காமராஜர் முதல்வராக இருந்தபோது தாம்பரத்தில் ஒரு ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார். செல்லும் வழியில்தான் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் வீடு இருந்தது.
அவரையும் நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லலாமே என்று கருதி அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது அவர் வண்ணாரப்பேட்டை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவரது வீடு ஒரு கூரைவீடு. மழை பெய்தால் ஒழுகும். காமராஜரைப் பார்த்தவுடன் ஜீவா ஆச்சரியப்பட்டுப் போனார்,
‘‘நீ அடிக்கல் நாட்டிய பள்ளிக் கூடத்திற்கு இன்று திறப்பு விழா… உன்னையும் அழைத்துச் செல்லத்தான் வந்தேன்’’ என்றார் காமராஜ்.
‘‘நீங்கள் முன்னால் செல்லுங்கள்… நான் அரை மணி நேரத்துக்குள் வந்து விடுவேன்’’ என்றார் ஜீவா.
சொன்ன மாதிரி அரை மணி நேரம் கழித்து விழாவிற்குச் சென்றார். விழா முடிந்தபிறகு ‘‘நான் கூப்பிட்டவுடன் என்னோடு வந்திருக்கலாமே, என்று ஜீவாவிடம் கேட்டார் காமராஜ்.
‘‘ஐயா, என்னிடம் நல்ல வேஷ்டி ஒன்றுதான் இருந்தது. அதை துவைத்து காயப்போட்டிருந்தேன். அதனால் உங்களுடன் வர இயலாமல் போய்விட்டது’’ என்றார். உடனே கண்கலங்கி விட்டார் காமராஜ்.
ஒரு காலத்தில் எளிமையின் வடிவமாக திகழ்ந்த கம்யூனிஸ்டுகள் இன்று கோடிகளுக்கு அடிமையாகி விட்டார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் செலவுகளுக்காக திமுகவிடம் இருந்து பெற்ற தேர்தல் நன்கொடை ரூ. 25 கோடி. (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 15 கோடியும், மார்க்ஸிஸ்ட் கட்சி 10 கோடியும் பெற்றுள்ளது).
ஏழை பங்காளர்களின் கட்சி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கம்யூனிஸ்டுகள் ஊழல் கட்சியான திமுகவிற்கு வெண்சாமரம் வீசுவது ஏன் என்பது இப்போது புரிகிறது.
கம்யூனிஸ்ட் தலைவர்களின் பித்தலாட்டத்தை புரிந்துகொண்டு, ஏமாளிகளாக இருந்து வரும் அப்பாவி கம்யூனிஸ்ட் தோழர்கள் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நேரமிது. ஜீவா போன்ற தியாகிகளின் ஆன்மா போலி கம்யூனிஸ்டுகளை மன்னிக்காது.