சித்த புருஷர் என போற்றப்படுபவர் கருவூரார். இவர் சோழ நாட்டிலுள்ள கருவூரில் (தற்போதைய கரூர்) சித்திரை மாதம், அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர். தன் வாழ்நாளில், பல அற்புதங்களை நிகழ்த்திய இவரைப் பற்றி பல அரிய தகவல்களை, அபிதான சிந்தாமணி எனும் நூல் தருகிறது:
கருவூர் சித்தர், கருவூரில் வேதியர் குலத்தில் பிறந்து ஞான நூல்களை ஆராய்ந்து, சைவ மதத்தைக் கடைப்பிடித்து, சிவயோக சித்தி அடைந்தவர். இவரது குல தெய்வம் அம்பாள். ஒருமுறை பழனி முருகனின் குருநாதராக போற்றப்படும், போகர் என்ற சித்தர் திருவாவடுதுறைக்கு வந்த சமயம், கருவூரார் அவரை வணங்கி தம்மை சீடராக ஏற்க வேண்டினார். அதற்கு போகர், நீ வணங்கும் அம்பாளை நாள்தோறும் வழிபட்டு வா. அவள் உனக்கு வழிகாட்டுவாள் என்று வழிபடும் முறைகளைக் கூறி உபதேசித்தார்.
அதன் பின் கருவூரார் அம்பாளை வழிபட்டு வந்தார். குருவின் வாக்கு உண்மையானது. கருவூரார் எல்லாவித ஞானங்களையும் பெற்றார். இவ்வாறு இருக்கையில், அவர் ஜாதி சம்பிரதாயங்களைப் புறக்கணித்தைக் கண்டு ஆவேசமும், வெறுப்பும் கொண்ட வேதியர்கள் சிலர் இவரை பழிதூற்றி, இவரது செயல்களை வெறுத்துப் பேசினர். இதனால், அவர்களுக்கு அறிவூட்டவும், மக்கள் வழிபாடு மூலம் தெய்வத்திடம் தம்மை ஒப்படைக்கவும், அம்பாளை வழிபட வைக்கவும் காலமில்லாத காலத்தில் அடைமழை பெய்ய வைத்தார். ஆற்றில் வெள்ளம் பெருகச் செய்தும் பூட்டி இருந்த கோயில் கதவு திறக்கச் செய்தும் பூதங்கள் தமக்கு குடைபிடித்து வரச் செய்தும் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்.
மரம் பொழிந்த மீன்மழை
கருவூரார் பல கோயில்களுக்குச் சென்று வணங்கி கஜேந்திர மோட்சம் என்னும் தலத்தை அடைந்தார். அங்கு இருந்த முற்றீசரை அழைக்க, அவர் தரிசனம் தந்து என்ன வேண்டும் என்று கேட்டார். கருவூரார் மது வேண்டும் என்று கேட்க முற்றீசர் காளிக்கு கட்டளையிடார், காளி மதுக்குடத்துடன் கருவூரார் முன்னிலையில் பிரசன்னமானார். இவர் காளியிடம் மீன் வேண்டும் என்று கேட்டார், காளி தேவி கோட்டவாதிகளைக் கேட்க, அவர்கள் எங்கு தேடியும் மீன் கிடைக்காததைக் கண்டு கருவூரார் வன்னிமரத்தை நோக்க, உடனே அம்மரம் மீன் மாரி பொழிந்தது.
அடிக்கு, அடி பொன்
கருவூரார் யாத்திரை வழியில் ஒரு முறை விஷ்ணு ஆலயத்தை அடைந்தார். அங்குள்ள பெருமாளைக் கூவி அழைத்தார். பெருமாள் கண்டு (இக்கோயிலில் இனி பூசை நடக்கக்கூடாது) என்று சபித்துவிட்டு, திருக்குற்றாலம் அடைந்தார்.
அங்கு சிவதரிசனம் செய்து, திருவிசைப்பா பாடி, பொதிகையில் எழுந்தருளியிருந்தார். ஒரு முறை, கருவூரார் திருநெல்வேலி நெல்லையப்பர் சன்னிதானத்தில் நின்று நிவேதன காலமென்று அறியாமல் ‘நெல்லையப்பா, நெல்லையப்பா, நெல்லையப்பா’ என மூன்று முறை கூவி அழைத்தும், மறுமொழி வராததால் கடவுள் இங்கில்லை என்று சொல்லி அவ்விடத்தை விட்டு செல்ல அந்த ஆலயத்தில் எருக்கு போன்றவை முளைத்தன. அதைக்கண்ட நெல்லையப்பர் ஓடிவந்து மானூரில் சந்தித்து தரிசனம் தந்து, அடிக்கு ஒரு பொன்னும் கொடுத்து, இவரை திருநெல்வேலிக்கு அழைத்து வந்து காட்சி தந்தார். அதனால், முன்பு முளைத்திருந்த எருக்கு நீங்கி செந்நெல் என்று கூற ஆலயம் செழித்தது. பழைய பிரகாசம் உண்டாயிற்று. அதன்பின் திருவிடைப்புதூர் ஆலயத்தை அடைந்து, இறைவனை அழைக்க, அவர் தன் தலையைச் சாய்த்து கரூவூரார் குரலுக்கு பதிலளித்தார். இன்றளவும் அவ்வூரில் இறைவனது திருஉருவம் சிறிது தலைசாய்ந்த நிலையிலேயே காணப்படுகிறது.
