கலி தரும் லெம்மிங்

லெம்மிங் (lemming) பார்ப்பதற்கு அழகாக கொஞ்சம் முயல்குட்டி தோற்றத்துடன் துறு துறுவென்று ஓடிக் கொண்டிருக்கும். முப்பது முதல் 110 கிராம் வரை எடை கொண்டது. ஏழு முதல் 15 சென்டி மீட்டர் நீளத்தில் இருக்கும் லெம்மிங்குகள் ரொம்பவே ஆக்டிவ்.

ஆர்க்டிக் குளிர் பிரதேசம் தான் இவற்றின் பூர்வீகம். இலை, புல் பழங்களின் விதை, கொட்டைகளை கொறித்து சாப்பிடும். கூட்டம் கூட்டமாக வாழும் இவ்விலங்கு குடும்பமாக வாழ்வதில்லை.

லெம்மிங்களிலும் பல வகைகள் உள்ளன. நார்வே லெம்மிங், ப்ரௌன் லெம்மிங் ஆகிய இனங்கள் முக்கியமானவை.

நீண்ட காலத்திற்கு முன்பு லெம்மிங் குறித்து தவறான ஒரு செய்தியை உண்மை என்று நம்பி வந்தார்கள். இந்த விலங்குகள் ‘‘ஒரு குளிர் காலத்தில் வானத்திலிருந்து குதித்து பூமியை அடைந்தவை” என்று ஷிக்லர் என்ற விலங்கியல் அறிஞர் கூறிவந்தார். அதை உண்மையேன்றே பல காலம் நம்பி வந்தனர்.

காரல்லின்யேஸ் போன்ற அறிஞர்கள் இதை மறுத்து இவை குளிர் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவை என்ற கருத்தை முன்வைத்தனர்.

இவை ஏன் கூட்டமாக தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? இவை கூட்டமாக தற்கொலை செய்து கொள்வதில்லை. சில சூழ்நிலைகளில் இவை கூட்டமாக இறந்து மடிகின்றன. அது கூட்டுத் தற்கொலை போல தோன்றுகின்றன. அதாவது பல நேரங்களில் உயிரியல் காரணங்களுக்காகவும், தட்பவெப்ப மாற்றங்களினாலும் இவை இடம் விட்டு இடம் நகர்கின்றன. உணவு தேடி அல்லது எதிரிகளிடம் இருந்து தப்பிக்க இவை கூட்டம் கூட்டமாக இடம் பெயர்கின்றன. நடுவே ஆறுகள், மலைகள், எது வந்தாலும் சரி முன்னேறிக் கொண்டே செல்லும். இவை ஆறுகளை வெற்றிகரமாக நீந்திக் கடந்து விடுகின்றன.

மலை உச்சிக்கு வரும்போது தான் சிக்கல். மலை உச்சி விளிம்புக்கு வந்தவுடன் இவை நகர முடியாமல் நின்றுவிடும். ஆனால் பின்னால் வரும் மற்ற லெம்மிங்குகள் நெருங்குவதால் இவை கீழே தள்ளப்பட்டு விழுந்து இறந்து விடுகின்றன. இப்படி இவை கூட்டமாக விழுந்து இறப்பதை தான் கூட்டு தற்கொலை என்று நீண்ட காலம் நம்பினார்கள்.

கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஓடி  மறைகிற எலி மாதிரி கிலிதரும் இந்த லெம்மிங்குகளை வைத்து நிறைய குறும் படங்கள், டாக்குமெண்டரி படங்கள் வந்துவிட்டன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *