கரோனா தடுப்பூசிக்கும், நாட்டில் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரிப்பதற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என மக்களவையில் எழுத்து பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கரோனா பாதிப்புக்குப்பின் சிலர் திடீர் மரணத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மரணத்துக்கான காரணங்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. கரோனா பாதிப்புக்குப்பின் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரிக்கிறதா என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்று நோயியல் துறை ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியாவில் 18 வயது முதல் 45 வயதினர் இடையே திடீர் மரணத்துக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டன.
நாடு முழுவதும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை 47 மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள் படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஒரு டோஸ் கரோனோ தடுப்பூசி, திடீர் மரணத்துக்கான வாய்ப்பை குறைத்துள்ளது என்றும், இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி திடீர் மரணத்துக்கான வாய்ப்பை மேலும் குறைத்துள்ளது. மதுப் பழக்கம், போதைப் பழக்கம், இறப்புக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு கடுமையான உடல் உழைப்பு போன்ற வாழ்க்கை முறை நடவடிக்கைகளே, திடீர் மரணத்துக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளன.
இவ்வாறு மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.