பிகார் தேர்தலில் நிதீஷ் வெற்றி பெற்றவுடன் ஊடகங்கள் ஆஹா, ஓஹோ என புகழ்ந்து ‘அடுத்து நிதீஷ்தான் பிரதமர் வேட்பாளர்’ என்றெல்லாம் ஆர்ப்பரித்தன. ஆனால் அடங்கி, ஒடுங்கி இருந்த லல்லுவுக்கு மீண்டும் கூட்டணி ஆட்சியில் வாய்ப்புக் கிடைத்தவுடன் ஊழல் சாம்ராஜ்யம் மறுபடியும் கொடிகட்டிப் பறக்கத் துவங்கிவிட்டது. சமீபத்தில் கல்வித் துறையில் வெளியான ஊழல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
போன மாதம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம்போல மாநிலத்தில் அதிகமான மார்க்குகள் எடுத்து முதலிடம் பெற்ற ஒரு மாணவியையும் மாணவரையும் டிவி நிருபர் ஒருவர் பேட்டி எடுத்தார். பேட்டியின்போது, ‘பொலிடிகல் சயின்ஸ்’ எது பற்றியது என்ற நிருபரின் கேள்விக்கு அந்த மாணவி சமையல் கலை பற்றியது என்று பதில் அளித்தார். இது நிருபருக்கு அதிர்ச்சியைத் தந்தது. மேலும் மேலும் அந்த மாணவியிடம் கேள்விகள் கேட்டபோது அவள் முதலிடம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த தகவல் நிருபருக்கு புரிந்தது. இந்த செய்தி பரவியதால் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.
தீவிர விசாரணையில், தேர்ச்சி பெற ஒரு கட்டணம், அதிக மதிப்பெண் பெற ஒரு கட்டணம், முதல் மதிப்பெண் பெற தனி கட்டணம் என ரூபாய் 4 லட்சம் முதல் 20 லட்சம் வரை பணம் கைமாறியிருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த முறைகேட்டில் தொடர்புடைய மாநில பள்ளிக் கல்வித் தேர்வு வாரியத் தலைவர், நிதீஷ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 17 பேரை கைது செய்துள்ளனர்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்ற லல்லுவிடம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்த மக்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.