கருணாநிதி முடமாக்கிய பாடல்
கேரளா, ஆலப்புழாவில், 1855 ஏப்ரல் 4 அன்று பெருமாள் பிள்ளை மற்றும் திருமதி மாடத்தி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாய் பிறந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதியதுதான் தமிழ்த் தாய் வாழ்த்து.
அவர், சைவ சமய ஆன்மிக நூல்களான தேவாரம் மற்றும் திருவாசகம் நன்று படித்து ஆசாரமாக வளர்ந்தவர். மறைமலை அடிகள் அவர்களுக்கு தமிழ் ஆசிரியராக இருந்த நாகப்பட்டினம் நாராயணசாமி என்பவரிடம்தான், இவரும் தமிழ் படித்தார்.
1876ல் பட்டம் பெற்ற பின், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1891ல் வெளிவந்த ‘மனோன்மணியம்” என்ற நாடக இலக்கிய நூலே அவரது அடையாளமானது.
1970ல், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, மனோன்மணியம் பாடல்களின் சில வரிகளை தொகுத்து எடுத்து, “தமிழ் தாய் வாழ்த்து” என்று அறிவித்தார். மனோன்மணியத்தில், அது தமிழ் கடவுளுக்கு வணக்கம் எனப் பொருள்படும்படியாக “தமிழணங்கு” என்று சொல்லப்பட்டது. தமிழ் தாய் என்றோ தமிழ் அன்னை என்றோ எங்கும் குறிப்பிடவில்லை.
அன்றைய தமிழக அரசு, அரசு மற்றும் பொது விழாக்களில், தமிழ் தாய் வாழ்த்து, கர்நாடக சங்கீதம் மோகன ராகம், விழா தொடக்கத்தில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று அறிவித்தது. இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் பிராச்சார பாரதி என்ற அமைப்பின் ஒரு அங்கமான தூர்தர்ஷன் என்று அழைக்கப்படும் தொலைக்காட்சி நிறுவனம் பணியாற்றி வருகிறது. பொதிகை என்ற பெயரில் முன் அழைக்கப்பட்ட அதன் தமிழ் சேவையானது, இப்போது டி.டி -தமிழ் என்று, 19 ஜனவரி 2024 முதல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மத்திய அரசின் வருடாந்திர ‘ஹிந்தி மாதம்’ விழாவின் முடிவில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுனர் கே.என். ரவி பங்கேற்றார். அந்த விழா, தூர்தர்ஷனின் 50வது அண்டு நிறைவு விழாவாகவும் இருந்தது.
ஹிந்தி மாதம் தொடர்பாக, டி.டி-தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில், தமிழக ஆளும் கட்சியினருக்கு உடன்பாடு இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. தமிழக மக்களை, மத்திய அரசு, ஹிந்தி மொழிக்கு எதிராகத் திருப்ப இதை ஒரு சந்தர்ப்பமாகப் பார்த்தார்கள். உண்மை என்னவோ இதற்கு மாற்றாகத்தான் இருக்கிறது.
ஹிந்தி பிரச்சார் சபா நடத்தும் தேர்வில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் அந்த ஆர்வத்தை புரிந்து கொள்ள முடியும். ஆங்கிலமும் ஒரு அந்நிய மொழிதான். அதை எதிர்க்காமல், ஹிந்தியை மட்டும் எதிர்ப்பது அவர்களின் வேடத்தை வெளிப்படுத்துகிறது. மத்திய அரசின் ஒரு ஆட்சி மொழியான ஹிந்தியை கொண்டாடுவதில் என்ன தவறு?