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்