எச்சில் பந்தனம்
கருவூரார், மானூரில் இருந்த நாட்களில் தஞ்சை மன்னன் கட்டிய கோயிலில் சிவ பிரதிஷ்டையில் அஷ்டபந்தனம் பல முறை இளகியது. அதனால், சோழ மன்னன் வருந்திய போது, ஒரு அசரீரி தோன்றி, அது கருவூராரால் பந்தனமாகும்” என்று கூறியது. அச்சமயம் போகர் தன் உருவம் மறைத்து அவ்விடம் வந்திருந்தார். அவர் அச்செய்தியை ஓர் இலையில் எழுதி ஒரு காக்கையின் கழுத்தில் கட்டி கருவூராரை அழைத்தார். கருவூரார் கோவிலினுள் சென்று பந்தனத்தில், தம் தாம்பூல எச்சிலை உமிழ்ந்து அஷ்டபந்தனம் செய்த உடனே பந்தனமாயிற்று.
தாசிக்கும் அருளியவர்
அதன்பின் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். அவ்வூரில் இருந்த அபரஞ்சி என்ற தாசி, கரூவூராரின் தேகப் பொலிவையும், அழகினையும் கண்டு அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று உபசரித்தாள். தனக்கு இருந்த ஞான சம்பந்தமான சந்தேகங்களைச் கேட்டு அபரஞ்சி தெளிவுப் பெற்றாள். கருவூரார் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை சந்தித்து, ரத்தினப் பதக்கத்தைப் பெற்று வந்து, ‘இது உன் சேவைக்கு அரங்கன் சார்பாக நான் தரும் பரிசு’ என்று அளித்து, ‘நீ எப்போது நினைத்தாலும் வருவேன்’ என்று கூறி யாத்திரையைத் தொடர்ந்தார். அபரஞ்சி அந்த ரத்தினப் பதக்கத்தை அணிந்து வெளியே வந்தபோது கோயில் நிர்வாகிகள் அவளை திருடி என்று சந்தேகத்து, காவலிட்டு அவளை விசாரித்தனர். அவள் எனக்கு இதை வேதியர் ஒருவர் அளித்தார் என்று கூறி கருவூராரை நினைக்க அவர் வந்து எனக்கு இதை திருவரங்கப் பெருமாளே கொடுத்தார் என்று கூறி அதற்கு சாட்சியாக பெருமாளை கூவி அழைத்தார். அதை கேட்ட பெருமாளும் ஆகாய வீதியில் தோன்றி சாட்சியளித்தார். உண்மையை உணர்ந்த அந்த ஊரார், கரூவூராரிடமும் அபரஞ்சியிடமும் மன்னிப்புக் கேட்டனர்.
கருவூரில் ஜோதியானார்
பிறகு கருவூரார், கடைசியில் கருவூரை அடைந்தும் இறைபணியில் ஈடுபட்டிருந்தார். அவரது செல்வாக்கையும் புகழையும் கண்டு வெறுத்த சில வேதியர்கள், அவருக்கு பல வகைகளில் துன்பம் விளைவிக்க முயன்றனர். ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு தோல்வியே ஏற்பட்டது. இறுதியில் கருவூராரை கொலை செய்யவும் துணிந்து அவரை துரத்த ஆரம்பித்தனர். கரூவூரார் பயந்தது போல ஓடிச்சென்று, திருஆனிலையப்பர் (பசுபதீஸ்வரர்) கோயிலை அடைந்து சிவபெருமானாய் வீற்றிருக்கும் பசுபதீஸ்வரை நோக்கி, ஆனிலையப்பா என்று கூறி தழுவிக் கொள்ளவே, இறைவன் அவரை ஜோதி வடிமாய் தன்னுள் ஏற்றுக்கொண்டார்.
கருவூரார் ஆயுள் 300 ஆண்டுகள் 42 நாட்கள் என அறியப்படுகிறது. இன்றளவும் கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூராருக்கு தனி சன்னதி உள்ளது. பவுர்ணமி நாளில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள பல பிரபலங்கள் கருவூராரின் பக்தர்கள்.