கருணாநிதி மயமாகி வரும் கல்வி: தமிழிசை விமர்சனம்

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பள்ளி பாடப் புத்தகங்களில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு குறித்த பாடம் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகத்தில், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எடுத்த நடவடிக்கைகள் பாடமாக சேர்க்கப்பட்டன. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், உரைநடை பகுதியில், ‘பன்முக கலைஞர்’ என்ற தலைப்பில், கருணாநிதி பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து, எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், பெண் உரிமை சார்ந்த சட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், கருணாநிதி பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இது தொடர்பாக புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது: கருணாநிதி குறித்து 9 மற்றும் 10ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்து தற்போது 8ம் வகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.

பா.ஜ., கல்வியில் ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவியமாக்கப்படுகிறது என்று கூறினார்கள். இன்று தமிழகத்தில் கல்வி கருணாநிதி மயமாக்கப்பட்டு வருகிறது. ஒரு தலைவரைப் பற்றி எத்தனை பாடப் புத்தகங்களில் கொண்டு வருவீர்கள்? எனவே இதற்கு ஒரு வழிகாட்டும் முறைகள் இருக்க வேண்டும். எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி புத்தகங்களில் இடம்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.